Skip to main content

Posts

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 6

  அன்னபூர்ணியின் பொழுதுகள் - 6 சில வார்த்தைகளை கேட்கும்  போதெல்லாம் அன்னபூர்ணி மகிழ்ச்சி அடைகிறாள். விக் ... னேஷ் ... வர்.... என ராகம் போட்டு அழைக்கும் போது சிரித்தாள். இங்க பாருங்க உங்க பேர் கேட்டதும் சிரிக்கறா!  என கூறினேன்.  நான் அழைத்ததை போன்ற ராகத்தில் "ஒரு கிலோ கத்திரிக்காய்!" என பேசினார். அதற்கும் சிரித்தாள் அன்னபூர்ணி. மனோ , அவ உன்னோட குரல் ஏற்ற இறக்கத்தில வர ராகத்துக்கு தான் மகிழ்ச்சி அடைகிறாள். பேருக்கு இல்லை. பேர் எல்லாம் தெரிந்து கொள்ள இன்னும் இரண்டு மாத காலம் ஆகும் என்றார் விக்னேஷ்வர். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 23, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 5

 அன்னபூர்ணியின் பொழுதுகள் - 5 விளையாடிக் கொண்டிருக்கும் போது அன்னபூர்ணியின்  பாதங்களை எடுத்து என் கண்ணுக்கு மேல் வைத்தேன். அவளுடைய பாதத்தின் குளிர்ச்சி என் கண்களின் வெம்மையை தணித்தது . விக்னேஷ்வரிடமும் அப்படி செய்து பார்க்கும் படி கூறினேன்.  அதே போல் செய்த பிறகு , கண்களை மூடிக்  கொண்டே உணர்ச்சி ததும்ப , ஒரு வேளை சிவனின் பாதங்கள் கண்ணப்பநயினாருக்கு இப்படி தான் குளிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றார் விக்னேஷ்வர் . Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 23, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 4

  அன்னபூர்ணியின் பொழுதுகள்  அன்னபூர்ணிக்கு இப்போதைக்கு பிடித்தமானதாக இருப்பது  , மின்விசிறி காற்றினால் அலைக்கழியும் காலண்டர் தாள்கள். அவை அசையும் போதெல்லாம் அதை பார்த்து மகிழ்ச்சியை சிறு சப்தமாக கொடுக்கிறாள். ஏன் காற்றில் ஆடும் பொருட்கள் ஐந்து மாத குழந்தைக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது?. தனக்கு தானே விளையாடி, கை கால்களை அசைத்து மகிழ்ந்து , சற்று நேரம் எதையோ சிந்தித்து மிக அமைதியாகி , பின்னர் திரும்பவும் கைகளை அசைத்து வேறு சிந்தனைக்கு செல்கிறாள்.அவளுள் அவள் முழுமையாக இருக்கும் நேரத்தில் ,  அதை  ஊழ்கம் என்று கூட அழைக்கலாம். அப்போதெல்லாம் அன்னை அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை.  அந்த தருணம் முழுமை பெற்று உலகியலுக்கு திரும்பும் நேரத்தில் மட்டுமே என்னை தேடுகிறாள்.  Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 21, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 3

அன்னபூர்ணியின் பொழுதுகள்  விக்னேஷ்வர் முகத்தை பார்த்ததும் குதூகலமாகி விடுகிறாள் அன்னபூர்ணி. அப்பா என்று அவளுக்கு தெரிகின்றதா? அவரிடம் மட்டுமே காட்டுவதற்கு தனி சிரிப்பும், புன்னகையும்,முகபாவமும்  வைத்திருக்கிறாள். அவர் வரும் வரை அந்த பொக்கிஷத்தை யாருக்கும் தெரியாமல் எங்கே வைத்திருப்பாளோ? அவரிடம் சென்ற பிறகு என்னை பார்த்து ஒரு புன்முறுவல் செய்வாள்.நான் எங்கே இருக்கிறேன் பார்த்தாயா? என்பது போல இருக்கும் அவளின் முகபாவம். அவரிடம் மட்டுமே பேசுவதற்கு தனி மொழியை கற்றுக்கொண்டுள்ளாள். அவருக்கு அந்த மொழி புரியவில்லை என்றாலும், என்னிடம் அவள் பேசும் மொழிக்கும் அவரிடம் பேசும் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து பெருமை கொள்கிறார். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 20, 2026  

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 2

 அன்னபூர்ணியின் பொழுதுகள்  அன்னபூர்ணி குறும்பு செய்யும் போதெல்லாம் நான் குட்டி கிருஷ்ணனையே பழி சொல்வதாக விக்னேஷ்வர் சிரிக்கிறார். யசோதாவின் மடியில் சமர்த்தாக அமர்ந்திருக்கும் இந்த குட்டி கிருஷ்ணன் தான் அனைத்து குழந்தைகளின் கனவிலும் சென்று குறும்பு செய்ய கற்று கொடுப்பவன் என அன்னையருக்கு தானே தெரியும். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram April - 24, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 1

 அன்னபூர்ணியின் பொழுதுகள்  மடியில் உறங்கும் மகளின் உறக்கம் கலையக்கூடாதென , என் கையில் அமர்ந்த கொசு உதிரத்தை உறிஞ்சி உருவத்தில் பெரிதாவதை பார்த்துக்கொண்டிருந்த போது கர்ணனனை மிக அணுக்கமாக உணர்ந்தேன். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram March - 21, 2026

பூங்கா வாசகம்....

         இன்று பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துக் கொண்டே நடந்தேன்.  அதில் சீராக சிந்தனை செய் , விரைவாக செயல்படு என்ற வாசகம் சிறு வெளிச்சம் போல அறுபட்ட எண்ணங்களை இல்லாமலாக்கியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? நடந்து கொண்டிருக்கிறேன். பூங்காவில் இருக்கும் நபர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். மனதில் பலவகையான எண்ணங்களை தொடர்பில்லாமல் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் நான் எங்கே இருக்கிறேன்? இதுவரைக்கும் எண்ணங்கள் தான் சிந்தனைகள் என்று நினைத்திருந்தேன். ஒரு எண்ணத்தில் இருந்து இன்னொரு எண்ணத்திற்கு மனம் தாவிச் செல்கிறது. இதை நான் ஏதோ ஒரு அதிமேதாவித்தனம் என்று தான் நம்பியிருக்கிறேன். ஆனால் இந்த வாசகம் அதை ஒரு குப்பை கூடம் என கூறிவிட்டது. Sakamoto என்ற ஒரு ஜப்பானிய கார்ட்டூன் சீரிஸ் ஒன்றை  விக்னேஷ்வர் பார்த்து வருகிறார். வன்முறை சார்ந்தது தான். ஆனால் அதில் சில நல்ல எபிசோடுகள் வரும் போது என்னை பார்க்க சொல்வார். அதில் வரும் நாயக...

பக்கத்து வீட்டுக்காரம்மாவின் பாத்திரம்.....

  நாம் புழங்கும் பொருட்கள் நம்முடைய முகமாகவே மாறி விடுவதன் மாயத்தை எண்ணி புன்னகை வந்தது. பக்கத்து வீட்டுக்காரம்மா பலகாரம் கொடுத்து விட்ட பாத்திரம் நம் வீட்டில் அந்நியமாகவே தெரிவது எப்படி ? வீட்டின் பாத்திரங்கள் அதை ஏற்றுக் கொள்வதேயில்லை. நான் எப்போது வீட்டுக்கு செல்வேன்? என்று ஏக்கத்துடனும் , பரிதவிப்புடனும் இருக்கும் பால்வாடி குழந்தையை போல இருக்கிறது அது.  அதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதில் நானும் ஏதேனும் பலகாரத்தை போட்டு தான் கொடுக்க வேண்டும்.  இரும்பு வடசட்டியை எடுக்கும் போதெல்லாம் பெரியம்மாவின் சாயல் தெரிகிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக என் அம்மா அதை பயன்படுத்தி வந்திருந்தாலும் அம்மாவின் சாயலை அதில் நான் ஒரு போதும் கண்டதில்லை.  அம்மாவிற்கு பெரியம்மா கொடுத்த நல்ல கனமான இரும்பு வடசட்டி. திருமணத்துக்கு பிறகு அம்மாவின் வீட்டுக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் சூட்கேசில் வைத்து தூக்கி கொண்டு வந்தேன். பெரியம்மா எனக்காகவே அம்மாவிடம் கொடுத்தாள் என்று எண்ணுகிறேன்.  வடசட்டி சூடாக ஆரம்பித்தது . நிலக்கடலையை எடுத்து போட்டேன். தீயை மிதமாக வைத்தேன். முதலில...

மணிமங்கலம்....

 மணிமங்கலத்தில் தான் பரீட்சை என்றார் விக்னேஷ்வர். உடனடியாக அதன் வரலாறு தான் நினைவிற்கு வந்தது.  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்து வந்த போது மணிமங்கலத்தில் வைத்து தான் அவனை விரட்டி அடித்திருக்கிறார் முதலாம் நரசிம்மவர்மன். வரலாற்று சிறப்பு மிக்க இடம்.மணிமங்கலத்திற்கு லோகமகாதேவி சதுர்வேதி மங்கலம் என்பது இராஜராஜன் ( மனைவி ) காலப் பெயர். கைலாசநாதர் கற்றளி, பெருமாள் கற்றளி என ஆலயங்களும் இருக்கின்றது. அதையெல்லாம் பார்த்துவிட வேண்டும் என உடன் சென்றேன்.  விக்னேஷ்வர் பரீட்சை எழுத உள்ளே செல்ல நான் அந்த கல்லூரியின் கட்டிடங்களை சுற்றி வந்து கொண்டிருந்தேன்.  கல்லூரியில் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம் பேச்சு கொடுத்தேன்.  நான் என்னுடைய சிறுவயதில் எங்களூரில் பார்த்தவர்களை போலவே இருந்தார்கள். முகப்பருக்கள் இல்லாத  வெயில்பட்ட கருத்த சருமம். இப்போது எங்களூரில் யாரையும் நான் அப்படி பார்க்கவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளில் நிறம் மாறிக் கொண்டே செல்கிறார்கள். எங்களூரில் இப்போது  மாநிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை என மட்டுமே இருக்கிறார்கள். வெயில் பட்ட மினுக்கும்...

தாழ்வாரத்து நிழல்

           மாமரத்து கிளைகளும், இலைகளும் தாழ்வாரத்து  நிழலுடன் பொறுமையாக நகர்ந்து அமைதியாக  தங்களுடைய  இருப்பிடத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்தன. நிழல்கள் சில சமயங்களில் தாவி வரும் முயல்களை போல நிலத்தை ஆக்கிரமிக்கின்றன. சில சமயங்களில் மெதுவாக  நகரும் ஆமைகளை போல. சில சமயங்களில் காலை மிருதுவாக வருடி கொடுக்கும் வாய்க்கால்  நீரின்  சிற்றலைகள் போல.மற்றும் சில சமயங்களில் அசை போடும் மாட்டை போல.  கோலம் போட்டிருக்கும் போது விழும் நிழல், ஆற்றில் சிறு பாறைகளின் மீது கால் வைத்து நடக்கும் இளம் பெண்களை போல சிலிர்ப்புடனும், சிரிப்புடனும் நகர்கின்றன.பூஜைக்கான பித்தளை சாமான்களை கழுவி கவிழ்த்திருக்கும் போது அதில் முகம் காட்டி  அழகு பார்த்துக் கொள்கின்றன.  விக்னேஷ்வர்  செய்தித்தாள்  படிக்கும் போது   தாழ்வாரத்து நிழலும் உடன் படிக்கிறது. அப்போது அவை இருக்கின்றனவா இல்லையா எனும் படி அவருடன்  ஒன்று கலந்து விடுகின்றன.நான் துணி காய போடும் போது கண்ணாமூச்சி விளையாடுகின்றன நிழல்கள் .  நாங்கள் இருவரும் அமர்ந்து ...

கார்த்திகை தீபம் .....

                நூலகத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்கே மணி 4.20 ஆகியது. வீட்டுக்கு வந்ததுதும் உடனடியாக பாத்திரங்களை கழுவி வைத்தேன். அடுத்து அடை மாவு அரைத்தேன்.இனிப்பு பணியாரம் செய்வதற்கான மாவு அரைத்தேன். அரிசி கொஞ்சம் ஊற வைத்து, காலையிலேயே ஊறவைத்து விட்டு போன அனைத்து பருப்பு வகைகளுடன் சேர்த்து ஒரு கலவை சாதம்  செய்தேன். இன்னுமும் பொரி உருண்டையையும், நிலக்கடலை உருண்டையும் செய்ய வேண்டும். அடை செய்வதற்கும், இனிப்பு பணியாரம் செய்வதற்கும் தேங்காய் வேண்டும். அதை உடைக்க வேண்டும். மணி 6 ஆகியிருந்தது. இன்னுமும் விக்னேஷ்வர்  வீட்டுக்கு வரவில்லை. நான் வீட்டை கூட்டி முடித்தேன்.  விக்னேஷ்வர்  வந்து விட்டார். உடனடியாக தேங்காய் உடைத்து, பருப்பு ஆடை மாவிலும், இனிப்பு பணியாரத்தில் போட்டேன். விக்னேஷ்வரை நிலக்கடலையை தோல் நீக்க சொல்லிவிட்டு, நான் சமைப்பதில் மும்முரமாக இருந்தேன். இனிப்பு பணியாரம் ஊற்றி முடித்ததும், அடை மாவிலும் பணியாரத்தையே செய்தேன். ஊற வைத்த கடலை பருப்பை வேக வைத்து கொஞ்சம் வெல்லம்  சேர்த்து லட்டு பிடித்தேன்....

சலார்ஜங் மியூசியமும் சார்மினாரும் .....

நேற்று இரவு வீட்டுக்கு வருவதற்கே மணி பனிரெண்டு ஆகியிருந்தது. இருப்பினும் காலை ஆறு மணிக்கே முழிப்பு வந்து விட்டது. நண்பரின் வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். நாங்கள் எழுந்து காலை நடை சென்று வந்தோம்.  மழை  சிறு தூறலாக ஆரம்பித்தது பெரிய மழையாக கொட்டியது.. வீட்டில் அனைவரும் எழுந்திருந்தனர். பிள்ளைகள் செஸ் விளையாட ஆரம்பித்தனர். அவர்களோடு விக்னேஷ்வர் சேர்ந்து கொண்டார். நிலக்கடலை சட்னியும் தோசையும் கொடுத்தார்கள். வெளியே மழை கொட்டி கொண்டிருந்தது. பதினோரு மணியளவில் மழை விட்டதும் சலார்ஜங் மியூசியம் சென்றோம். நண்பரின் பைக்கை எடுத்து கொண்டு ஒரு மணி  நேர பயணம். முதன்மை சாலையில் அரசியல்வாதிகளின் படம் கட்சி கொடிகளுடன் தொடர்ச்சியாக இருந்தது.மாநிலங்கள் தான்  மாறுகிறது , அரசியல்வாதிகளின் உடல்மொழியும், அதற்கென்றே கொண்ட சிரித்த முகமும் ஒன்று போலவே இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற  போது இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களில் எதுவும் இதை போன்ற உடல்மொழி இல்லை. பேனர் கலாச்சார காலம் வந்த பிறகு தான்  அரசியல்வாதிகளின் பொதுவான உடல்மொழியும் பரவியிருக்கிறது. சலார்ஜுங் மியூசியம்,...

ஒரு திருமணத்திற்கான பயணம்....

  ஜி.எம் பெண்ணின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என கூறினார் விக்னேஷ்வர் . சமீப நாட்களில் நீண்ட தூர பயணங்களின் மீது சற்று பயம் கூடிப்போனது  எனக்கு . இதை அவரிடம் கூறினால் , பயத்தை போக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் இதை போன்ற பயணங்களை திட்டமிடுவார். பயத்தை காட்டி கொள்ளாமல் சரி போகலாம் என்றேன். பேருந்துகளை பார்த்து புக் செய்துவிட்டு இரவில் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும் அனைத்து தயக்கங்களும்  விலகி, பயம் இருந்த சுவடே இல்லாமல் போக , தேவையானவற்றை பேக் செய்ய ஆரம்பித்தேன்.  பேக் செய்து முடித்தவுடன் வீட்டையே நான் ஹைதராபாத்திற்கு எடுத்து செல்வதை போல உணர்ந்தேன். நாம் பயணம் செல்லும் போதெல்லாம் வீட்டையே நம்முடன் எடுத்து செல்கிறோமோ?  வெள்ளிக்கிழமை இரவு, கோயம்பேடு செல்வதற்கு  ஆட்டோ வரவைத்து ஏறி கொண்டோம்.  ஆட்டோவில் ஏறியதும் உணர்ந்தோம் பிரௌனி நிற்கிறான் என்று. அவனை உள்ளே கொண்டு செல்வது கடினம். விக்னேஷ்வர் இறங்கி வேகமாக வீட்டை நோக்கி ஓடினார். பிரௌனியும் அவர் பின்னாலயே ஓடினான். கேட்டை  திறந்தும்  அவரும் உள்ளே ...

கலாஷேத்ராவின் கைத்தறி ஆராய்ச்சி கூடம்......

    கலாஷேத்ராவின் கைத்தறி ஆராய்ச்சி கூடத்திற்கு இன்று சென்றோம். வாயில் முகப்பில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு  செய்யும் கீதா உபதேச சித்திரம் வரையப்பட்டிருந்தது. சட்டென்று அனைத்துமே புள்ளி வைத்த கோலமாக தெரிந்தது. உள்ளே சென்றதும் ருக்மணி அருண்டேல்  புகைப்படம் அவருடைய ஐம்பது வயதில் எடுக்கப்பட்டிருக்கலாம்  .  பருத்தியிலிருந்து எப்படி பஞ்சை எடுக்கிறார்கள். பஞ்சிலிருந்து எப்படி நூலாக மாற்றுகிறர்கள் என கண் முன்னே செய்து காட்டினார்கள். இரும்பு கம்பி ஒன்றை பயன்படுத்தி பருத்தியில் இருக்கும் விதைகளை நீக்கினார்கள் . கைக்கு அடக்கமான பத்து சீமார்  குச்சிகளை கொண்டு  விதை நீக்கிய  பஞ்சை மரப்பலகையில் வைத்து தட்டினார்கள். பஞ்சு , பஞ்சு பஞ்சாக மாறியது. அதன் பின்னர் வில்லை கொண்டு அதனுடைய பஞ்சை அதில் வைத்து நீவினார்கள். பஞ்சு மிருதுவாக மாறியது.இதை இரன்டு முறை செய்தார்கள். பஞ்சு நீளமாக நூலிழையாக மாறியது. அதன் பிறகு வாழை  மட்டையில் பஞ்சு நூலிகளை வைத்து, ராட்டினத்தில் நூல் சுற்றும் ஊசியின் முனையை பஞ்சு நூலிழைகளுடன் சேர்த்து சுற்ற  ஆரம்பித்தார்கள். நூல் கண்டில் ப...

பருத்திக்கறை பூச்சி...

       புத்தகங்கள் அதனதன் இடத்தில் சரியாக உள்ளனவா என பார்த்துவிட்டு ,     'The Magic Finger' கதையை படிக்க ஆரம்பித்தேன். மூன்று பக்கங்களை கடந்திருப்பேன். என்னுடைய வலது காலின் அருகில் ஏதோ ஒன்று நகர்வது போல் உணர்ந்தேன். சட்டென்று காலை உதறிவிட்டு எழுந்து கொண்டேன்.  உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி. இரண்டு உணர் கொம்புகளுக்கு அருகில் தலை அடர் சிவப்பு நிறமும்‌ , பின்கழுத்து முக்கோண வடிவில் கருப்பு நிறத்துடன் இருந்தது. நடுமுதுகில் தொடங்கி பின் பக்கம் வரை முக்கோணமாக தீபத்தின் ஒளிச்சுடர் போல கருப்பு நிறம் பரவியிருந்தது.  ஒரு பக்கத்திற்கு மூன்று கால்கள் வீதம் ஆறு கால்க ள்  இருந்தன.கால்கள் சிவப்பு நிறத்திலும் , நுனியில் வெண்மை நிறமும் கொண்டிருந்தது.  இது வரையில் நான் பார்த்திராதது. லேடி பக் ஆக இருக்கவும் வாய்ப்பில்லை. லேடி பக் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த சிவப்பு பூச்சி சற்று நீளமாக இருந்தது.  இது எப்படி நூலகத்திற்குள் வந்தது? மூன்று நாட்களாக பென்ங்கால் புயல் காரணமாக பள்ளி விடுமுறையாக இருந்தது. அதிகப்படியான மழையினால் இந்த ...

டேபிள் டென்னிஸ் டோர்னமென்ட்....

  டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி என்று என் கணவர் கூறியதும் நாம் செல்லலாம் என்றேன் நான். சென்னைக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அலுவலகம் சார்ந்த அமைப்புகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அண்ணா நகரில் இருக்கும் SBOA பள்ளிக்கு செல்வதற்கே எங்களுக்கு நாற்பத்தைந்து நிமிடம் ஆகும். இருந்தாலும் சென்று தான் பார்ப்போம் என சென்றோம். காலை 7 மணிக்கு SBOA பள்ளிக்கு சென்றால் , விளையாட்டு போட்டிகள் SBOA மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது என செக்யூரிட்டி கூறினார். அதுவும் ஒரு ஐந்து நிமிட பயணம் தான்.  SBOA மெட்ரிக்குலேசன் என் கணவருக்கு மனதளவில் நெருக்கமான வளாகம். அங்கே தான் அவர் பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு படித்தார். கிரவுண்டில் காரை பார்க் செய்துவிட்டு சுற்றிப் பார்த்தார். மனோ , இந்த கிரவுண்ட் எவ்ளோ பெரிசா இருக்கும் தெரியுமா ? இப்போ எப்படி இவ்ளோ குட்டியா இருக்கு ? வேற ஏதாச்சும் பில்டிங் கட்டிட்டாங்களோ ? என அந்த குட்டி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வந்தார். எனக்கு சிரிப்பாக வந்ததது. ஏங்க , அப்போ நீங்க சின்ன பையனா இருந்திருப்பீங்க அதனால் உங்களுக்கு இதே கிரவுண்ட் ரொம்ப பெர...

ஐஐடி மாராத்தான் .....

மாராத்தான் உண்மையில் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தது. நேற்றிரவு தான் 5கிமீ மாரத்தான் ஐஐடி மெட்ராஸில் நடப்பதை அறிந்து கொண்டோம். காலை ஐந்தரை மணியளவில் அங்கே இருக்க வேண்டும். நாங்கள் இருக்குமிடத்தில் இருந்து பத்து நிமிடம் தான் . ஆனால் நாங்கள் நான்கு மணிக்கே எழுந்து கொண்டோம். ஐந்து மணி ஆகும் போது காரில் பயணத்தை துவக்கினோம்‌ . வீட்டைத் தாண்டியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் கூட ரன்னிங் செல்பவர்கள் குறைவான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். அடையார் ஆற்றங்கரையை கடக்கும் போது சாக்கடை நாற்றம் எடுத்தது. பகல் பொழுதுகளில் கடக்கும் போது வாகனங்களின் புகை , ஹார்ன் சத்தங்கள், ஆட்டோக்களின் இரைச்சலினாலும் சாக்கடை நாற்றம் அமுங்கி போகிறது. ஒருவேளை வெறிச்சோடியிருந்த அடையார் ஆற்றங்கரை பாலமும் ,  அதிகாலையும் ,  தூறல் மழையும் , சாக்கடை நாற்றத்தை தூண்டியிருக்கலாம் அல்லது எங்களின் கவனத்திற்கு வந்ததிற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.  ஐஐடிக்குள் நுழையும் போது செக்யூரிட்டி மாரத்தான் ஆ என்று கேட்க ஆம் என் கூறி உள்ளே சென்றோம். ஐஐடிக்குள் செல்வது எனக்கு முதல் முறை.  பொள...

பாரிஜாதம்.....

 வீட்டின் பின் முற்றத்தில் உதிர்ந்திருந்த பாரிஜாதம் நாணத்தால் சிவந்து கண் மூடி புன்னகைப்பது போல இருந்தது.  பிரம்ம முகூர்த்தத்தில் மலர்ந்து சூரியனின் முதல் கீற்று முத்தத்தில் நாணி பரவசம் தாள முடியாமல் நிலத்தில் உதிர்கிறது. தோழியான வாழை மரமும் , தோழனான கொய்யா மரமும் கேலி செய்ய, வயதில் மூத்த தாத்தாக்களான மாமரமும் , பலா மரமும்  இதெல்லாம் இந்த வயதில் இருப்பது தானே என்ற பெருந்தன்மையான புன்னகையை கொடுக்க , இவர்களிடமிருந்து தப்பிக்கொள்ள பாரிஜாதம் விரல்களால் விழியை மூடிக் கொண்டு குளிர்ந்திருக்கும் நிலத்தை நோக்கி உதிர்ந்து புன்னகைத்தது. காற்றின் மெல்லிய தொடுகையில், தன் கனவை கலைத்ததற்காக சிறு சிணுங்கலுடன்  கண்களை திறப்பது போல சில பூக்கள் வானத்தை நோக்கி உதிர்ந்திருந்தன.  இவற்றில் எந்த மலரை எடுப்பது என்ற தயக்கத்திலும் , அச்சத்திலும் சில கணங்களை செலவிட்டேன். அணில்களின் சத்தமும் , காகத்தின் குரலும் கேட்க , நிலத்தின் குளிர் மணம் மறைய ஆரம்பித்ததும் விடியலை உணர்ந்த பாரிஜாதம் நாணம் விலகி முகத்தில் லட்சமிகரம் தவழும் இல்லாளை போல மாறியது. சிறிய நிம்மதி பெருமூச்சூடன் அச்சமும் தயக்கமும்...

ரங்கமன்னார்.....

 ரங்கமன்னார் என்ற பெயரையே இந்த நவராத்திரியின் போது தான் அறிந்து கொண்டேன். கோதையின் மடியில் தலை வைத்து உலகமே அது தான் என சுகஜீவனம் கொண்டிருந்தார் பெருமாள்.உலகையே தன் மடியில் வைத்திருக்கும் சிறு கர்வம் கூட இல்லாமல் கோதையின் முகம் வெகு சாதாரணமாக சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் இருந்தது.  கொலுவில் மேலிருந்து இரண்டாம் படியில் ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் பெருமாளின் காலடியில் இருந்த லக்ஷ்மியின் முகம் அபலை பெண் போல இருந்தது. பெருமாளோ உலகையே காத்துக் கொண்டிருக்கும் பெருமிதம் பரவிய குறு நகையில் இருந்தார்.  காதலிகளுக்கு மட்டுமே என்று சில முகபாவனைகளை கைக் கொள்கிறார்கள் ஆண்கள். காதலியின் மடியில் தலை வைத்தும், மனைவியினை காலடியில் வைத்தும் என்று சிலை வடித்த சிற்பியின் கற்பனை உருவாக காரணமாக இருந்த புராணக்கதை எழுதியவரை நினைத்து புன்னகை எழுகிறது. காதலிகளுக்கு என்றுமே வயதாவதில்லை.  Manobharathi Vigneshwar Raja Annamalaipuram 21-10-2024

கத்துங் குயிலோசை.......

  பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது க்வாக்கி க்வாக்கி என்ற கடுமையான புதிய குரல் ஒன்றை கேட்டு பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தேன். நெல்லிக்காய் மரத்தின் இரண்டாவது கிளையில் அமர்ந்திருந்தது ஒரு பறவை . ஃபோல்கா புள்ளிகள் அதன் தேகம் முழுவதும் கருப்பு வெள்ளையாக இருந்தன. திரும்பவும் அதே போன்ற ஒரு கத்தல். காகத்தின் குரலில் கூட ஒரு அழைப்பு இருக்கும். இந்த பறவையின் குரல் எதையோ ஆணையிடுவது போல , கொஞ்சம் கடுமையாக இருந்தது.  அடுத்த நொடியே தொட்டு கண் மை இட்டுக் கொள்ளலாம் என்ற வண்ணத்தில் முழுமையான கருமையுடன் சிவப்பு மணி கண்களை உருட்டியபடி பலா மர கிளையில் வந்தமர்ந்தது இன்னொரு பறவை. ஃபோல்கா புள்ளி பறவையின் கத்தல் அமைதியாகியது. பலா மரத்தில் இருந்த பறவை தன்னுடைய சிவந்த வாயை திறந்தது. முதலில் க்வாக்கி என்ற சத்தத்தை கொடுத்து பிறகு க்கூ , க்க்கூ என்று கூவ ஆரம்பித்தது.  குரலை வைத்து தான் அது குயில் என்பதையே தெரிந்து கொண்டேன்.  நாலைந்து முறை கூவி விட்டு பலாமர கிளையிலிருந்து , நெல்லிக்காய் மர கிளைக்கு பறந்தமர்ந்தது. ஃபோல்கா புள்ளி பறவை மேலும் உயர்ந்த கிளையில் பறந்தமர்ந்தது. திரும்பவும் கு...