Skip to main content

ஒரு திருமணத்திற்கான பயணம்....

 ஜி.எம் பெண்ணின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என கூறினார் விக்னேஷ்வர் . சமீப நாட்களில் நீண்ட தூர பயணங்களின் மீது சற்று பயம் கூடிப்போனது  எனக்கு . இதை அவரிடம் கூறினால் , பயத்தை போக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் இதை போன்ற பயணங்களை திட்டமிடுவார். பயத்தை காட்டி கொள்ளாமல் சரி போகலாம் என்றேன். பேருந்துகளை பார்த்து புக் செய்துவிட்டு இரவில் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும் அனைத்து தயக்கங்களும்  விலகி, பயம் இருந்த சுவடே இல்லாமல் போக , தேவையானவற்றை பேக் செய்ய ஆரம்பித்தேன். 

பேக் செய்து முடித்தவுடன் வீட்டையே நான் ஹைதராபாத்திற்கு எடுத்து செல்வதை போல உணர்ந்தேன். நாம் பயணம் செல்லும் போதெல்லாம் வீட்டையே நம்முடன் எடுத்து செல்கிறோமோ? 

வெள்ளிக்கிழமை இரவு, கோயம்பேடு செல்வதற்கு  ஆட்டோ வரவைத்து ஏறி கொண்டோம்.  ஆட்டோவில் ஏறியதும் உணர்ந்தோம் பிரௌனி நிற்கிறான் என்று. அவனை உள்ளே கொண்டு செல்வது கடினம். விக்னேஷ்வர் இறங்கி வேகமாக வீட்டை நோக்கி ஓடினார். பிரௌனியும் அவர் பின்னாலயே ஓடினான். கேட்டை  திறந்தும்  அவரும் உள்ளே வருவார் என்று எண்ணி வேகமாக  உள்ளே ஓடினான் பிரௌனி. உடனடியாக கேட்டை தாழிட்டு விட்டு திரும்பவும் ஆட்டோவில் ஏறினார் விக்னேஷ்வர். எனக்கு பிரௌனியை  நினைத்து பாவமாக இருந்தது.  

ஹைதெராபாத் ட்ராவெல்ஸில்  முன்னாள் செல்ல வேண்டிய பேருந்துக்கு நின்றவர்கள் இரண்டு பேர் தவறுதலாக இந்த பேருந்தில் ஏறி விட , அனைத்தையும் சரி செய்வதற்க்கு பத்து நிமிடங்கள் தாமதமாகியது. பேருந்து பயணத்தை ஆரம்பிக்க  கண்களை இறுக  மூடி தூங்க முயற்சி செய்தேன். எதிர் படுக்கையில் ஐ டி  கம்பனியில் வேலை செய்யும் இளம் பெண் ஒருத்தி , விடாமல் போனில் ஆங்கிலத்தில் புறணி பேசி கொண்டிருந்தாள். நம் சமூக நிலை  வளர்ந்தாலும் புறணி பேசுவதில் இருந்து  வெளியே வரவில்லை. நிச்சயமாக அவள் ஒரு பையனிடம்  பேசி கொண்டிருக்கிறாள். ஏனெனில் தன்னை ரொம்ப நல்லவளாகவும் , அனைத்து நற் குணங்களும் தன்னிடமே உள்ளது என்று நம்பும் படி பல கதைகளை கூறி கொண்டிருந்தாள். எதிர் முனையில் இருக்கும் பையன்  பரிதாபத்திற்குரியவன் . மணி இரண்டை தாண்டி விட்டது. இன்னுமும் , you know right? என்று பேசி கொண்டே இருந்தாள் . திரையை  திறந்து திட்டி விடலாம் என்று கூட தோன்றியது. ஆனாலும் கட்டுப்படுத்தி கொண்டேன்.

எப்படியோ உறங்கி விட்டோம். காலை ஆறு மணிக்கு எழுந்து கொண்டோம், இன்னமும் நான்கு மணி நேரம் கழித்தே ஹைதராபாத் வரும். எட்டு மணிக்கு திரும்பவும் you know right? என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு  அந்த பெண்ணின் மனநிலையை எண்ணி சிரித்து  கொண்டோம். பத்து மணிக்கு LB நகரில் இறங்கி நதெர்குல்  செல்வதற்கு ஆட்டோ பிடித்தோம். பருத்தி காடுகளை கடந்து ஆட்டோ சீறி  பாய்ந்தது. ஆட்டோவை நிறுத்த சொல்லி கொஞ்ச நேரம் பருத்தி காட்டில் செலவிட்டோம்.


 சிறு வயதில் பருத்தி பிஞ்சாக இருக்கும் போது அதை சாப்பிட்ட நினைவு இருக்கிறது. 

பருத்திக்கறை  பூச்சி - கைத்தறி நெசவு - இப்போது பருத்திக்காடு. காற்று முகத்தில் சிலுசிலுவென்று வீசியது. இப்படி ஒரு காற்றை கடந்த வருடங்களில் நான் ஸ்பரிசித்ததே இல்லை.நிறைய மரங்கள் சூழ்ந்த ராஜா அண்ணாமலைபுரம் வீட்டிலும் கூட.  வெற்றிடத்தில் மட்டுமே காற்று வீச கூடும். மரங்களடர்ந்த காட்டில்  காற்று கனமாக நிலைத்து நின்று விடுகிறது.. 

இப்போது தான்  நிறைய குடியிருப்புகள் வந்து கொண்டிருந்தன.  நண்பரின் வீட்டின் அருகில் இறங்கி கேட்டை திறந்து உள்ளே சென்றோம். வீடு பூட்டி இருந்தது. உடனடியாக நண்பருக்கு கால் செய்து வீடு பூட்டி இருக்குடா என்றார் விக்னேஷ்வர். நீ எந்த வீட்டுல இருக்க? என்றார் நண்பர். தவறான வீட்டுக்கு சென்றுவிட்டதை உணர்ந்து, வெளியே வந்தால் எதிர்  வீட்டில் நண்பர் சிரித்து கொண்டு நின்றார். காலை பதினோரு மணிக்கு சென்றோம்  வானம்  இன்னுமும் ஆறு மணி போல மேக மூட்டத்துடன் இருந்தது. முன்னாள் குட்டி வரவேற்பறை , இடதுபுறம் சமையலறை நீண்டு சென்று , இரண்டு படுக்கை அறைகள் என  மிக நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்டிருந்தது. அவரின் மனைவி வீட்டை மிக அழகாக வைத்திருந்தார்.

குளித்து விட்டு வந்ததும் சாப்பிடுவதற்கு ஜோவார் ரொட்டியும், கத்திரிக்காய் கூட்டும் கொடுத்தார்கள். அது ஜோவார் ரொட்டி என்று அவர்கள் கூறிய பின் தான்  தெரிந்து கொண்டோம். தெலுங்கானால இது தான் பேமஸா  என்று  கேட்டேன். இல்ல இது எங்க பஞ்ஜாரஸ் உணவு என்றார். அதிலயும் நாங்க லம்பாடி னு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றார். கத்திரிக்காய் நன்றாக காரம் இருந்தது. எனக்கு மூக்கிலிருந்து நீர் வடிய ஆரம்பித்தது. இங்க தெலுங்கானால நாங்க பழங்குடியினர்  என்றார். எனக்கு மிக வியப்பாக இருந்தது. தான் சேர்ந்த ஒரு சமூகத்தை வெளிப்படையாக கூறக் கூடியவர்கள் மிக சிலரே. தான் சார்ந்த விஷயங்களை கூறுவதற்கும் ஒரு வயதும், பக்குவமும், சூழலும் அதற்குரிய மனிதர்களும் தேவைப்படுகிறார்கள்.

 நண்பர்களாக  இருந்தாலும் என் கணவருக்கு இதெல்லாம் தெரியாது என்பதை  அவருடைய முக பாவனையை  வைத்து புரிந்து கொண்டேன். பஞ்சாராஸ் நாடோடி சமூகமா இருந்தவர்கள். தற்போது மகாராஷ்டிரா , கர்நாடகா , தெலுங்கானா, பீகார் என பல மாநிலங்களில் உள்ளனர்.  அவர்களுடைய சமூகத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் செவல் மகாராஜ். அவருடைய புகைப்படத்தை பூஜை அறையில் வைத்திருந்தனர். குல தெய்வம் என்பதன் அர்த்தம் இப்போது வேறு விதமாக விளங்கியது எனக்கு . பேசி கொண்டிருக்கும் போதே நண்பரின் தந்தை வந்தார். லம்பாடி மொழிக்கு என தனியான எழுத்து முறை இல்லை.சமஸ்கிருத எழுத்து வடிவை பயன்படுத்தி தங்களின் மொழியை எழுதி கொள்கிறார்கள். லம்பாடி என்ற வார்த்தையை கேட்டதும் நண்பரின் தந்தை கோபப்பட்டு , நண்பரை திட்ட ஆரம்பித்தார்.  வீட்டில் அவர்களுக்குள் லம்பாடி மொழியும், வெளியே தெலுங்குவும் பேசுகிறார்கள் . நண்பரின் தந்தைக்கு , சாதியை மற்றவர்களிடத்தில் கூறுவது பிடிக்கவில்லை.புரியாத  மொழியாக இருந்தாலும் உணர்வுகளை புரிந்து கொள்வது எப்படி என்ற ஆச்சர்யம் இருந்து கொண்டே இருக்கிறது. 

மாலை ஐந்து மணிக்கு நண்பரின் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீடு வந்தனர். அவர்கள் வரும் போது நண்பரும் அவர் மனைவியும் வீட்டில் இருப்பதே அழகாக இருந்தது. நண்பரின் மனைவி மாலை தேநீரும் வீட்டில் செய்த முறுக்கும், கடலை உருண்டையும் கொடுத்தார்கள்.நண்பரின் மனைவி ஒரு தேர்ந்த இல்லாளின் வாழ்க்கையை  மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றியது. எப்போதுமே மெலிதான ஒரு பாடலை  பாடி கொண்டே இருந்தார். பாடல் நிச்சயமாக தமிழ் ,தெலுகு, ஹிந்தி இல்லை, கொஞ்சம் புரியாத மொழியாக இருந்ததால் நானாக லம்பாடி மொழி  பாடலாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். . நானும் இப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன் என விக்னேஷ்வரிடம் கூறினேன். இப்படிப்பட்ட ஒரு இல்லாளாக இருப்பதற்கும் ஒரு மனநிலை வேண்டும். அந்த பெண்ணிற்கு மிக பெரிய கனவுகளோ, சிந்தனைகளோ எதுவும் இல்லை. உன்னால் அப்படி இருக்க முடியுமா? என சிரித்தார். அதெற்கென்ன அந்த  மனநிலையை நானும் கொண்டு வந்து விடுவேன்! என கூறும் போதே எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் மனதிற்குள் நிச்சயமாக இந்த  மாதிரியான அழகிய வாழ்க்கையை நானும் உருவாக்குவேன் என முடிவு செய்து கொண்டேன். இதைக் கூட  விக்னேஷ்வர் அறிந்திருப்பார் எனத்  தோன்றியது.

 திருமணத்திற்கு ரென்டல் கார் புக் செய்து சென்றோம். நாதர்குல்  - மாஹேஸ்வர் மண்டல் The celestee ரிசார்ட் . நுழைந்ததும்  HR இருந்தார் பேசிவிட்டு உள்ளே சென்றோம். பெண்ணிற்கான திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. கையில் தேங்காயை வைத்து பத்து நிமிட மந்திரங்கள் கூறப்பட்டன பிறகு தீபமேற்றி பூஜை. ஜி.எம் பட்டு வேட்டியில் இருந்ததால் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. சடங்கு முடிந்து திருமண மேடைக்கு அழைத்து சென்றார்கள்.இருவருக்கும் இடையே ஒரு திரை அமைக்கப்பட்டு சில சடங்குகள் , பின்னர் தாலி  காட்டினர். நாதஸ்வரமும், மத்தளமும் மங்கலகரமாக வாசிக்கப்பட்டது. இரவில் திருமணம் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.பகலில் வேலை முடித்து, ஓய்வாக இருக்கும் இரவு நேரத்தில் திருமணம்  வைத்தால் தான் அனைவரும் வருவார்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம். தமிழ்நாட்டில் அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் தான்  திருமணம் வைப்பார்கள். ஆனால் எங்கள்  பொள்ளாச்சி பக்கமும்  கூட  பத்திரிகை வைக்கும் போது, ராத்திரி கல்யாணம் ,வெடியால  முகூர்த்தம் என்று கூறுவார்கள். ஆனால் முகூர்த்தத்தில் தான்  தாலி காட்டுவார்கள்.

மிக நீண்ட திருமண சடங்குகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சென்றது. . பசிக்க ஆரம்பித்தது. சுவையான உணவு சாப்பிடும் இடத்தில்  அஸோசியேஷன் நித்திஷ் சாரை  பார்த்து பேசினார் விக்னேஷ்வர்.  வெளியே வந்ததும், DGM ஆஷித் ரஞ்சன் சாரிடம் பேசினார் .


இளம் பெண்கள் திருமண பெண்ணை போலவே  அலங்காரம் செய்து கொண்டு சிரித்து  பேசுவதை மட்டுமே வேலையாக வைத்திருந்தனர். குழந்தைகள் ஓடி விளையாடாமல், drone எங்கே செல்கிறது என அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். நடு வயதினர் அமைதியாக  வாழ்த்து வழங்க வரிசையில் நின்றனர். அலுவலக நண்பர்கள் கூட்டமாக  பேசி கொண்டிருந்தனர்.வயதானவர்கள் உணவு அருந்தும் கூடத்தில் பொறுமையாக உண்டு கொண்டிருந்தனர். அனைத்துமே ஒரு ஒழுங்கு முறையில் நடந்து  கொண்டே இருந்தது. 



பதினோரு மணிக்கு The celestee - ஐ விட்டு வெளியே வந்தோம். நான் எதிர் பார்த்திருந்த வகையான திருமணம் . மணமக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என பிரார்த்தித்து கொண்டேன். இப்படி மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் போது அந்த இடத்தில நான் இருப்பதில்லை என உணர்கிறேன். எந்த நான் அதை ப்ரார்த்திக்கறேன் எனவும் தெரியவில்லை. 

Manobharathi Vigneshwar
Nadhergul, Telugana
07-12-2024