Skip to main content

Posts

Showing posts with the label அனுபவம்

பூத்தொடுத்தல்....(அனுபவம்)

 கயிறுகளை வைத்து முடிச்சு போடும் பழக்கம் மனிதர்களுக்கு எப்படி வந்திருக்கும்?  சிறு வயதில் பூ தொடுப்பதை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் பூக்களை இரண்டிரண்டாக எடுத்து தரும் பெரிய பொறுப்பை  கொடுத்து பூ தொடுப்பதை பற்றிய அறிவை தரமறுத்து விட்டனர். பக்கத்து வீட்டு அக்கா பூ தொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். கைவிரல்களை லாகவமாக வளைத்து , திருப்பி , இழுத்து என விரல்களில் நூலை வைத்து ஒரு நடன அசைவை கொண்டு வந்து தியான நிலையில்  பூ தொடுப்பதை பார்க்கும் போது ஆசையாக இருந்தது. நானும் ஒரு நாள் இதைப்போல் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த அக்காவின் அருகில் சிறுமி ஒருத்தி பூக்களை இரண்டிரண்டாக எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.  அம்மா எப்போதுமே கூறும் வார்த்தைகளில் ஒன்று " கண்ணு பாத்தா , கையி செய்யணும் " என்று. அந்த வார்த்தைகளை  நினைவில் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி எதையுமே செய்ய முயற்சித்ததில்லை. இன்று முயன்று பார்த்துவிட ஆசை வந்தது.  பூக்களை வீணாக்க மனது வரவில்லை. காகிதங்களை வைத்து கட்டிப் பழக முடிவு செய்தேன். அந்த அக்காவின் அருகிலேயே அமர்ந்து கவனித்தபின் த

வாசனை....(அனுபவம்)

இன்னும் இரண்டு நாட்களில் நல்ல மணம் வந்த பிறகு வெட்டுங்கள் என்று கொடுத்தார் கடைக்காரர். நான் மணிக்கொரு முறை பலாவின் வாசனை வருகிறதா என்று அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன். நான்கு நாட்கள் ஆகியும் மணம் வரவில்லை. இன்று இரவில் தண்ணீர் தாகம் எடுத்ததால், எழுந்து வாட்டர் பாட்டிலை தேடினேன். மிக மிக ரகசியமாக பலாவின் வாசனை வந்தது.  மின்சாரமில்லாத ஒரு இரவில், ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே வீடு முழுவதற்கும் வெளிச்சத்தையும், மெல்லிய மண்ணெண்ணெய் வாசத்தையும் ஒரு சேர பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமைத்துக் கொண்டிருக்க, பழைய பாட நோட்டுகளின் அட்டையை கூடாரம் போல் வைத்து சிறு சிறு கிராமங்களை உருவாக்கி நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.  அந்த விளக்கின் அருகில் அமர்ந்து, போர்வையை போர்த்திக் கொண்டு, தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, அக்கா படித்துக் கொண்டிருந்தாள். நாஞ்சில் நாட்டு " வாடைக் காற்று பலாவை வாட்டி எடுத்தது " என்று. பொள்ளாச்சியில் ஒரு கிராமத்தின் தென்னந்தோப்பில் இருந்த எங்களின் வீட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்ககவி நுகர்ந்த அந்த பலாவின் வாசனை , அக்கா படித்த  புத்தகத்தின் வழியாக

குப்பை.....( அனுபவம் )

 வீடே குப்பையாக இருப்பதை உணர்ந்தேன். அடுக்கியிருந்த புத்தகங்களை தூசியை துடைத்து திரும்பவும் அடுக்கினேன்.நுண்ணிய தூசிகளை வெள்ளைத் துணியில் மட்டுமே உணர முடிந்தது. வெறும் பார்வை தரும் ஏமாற்றத்தை உணர்ந்தேன்.புத்தகங்கள் வெளிவந்த காலத்திற்கும் அதை நான் படித்த காலத்திற்கும் இருக்கும் கால இடைவெளிகளை இந்த மெல்லிய தூசிகளைப் போலவே துடைத்தெறிய முடிந்தால் ? பூஜை அறையின் கதவு கூட மெல்லிய எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தது.குத்துவிளக்கின் திரிகள் எண்ணெயை முடிந்த வரைக்கும் உறிஞ்சி ஒளி விட்டுக் கொண்டிருந்தன. எண்ணெய் இருந்த குத்துவிளக்கின் பகுதி பாசி படிந்த நிலையில் இருந்தது.சிக்கு பிடித்த எண்ணெய் வாசம் நாசியில் ஏறியது. எலுமிச்சை நீரை வெள்ளைத் துணியில் நனைத்து கதவையும், சாமி படங்களையும், குத்துவிளக்கையும் துடைத்தேன். கடவுளர்கள் அபிஷேகம் முடிந்த பளபளப்பில் அருள்பாலித்தனர்.  அவருடைய அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.எத்தனை பில் காகிதங்கள்.எழுத்துக்கள் எல்லாம் மறைந்து விட்டது. ஆனாலும் அதை செல்ஃபிலேயே வைத்திருக்கிறார். மொத்தமாக எடுத்து போடும் போது ஏடிஎம் மெசினை சுற்றியிருப்பதை போல இருந்தது. டைரிகளில் இரண்டு ப

மழை நாள்....(அனுபவம்)

  தலையில் வெள்ளை பாலிதீன் கவரை அணிந்து கொண்டு ஆடுகளை ஓட்டியபடி ஒருவர் சென்றார். பாலிதீன் கவர் மேல் மழைத்துளிகள்  நிறைந்திருந்தன.பால்  பாயசத்தில் தெரியும்  ஜவ்வரிசி போல இருந்தது. இரண்டு நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.செல் ஃபோன் சார்ஜ் இல்லாமல் அணைந்து எட்டு மணி நேரமாகிறது. பக்கத்து வீட்டு தோட்டம் தெளிவாக தெரிந்தது. எறும்புகள் வாழை மரத்தின் வேரின் அருகில் உள்ள தங்களுடைய இருப்பிடத்திற்கு சுறுசுறுப்பாகவும் சீராகவும் சென்று கொண்டிருந்தன.எறும்பின் இயக்கத்தை கூட பாதிக்காத வகையில் ஒரு மெல்லிய தூறல்.மழை பெய்து கொண்டிருப்பதை வாழை இலையில் நீர் நூலருவி போல் வழிவதை வைத்தே அறிய முடிந்தது.மழை எப்போது அழகாகிறது? வாழை இலையில் விழும்போது தான் என்று எண்ணிக்கொண்டேன்.அடுத்த கணமே அந்த வாழைக்கன்றை  ஓடி வந்த ஆடு மோதி விட்டு தாண்டி சென்றது.எதிர் வீட்டு அக்கா வந்து பால்காரர் வந்துட்டு போயாச்சா என்று பக்கத்து வீட்டு அக்காவிடம் கேட்டாள். பாருங்க்கா ஆடு முட்டி வாழக்கன்னு சாஞ்சிருச்சு என்று  கூறினாள் பக்கத்து வீட்டு அக்கா.  ஆமாங்கண்ணு  நானும் பால் டீ குடிச்சு நாலு நாள் ஆச்சு என்

நண்பகல்....(அனுபவம்)

 தெருவில் நாய்களும் நண்பகல் உறக்கத்தில் இருந்தன. வெயில் மட்டுமே தன்னந்தனியாக அலைந்து கொண்டிருந்தது. வெயிலை போன்ற சுதந்திரமான நிலை எனக்கு வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டிருக்கிறேன். சுதந்திரமான வாழ்க்கை தான் அபாயகரமானது என்பது வளர வளர புரிந்தது.எங்கேயோ ஒற்றைக் காகம் கரைந்து முடித்தது. மத்தியான நேரத்தில் தனியே கரையும் காகத்தின் குரல் , வீட்டை பார்த்து கொண்டு வீட்டிலேயே இருக்கும் பெண்களின் தனிமையை உணர்த்துவதாக இருந்தது.  இந்த பகல் பொழுது நீண்டு கொண்டே இருக்கிறது.அதை நீட்டிக்க விரும்பாமல் வெளியே வந்தேன்.காம்பவுண்டு சுவரில் காகத்திற்கு காலையில் வைத்த இட்லியில் அரை இட்லி காய்ந்திருந்தது.பிள்ளையார் கோவிலின் சாத்தப்பட்ட கம்பி கதவுகளின் மேல் வெயில் தெரிந்தது. பூனை ஒன்று சோம்பலாக நடந்து சென்றது.தெருவில் புழுதி கூட தூங்கிக் கொண்டிருந்தது. வாகனங்கள் ஏதுமில்லை.ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது இந்த நண்பகல்? தெருவில் இருக்கும் வீடுகளிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை.கைவிடப்பட்ட புராதனமான கிராமத்தில் தனியாக நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.எத்தனை வடிவமைப்புகளுடன் கூடிய வீடுகள்.வெயிலுக்கு துணையா

அதிகாலை....(அனுபவம்)

 இருள் மட்டுமே இருந்த அதிகாலை, எதிர் வீட்டில் இருக்கும் அக்கா பாத்திரத்தை கொண்டு வந்து வாசலில் வைத்து துலக்க ஆரம்பித்தார். வளையல்கள் பாத்திரத்தில் உராயும் ஓசையும் சல்சலென்று தண்ணீர் இரைத்து கழுவும் ஒலியும் இருந்தது.கழுவிய நீர் வளைந்து வளைந்து அவர்களின் கனகாம்பரச் செடிக்கு சென்றது.இருளில் அதன் சாம்பல் நிறம்  பாதரச  ஓடை போல் இருந்தது. பொழுது இன்னும் விடியவில்லை. நிறைய வீடுகளின் வாசற் கதவுகள் திறந்திருக்கவில்லை.காகங்களின் குரல் கூட இல்லை. அதிகாலைக்கென்றே ஒரு மணம் இருக்கிறது. அதை எந்த சமையிலிலாவது கொண்டு வந்து விட முடியுமா என்று நிறைய முறை சிந்திக்கிறேன். நம்முடைய உணர்வுகள் மணத்தை உருவாக்குகிறதா? இல்லை மணம் தான் உணர்வுகளை உருவாக்குகிறதா?  எதிர் வீட்டு அக்கா இப்போது வாசல் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். வீட்டினுள் வந்தேன். குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய உறுமல் மட்டுமே இருந்தது. நான் சுவர் கடிகாரம் மாட்டி வைப்பதில்லை.இருந்திருந்தால் அதனுடைய துடிப்பும் கேட்டிருக்கும். எனக்கு அதன் மேல் எப்போதுமே ஒரு ஒவ்வாமை இருப்பதுண்டு.காலம் ஓடுவதை விடாமல்