வீடே குப்பையாக இருப்பதை உணர்ந்தேன். அடுக்கியிருந்த புத்தகங்களை தூசியை துடைத்து திரும்பவும் அடுக்கினேன்.நுண்ணிய தூசிகளை வெள்ளைத் துணியில் மட்டுமே உணர முடிந்தது. வெறும் பார்வை தரும் ஏமாற்றத்தை உணர்ந்தேன்.புத்தகங்கள் வெளிவந்த காலத்திற்கும் அதை நான் படித்த காலத்திற்கும் இருக்கும் கால இடைவெளிகளை இந்த மெல்லிய தூசிகளைப் போலவே துடைத்தெறிய முடிந்தால் ?
பூஜை அறையின் கதவு கூட மெல்லிய எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தது.குத்துவிளக்கின் திரிகள் எண்ணெயை முடிந்த வரைக்கும் உறிஞ்சி ஒளி விட்டுக் கொண்டிருந்தன. எண்ணெய் இருந்த குத்துவிளக்கின் பகுதி பாசி படிந்த நிலையில் இருந்தது.சிக்கு பிடித்த எண்ணெய் வாசம் நாசியில் ஏறியது. எலுமிச்சை நீரை வெள்ளைத் துணியில் நனைத்து கதவையும், சாமி படங்களையும், குத்துவிளக்கையும் துடைத்தேன். கடவுளர்கள் அபிஷேகம் முடிந்த பளபளப்பில் அருள்பாலித்தனர்.
அவருடைய அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.எத்தனை பில் காகிதங்கள்.எழுத்துக்கள் எல்லாம் மறைந்து விட்டது. ஆனாலும் அதை செல்ஃபிலேயே வைத்திருக்கிறார். மொத்தமாக எடுத்து போடும் போது ஏடிஎம் மெசினை சுற்றியிருப்பதை போல இருந்தது. டைரிகளில் இரண்டு பக்கங்களில் ஒரு வரி மட்டுமே எழுதியிருந்தார். அது போன வருடத்து டைரி. இந்த வருடத்து டைரியிலும் ஒரே ஒரு வரி எழுதியிருந்தார்.
வீட்டை சுத்தம் செய்வதும் ஒரு வகை தியானம் என்றே தோன்றுகிறது. வீடு நம்முடைய மனதையே பிரதிபலிப்பதாகவே எண்ணுகிறேன்.
வீட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு நம் கை படுகிறதோ அந்த அளவிற்கு வீடும் மாறும். அம்மா மொழியில் " கை பட்டா தான் கண்ணாடி " .
வீட்டு சீலிங்கில் இருக்கும் ஒட்டடைகளை நிமிர்ந்து இன்று தான் பார்க்கிறேன். எட்டுக்கால் பூச்சி வலைகள் இருந்தன. ஒட்டடைகளை சுத்தம் செய்யும் போது தான் உணர்ந்தேன். நான் வானத்தை பார்த்தும் நிறைய நாட்களாகி விட்டதை.
சமையலறையின் ஷெல்ஃபில் , பருப்புகளும், கடுகும், சீரகமும் , மிளகாய் விதைகளும் ஒன்றிரண்டாக சிதறியிருந்தன. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டு ஒன்றையொன்று இடித்து கொண்டிருந்தன சம்படங்கள். சமைக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்வதே இல்லை. சுத்தம் செய்யும் போது தான் தெரிகிறது. சம்படங்களின்
மூடிகளை மிளகாய் அரைத்த கையுடன் திறந்திருக்கிறேன் போல, அதில் ஒட்டிய மிளகாய் காரம் காய்ந்து போயிருந்தது. ஷெல்ஃபுகளை சுத்தம் செய்து அனைத்தையும் வரிசையாக அடுக்கினேன்.வயலில் நிலக்கடலை செடிகளுக்கு களையெடுத்த பின் வரும் தோற்றம் போலிருந்தது.
மிக்சியை இப்படி அழுக்காகத்தான் பயன்படுத்துகிறேனா? நான் வாங்கும் போது எத்தனை வடிவங்களை தேடி, நிறங்களை தேர்வு செய்து வாங்கினேன். மிக்சியில் பரப்பு முழுவதும் அழுக்கு நீர் அங்காங்கே ஒட்டி வடுவானது போலிருந்தது . வேகத்தை மாற்றும் பட்டனில் பலவித கலர்களில் சட்னிகளின் கரை ஒட்டியிருந்தது. ஜார் மாட்டும் இடத்தில் கருப்பு நிற திரவம் காய்ந்து போயிருந்தது. துணியை வைத்து அதையும் சுத்தம் செய்த பின் மிக்சியின் உண்மையான நிறம் தெரிந்தது. மழைக்கு பின்னான செடிகளின் தோற்றம் போல இருந்தது.
சமைக்கும் பாத்திரங்கள், இவ்வளவையுமா தினமும் உபயோகப் படுத்துகிறேன்? இதில் எல்லாமே அதிகமாக இருப்பது போலவே தோன்றுகிறது. இரண்டு பேருக்கு மட்டுமே தேவைப்படும் பாத்திரங்களை எடுத்து தனியாக வைத்தேன். மற்ற பாத்திரங்களை எடுத்து கோணிப்பையில் வைத்து கட்டி பரணில் போட்டேன். கைக்கு எட்டும் படி இருக்கும் போது தான் அனைத்தையும் எடுத்து பயன்படுத்தி விடுகிறேன். இனிமேல் தேவையான பாத்திரங்களுடன் மட்டுமே சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்து போனபிறகு உடல் இலகுவாக மாறும் உணர்வைத் தந்தது இது.
ஃபிரிட்ஜில் சில காய்கறிகளைத் தவிர மற்றவற்றை காற்றோட்டமாக இருக்கும் படி தான் ஷெல்ஃபிலேயே வைத்திருப்பேன். வெங்காய சருகுகள் நிறைந்தும், பச்சை மிளகாய்கள் பழுத்து காயாமல் , பச்சை நிறத்திலேயே வற்றியும் போயிருந்தன. தக்காளிகள் முதல் பார்வையில் நன்றாக இருப்பதை போல இருந்தாலும் ஒன்றிரண்டு அழுகிப் போயிருந்தன.அதையும் சுத்தம் செய்து நன்றாக காற்று படும்படி பரப்பி வைத்தேன்.
நான் வீட்டில் பயன்படுத்துவது வாரத்திற்கு நான்கு செட் துணிகளும் வெளியே சென்றால் அதற்காக இரண்டு செட் துணிகளும், அதையே துவைத்து எப்போதும் பயன்படுத்திக் கொள்கிறேன். ஆனால் என்னுடைய கபோர்டில் அளவுக்கதிகமான துணிகள் இருக்கிறது. கல்லூரிகாலம் முதல் கொண்டு பயன்படுத்திய சுடிதார்களும், வேலைக்கு சென்ற பின் வாங்கிய விதவிதமான ஆடைகளும், திருமணத்திற்கு வாங்கிய ஆடைகளும் என மொத்தமாக அடைத்துக் கொண்டிருந்தது. முதலில் கல்லூரி காலத்தின் ஆடைகளை எடுத்து தனியாக கட்டைப்பையில் வைத்தேன். வேலைக்கு செல்லும் போது எடுத்த ஆடைகளும் நான் இப்போது இருக்கும் அளவிற்கு பொருந்துவதில்லை.
பொருந்தாத ஆடைகள் அனைத்தையும் எடுத்து தனியாக வைத்து , அவை அனைத்தையும் பழைய துணிகள் எடுக்க வருபவரிடம் கொடுத்து விட்டேன். பழைய துணிகளை எடுத்து என்ன செய்வார்கள் என்று கேட்க தோன்றவில்லை. இப்போது நான் பயன்படுத்தும் ஆடைகள் மட்டுமே இருந்தது.
வீட்டை முழுவதுமே சுத்தம் செய்து குப்பைகளை கோணிப்பையில் போட்டு ஒரு ஓரமாக தான் வைத்திருக்கிறேன் . ஆனாலும் அது வெளியே செல்லும் வரையில் வீடே கனமாக இருப்பதை போல தோன்றுகிறது .அத்தனை குப்பைகளும் என் மனதிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருப்பதை போல இருந்தது. குப்பை எடுக்கும் வண்டியின் விசில் சத்தம் விடுதலையின் நிமித்தமாக எனக்கு இப்போது கேட்டது. வீடே விசாலமானது போல இருந்தது.
- Manobharathi Vigneshwar