இந்தோ - கொரியன் கல்ச்சுரல் சென்டரில் செராமிக் பொருட்கள் செய்வது எப்படி என்ற வகுப்பில் கலந்து கொண்டேன். போட் கிளப்பில் அமைந்துள்ள இடம் ஏதோ ஒரு மலை பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு செல்வது போன்ற உணர்வை கொடுத்தது. நிலமெல்லாம் நீரால் கனன்று குளிர்ந்திருந்தது. கட்டிடத்தில் உள்ளே நுழைந்ததும் மெல்லிய எலுமிச்சை நறுமணத்துடன் ஏசியின் குளிர்காற்று நாசியில் ஏறியது. மஞ்சள் நிற சுடிதார் அணிந்த கொரியன் பெண் ஒருவர் வரவேற்று அமர செய்தார். எங்கேயும் நிழலே விழாதபடி வெளிச்சம் நிறைந்திருந்தது. வரவேற்பறையில் கொரியன் அழகுக்கலை , கட்டிடகலை மற்றும் இலக்கியம் சார்ந்த சஞ்சிகைகள் ஆங்கிலத்தில் இருந்தன. இலக்கியம் சார்ந்த சஞ்சிகை ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்த போது , வகுப்பு ஆரம்பம் என்று அழைத்தார்கள். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வகுப்பிற்குள் நுழைந்தேன்.
மொத்தமாகவே ஐந்து பேர் மட்டுமே. அதில் ஒரே ஒரு ஆண். களிமண் கொண்டு உருவங்களை செய்வது எப்படி என்ற அறிமுக வகுப்பு. அவர்கள் பயன்படுத்துவது நம் நாட்டில் கிடைக்கும் களிமண் இல்லை. அதனோடு சேர்த்து சீன மற்றும் கொரியன் களிமண்ணை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து செய்யப்பட்ட மண். முதலில் வெட்ஜிங் என்ற முறையில் மண் உருண்டையை தரையில் வைத்து உள்ளங்கையால் ஒரு பக்கத்தில் இருந்து அழுத்தி நீட்டி நீட்டி எடுக்க வேண்டும்.இது மண்ணில் உருண்டைகள் எதுவும் இல்லாமல் மையாக வைத்திருக்க உதவுகிறது.பிறகு ரோலிங் என்ற முறை இதில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி மாவு பிசைவது போல செய்து காளையின் முக அமைப்பில் மடிப்பு மடிப்பாக வர வைக்க வேண்டும். இது மண்ணில் உள்ள காற்று வெளியேற உதவும். நாம் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது காற்று உள்ளேயே இருக்கும்படி செய்வோம். பிறகு ஒரு உருளை போன்ற அமைப்பில் மண்ணை உருட்டி எடுக்க வேண்டும். ஒரு உள்ளங்கையில் வைத்து இன்னொரு உள்ளங்கையை பயன்படுத்தி மண்ணை உருண்டையாக மாற்றினோம். கட்டை விரலால் உருண்டையின் மேற்பரப்பில் அழுத்தினால் எந்த விதமான விரிசலும் இல்லாமல் மென்மையான விரல் பதிவானால் மண் நல்ல பக்குவத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
உருண்டையான மண்ணில் கட்டை விரலை வைத்து உள்ளே மெதுவாக வட்டமாக சுற்றிக்கொண்டே வந்து வெளிப்புறத்தில் நான்கு விரல்களால் மேலிருந்து கீழாக அழுத்திக்கொண்டே வந்த போது ஒரு பாத்திரம் ஒன்று எனக்கே தெரியாமல் என் கைகளில் உருவாகி வந்திருந்தது. சிறு துள்ளல் உள்ளத்திலிருந்து எழுந்து வந்து கொண்டே இருந்தது. கால் லிட்டர் பால் காய்ச்ச முடியும் அந்த பாத்திரத்தில் என்று தோன்றியது. எனக்கு பயன்படும் ஒரு பொருளை நானே செய்து கொண்டேன் என்ற பெருமை என் முகத்தில் ஒளிர்ந்தது என்றே நினைக்கிறேன். அடுத்து உங்களுக்கு விருப்பமான உருவங்களை செய்யலாம் என்றார்கள். உடனடியாக இரண்டு சிறு மண் உருண்டைகளை பொத்தென்று அடிப்பாகம் ஆக வைத்து, அதற்கு இரண்டிற்கும் நடுவில் மேலே இன்னொரு மண் உருண்டையை பெரிதாக வைத்து அதை உடலாக மாற்றினேன். தலைக்கு இன்னுமொரு சிறு உருண்டையை வைத்தேன். அடுத்து கைகளுக்கும் நீள் உருண்டையை வைத்தேன். தும்பிக்கைக்கு அடுத்து ஒரு சிறு நீள் உருளை. காதுகளுக்கு கொஞ்சம் மடங்கியவாறு ஒரு தட்டு போன்ற அமைப்பில் வைத்தேன். கீரிடம் போல ஒன்றை அமைத்து தலைக்கு வைத்தேன். பிள்ளையார் வந்துவிட்டார். அவருக்கான வாகனம் வேண்டுமே . குட்டி மூஞ்சூறு ஒன்றை செய்தேன். அதற்கான காதுகள் தான் மிக அழகாக உருவாகி வந்தது. இவ்வளவு எளிதாக செய்யும் வண்ணம் இருப்பதே முழுமுதல் கடவுள் என்று தோன்றியது.
மோட்டார் வைத்து சுற்றும் சக்கரத்தில் சிறு பானை ஒன்றை செய்வதற்கு சொல்லித் தந்தார்கள். சக்கரத்தின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறிய பெடல் போன்ற அமைப்பு இருந்தது. முதலில் கொஞ்சம் தண்ணீரை எவர்சில்வர் சக்கரத்தின் மேல் தெளித்து பக்குவமாக்கிய களிமண்ணை அதன் மையப்பகுதியில் பொத்தென்று அடிக்க சொன்னார். மெதுவாக சக்கரம் சுழல் ஆரம்பித்தது. கைகளை தண்ணீரில் நனைத்து விட்டு களிமண்ணை இரு கைகளாலும் பிடிக்க சொன்னார். கைகளுக்கு இடையில் மீன் போல வழுக்கி கொண்டே இருந்தது களிமண். இரு கைகளின் கட்டை விரலின் அருகே இருக்கும் உள்ளங்கை பகுதியை வைத்து அழுத்தும் போது மண் கீழ் நோக்கி சென்றது. சுண்டுவிரல் அருகே இருக்கும் உள்ளங்கை பகுதியை கொண்டு அழுத்தும் போது மண் மேலே உயரமாக வந்தது. மண்ணை பிடிக்கும் போது நம்முடைய மனமும் அதில் ஈடுபட்டால் மட்டுமே மண் நாம் நினைக்கும் வடிவில் வரும். உடல் சமநிலையில் இருக்க வேண்டும் என்றார் ஆசிரியர். பிறகு கட்டை விரலால் மண்ணின் நடுவில் மெதுவாக அழுத்திக் கொண்டு வந்து மற்ற நான்கு விரல்களை மண்ணின் வெளிப்புறத்தில் மெதுவாக அழுத்திக் கொண்டே வரவேண்டும். கண்முன்னே அழகிய சிறு குடுவை ஒன்று உருவாகியிருந்தது. சக்கரத்தின் வேகம் குறைந்து கொண்டே வந்தது. சக்கரத்தில் இருந்து குடுவையை எடுப்பதற்கு ஒரு டொயின் கயிறு கொண்டு அதை குடுவையில் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக வெட்டிக்கொண்டே வர வேண்டும். பின்னர் இரு சுண்டு விரல்களால் மெலிதாக பிடித்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
இந்த வகுப்பில் கற்றுக் கொண்டதை வைத்து அடுத்த முறை பிள்ளையார் சதூர்த்தி அன்று வீட்டிலேயே எனக்கான கடவுளை நானே செய்து கொள்வேன்.
Manobharathi Vigneshwar
11th Sep 2024