Skip to main content

டேபிள் டென்னிஸ் டோர்னமென்ட்....

 

டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி என்று என் கணவர் கூறியதும் நாம் செல்லலாம் என்றேன் நான். சென்னைக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அலுவலகம் சார்ந்த அமைப்புகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அண்ணா நகரில் இருக்கும் SBOA பள்ளிக்கு செல்வதற்கே எங்களுக்கு நாற்பத்தைந்து நிமிடம் ஆகும். இருந்தாலும் சென்று தான் பார்ப்போம் என சென்றோம். காலை 7 மணிக்கு SBOA பள்ளிக்கு சென்றால் , விளையாட்டு போட்டிகள் SBOA மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது என செக்யூரிட்டி கூறினார். அதுவும் ஒரு ஐந்து நிமிட பயணம் தான். 

SBOA மெட்ரிக்குலேசன் என் கணவருக்கு மனதளவில் நெருக்கமான வளாகம். அங்கே தான் அவர் பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு படித்தார். கிரவுண்டில் காரை பார்க் செய்துவிட்டு சுற்றிப் பார்த்தார். மனோ , இந்த கிரவுண்ட் எவ்ளோ பெரிசா இருக்கும் தெரியுமா ? இப்போ எப்படி இவ்ளோ குட்டியா இருக்கு ? வேற ஏதாச்சும் பில்டிங் கட்டிட்டாங்களோ ? என அந்த குட்டி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வந்தார். எனக்கு சிரிப்பாக வந்ததது. ஏங்க , அப்போ நீங்க சின்ன பையனா இருந்திருப்பீங்க அதனால் உங்களுக்கு இதே கிரவுண்ட் ரொம்ப பெரிசா தெரிஞ்சிருக்கும் என்றேன். பின்பக்கம் ரோடு தெரிவதை பார்த்துவிட்டு ஆமா மனோ இவ்ளோ தான் கிரவுண்ட் என்று ஏக்கமாக கூறினார். நம் உடலமைப்புக்கும், வயதிற்கும் நாம் காணும் பொருள்களின் அளவுகளுக்கும் இருக்கும் தொடர்பு எப்போதுமே என்னை வியப்படைய செய்வதுண்டு. சிறு வயதில் பெரிய வட்டலாக தெரிந்தது , வளர்ந்த பின் சிறு தட்டு போல தோன்றுவதை போல தான். காலத்திற்கும் அளவீடுகளுக்கும் உள்ள சமன்பாடு தான் என்ன? 


டேபிள் டென்னிஸ் நடக்கும் அரங்கிற்கு சென்றோம். மூன்று கோர்ட் கள் இருந்தன. ஏற்கனவே அங்கே சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஓ இது தான் டேபிள் டென்னிஸா ? என்று நான் கேட்க . ஏய்ய் இது கூட தெரியாம தான் போலாம் போலாம்னு சொன்னயா ? என்பதை போல என்னை பார்த்தார் என் கணவர். அவருடைய அலுவலக நண்பர்களை அடையாளம் கண்டு பேச ஆரம்பித்தார். நான் சென்று எப்படி விளையாடுகிறார்கள் என பார்த்து நானும் விளையாடி பார்த்தேன். 

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான ஜோடியை அறிவித்தார்கள். நானும் திவ்யா  மேடமும் ஜோடி. திவ்யா  மிக உற்சாகமாக இருந்தார். எனக்கு எப்படி விளையாட வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். அதற்குள் பிரேக் பாஸ்ட் ரெடி என அறிவிப்பு வந்தது . சாப்பிட்ட பின் விளையாடுவோம் என நான் சொல்ல ,  இல்லை நான் இங்கே இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க என்றார் திவ்யா 

இட்லி, ரவா கிச்சடி , உளுந்து வடை , சட்னி , சாம்பார் என வைத்திருந்தார்கள். கூடவே காபி , டீ யும் இருந்தது. இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு திரும்பவும் அரங்கிற்கு சென்றேன். விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. அடுத்து நானும் திவ்யாவும் சேர்ந்து விளையாட வேண்டும். என்னென்ன ரூல்ஸ் என திவ்யா  பரபரப்பாக கூறினார்.  

எலுமிச்சை சைசில் வெண்ணிறமான பந்து. அடிப்பதற்கான பேட்டின் அமைப்பு ,  பேப்பர் விசிறி செய்து பிடிப்பது போல இருந்தது. ஆனால் சற்று கனமாக இருந்தது. முதலில் பேட்டால் பந்தை அடிக்கும் போது நம் முன் இருக்கும் டேபிளில் பட்டு குதித்து அடுத்து வலையை தாண்டி இன்னொரு முறை குதிக்க வேண்டும். அப்படி குதித்தால் மட்டுமே எதிரில் அதாவது பந்தை டையாக்னாலாக இருப்பவரிடம் தான் முதலில் போட வேண்டும். அப்படி குதித்து வரும் பந்தை எதிராளி அடிக்கவில்லை என்றால் எங்களுக்கு ஒரு பாயிண்ட். ஒரு வேளை பந்து குதிக்காமல் டேபிளை தாண்டி விழுந்துவிட்டால் அந்த டேபிளின் அருகில் இருப்பவருக்கு ஒரு பாயிண்ட். 

இதெல்லாம் சரியாக புரிந்தும், புரியாமலும் முதல் விளையாட்டை விளையாடினோம். நிறைய தவறுகள் நடந்து யாருக்கு என்ன மதிப்பெண் என தெரியாமலே நான் விளையாடி முடித்தேன். முடித்த போது அந்த சுற்றில் நாங்கள் வெற்றி பெற்றோம் என கூற எனக்கு வியப்பாக இருந்தது. திவ்யா  மிக மகிழ்ச்சியாக இருந்தார். விளையாட்டில் என்ன நடந்தது என விளக்கினார். அப்போது தான் விளையாட்டே எனக்கு புரிந்தது. இப்பவாச்சும் போயி சாப்டுட்டு வாங்க என்றேன். சிரிப்புடன் சென்றார் திவ்யா . அடுத்த சுற்று விளையாட்டில் எதிரணியினர் வெற்றி பெற்றார்கள். ச்சே சாப்டுட்டு வந்ததனால சரியா விளையாட முடியல என்று திவ்யா  கூறினார். ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். 

என் கணவரும் அவருடைய நண்பரும் அவர்களுடைய எதிரணியினருடன் விளையாடிய போது வேடிக்கை பார்த்தேன்.  அங்கே விளையாட்டு வேறொரு பரிணாமத்தில் இருந்தது. முதலில் சாதரணமாக ஆரம்பித்து அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அது விளையாட்டு என்பதை மறந்து ஏதோ போர்க்களத்தில் இருப்பவர்கள் போல மாறியிருந்தார்கள். மனிதர்கள் எதற்காக இவ்வளவு மனவேகம் கொள்கிறார்கள். அது விளையாட்டு தான் என தெரிந்தாலுமே? போரில்லாத சமயங்களில் ராணுவத்தினரை ஆக்கப்பூர்வமாக வைத்துக் கொள்ள கொண்டுவரப்பட்டதே விளையாட்டு போட்டிகள் என படித்திருக்கிறேன். இங்கே சாதரண மனிதர்களுக்கும் போர் மனநிலையை கொடுப்பதற்கே விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன எனத் தோன்றுகிறது.

 மும்முரமாக விளையாடிய போது என் கணவரே வேறொரு ஆளாக மாறியிருந்தார். எதற்காக அத்துனை ஆவேசம் ? நான் இதுவரை பார்த்திராத முகம் அது. கூர் முனைப்புடன் கூடிய ஆவேசமும் பதட்டமும் என்ன தான் தருகின்றன மனிதர்களுக்கு ? விளையாட்டு முடிந்து வெளியே வந்த போது அவ்வளவு ஈடுபாட்டுடன் விளையாடிய என் கணவரை விட நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். 

விளையாட்டை விளையாட்டாக பார்த்தது நான் மட்டும் தான் என்பதை என் கணவர் விளையாடிய போது அறிந்து கொண்டேன்.  தவறில்லாமல் விளையாடினால் வெற்றி பெற்று விடலாம். தேவையில்லாத ஆவேசமும் , மனவேகமும் அவசியம் இல்லை என்பதையே நான் விளையாடியதில் புரிந்து கொண்டேன். 

- Manobharathi Vigneshwar
  Raja Annamalaipuram
  11-11-2024