Skip to main content

கத்துங் குயிலோசை.......

 


பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது க்வாக்கி க்வாக்கி என்ற கடுமையான புதிய குரல் ஒன்றை கேட்டு பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தேன். நெல்லிக்காய் மரத்தின் இரண்டாவது கிளையில் அமர்ந்திருந்தது ஒரு பறவை . ஃபோல்கா புள்ளிகள் அதன் தேகம் முழுவதும் கருப்பு வெள்ளையாக இருந்தன. திரும்பவும் அதே போன்ற ஒரு கத்தல். காகத்தின் குரலில் கூட ஒரு அழைப்பு இருக்கும். இந்த பறவையின் குரல் எதையோ ஆணையிடுவது போல , கொஞ்சம் கடுமையாக இருந்தது. 



அடுத்த நொடியே தொட்டு கண் மை இட்டுக் கொள்ளலாம் என்ற வண்ணத்தில் முழுமையான கருமையுடன் சிவப்பு மணி கண்களை உருட்டியபடி பலா மர கிளையில் வந்தமர்ந்தது இன்னொரு பறவை. ஃபோல்கா புள்ளி பறவையின் கத்தல் அமைதியாகியது. பலா மரத்தில் இருந்த பறவை தன்னுடைய சிவந்த வாயை திறந்தது. முதலில் க்வாக்கி என்ற சத்தத்தை கொடுத்து பிறகு க்கூ , க்க்கூ என்று கூவ ஆரம்பித்தது.  குரலை வைத்து தான் அது குயில் என்பதையே தெரிந்து கொண்டேன்.


 நாலைந்து முறை கூவி விட்டு பலாமர கிளையிலிருந்து , நெல்லிக்காய் மர கிளைக்கு பறந்தமர்ந்தது. ஃபோல்கா புள்ளி பறவை மேலும் உயர்ந்த கிளையில் பறந்தமர்ந்தது. திரும்பவும் குயில் கூவ ஆரம்பித்தது. இருமுறை கூவி விட்டு சட்டென்று பறந்து மறைந்தது. போல்கா புள்ளி பறவை இன்னமும் அதே இடத்தில் அமர்ந்திருந்தது எந்த சத்தமும் இல்லாமல். நான் வேகமாக செல்ஃபோனில் அதை படம் பிடித்தேன். இரண்டாவது படம் எடுக்கும் போது சட்டென்று பறந்து விட்டது. என்ன பறவையாக இருக்கும் என்று கூகிள் லென்சில் போட்டு தேடினேன். ஆசியன் குயில் என்று வந்தது. பெண் குயில் தான் ஃபோல்கா புள்ளிகள் கொண்டது. ஆண் குயில் கண் மை நிறம் கொண்டது. ஆண் குயிலின் குரலே குயிலின் குரலாக இது வரை அறிந்து வந்திருக்கிறேன். ஏன் ஆண் மயில்களுக்கு மட்டுமே அழகிய தோகை ? ஆண் குயிலுக்கு மட்டுமே ஏக்கமான  குரல் ?. 

முட்டை வைப்பது மட்டுமே பெண் குயிலின் வேலை . அதுவும் காகத்தின் கூட்டில் சென்று. காகத்தின் கூட்டில் குஞ்சு பொரித்து வெளியே வரும் குயில் குஞ்சுகள் காகத்தை போலவே இருக்கும் வரையில் காகமே இரை ஊட்டுகிறது. எப்போது அது குயிலாக மாறுகிறதோ அப்போது காகத்தின் கூட்டில் இருந்து துரத்தி விடப்படுகிறது. இதுவே காலம் காலமாக நடந்து வருகிறது. பறவைகளில் காகத்திற்கு தான் அறிவு அதிகம் என்று படித்திருக்கிறேன். ஆனால் தன்னுடைய கூட்டில் யுகங்களாக ஏமாற்றி வரும் குயிலின் முட்டையை இனங் காணத் தெரியாமல் இருப்பது எப்படி என்றே தெரியவில்லை. பரிணாம வளர்ச்சியில் என்ன தான் நடக்கிறது?

இன்று பாரதியாரின் கத்துங் குயிலோசை என்ற வரி மரபுவழு இல்லை என்று மட்டும் உறுதியாகியது. பெண் குயில் கத்தத் தான் செய்கிறது. அது கத்துவதால் தான் ஆண் குயில் வந்து இனிமையாக கூவுகிறது. பாரதி எவ்வளவு தூரம் இயற்கையையும் , பறவைகளையும் கவனித்திருக்கிறார் என்று வியப்பாக இருந்தது. அதன் பிறகு வந்தவர்கள் எப்படி கத்துங் குயிலோசை மரபுவழு என்று கூறினார்கள்? வெறுமே கண்ணாடி அறைகளுக்குள் அமர்ந்து விவாதம் செய்தவர்களால் தான் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியும். 

கத்துங் குயிலோசை திரும்பவும் தொடங்கியது பலா மரத்தில். நான் இங்கே தான் இருப்பேன் என்று தன்னுடைய அடையாளமாக இறகு ஒன்றை உதிர்த்து சென்றது பெண் குயில். 



Manobharathi Vigneshwar
Raja Annamalai Puram
15th September 2024