Skip to main content

பூத்தொடுத்தல்....(அனுபவம்)

 கயிறுகளை வைத்து முடிச்சு போடும் பழக்கம் மனிதர்களுக்கு எப்படி வந்திருக்கும்? 

சிறு வயதில் பூ தொடுப்பதை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் பூக்களை இரண்டிரண்டாக எடுத்து தரும் பெரிய பொறுப்பை  கொடுத்து பூ தொடுப்பதை பற்றிய அறிவை தரமறுத்து விட்டனர். பக்கத்து வீட்டு அக்கா பூ தொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். கைவிரல்களை லாகவமாக வளைத்து , திருப்பி , இழுத்து என விரல்களில் நூலை வைத்து ஒரு நடன அசைவை கொண்டு வந்து தியான நிலையில்  பூ தொடுப்பதை பார்க்கும் போது ஆசையாக இருந்தது. நானும் ஒரு நாள் இதைப்போல் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த அக்காவின் அருகில் சிறுமி ஒருத்தி பூக்களை இரண்டிரண்டாக எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தாள். 

அம்மா எப்போதுமே கூறும் வார்த்தைகளில் ஒன்று " கண்ணு பாத்தா , கையி செய்யணும் " என்று.

அந்த வார்த்தைகளை  நினைவில் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி எதையுமே செய்ய முயற்சித்ததில்லை. இன்று முயன்று பார்த்துவிட ஆசை வந்தது. 

பூக்களை வீணாக்க மனது வரவில்லை. காகிதங்களை வைத்து கட்டிப் பழக முடிவு செய்தேன். அந்த அக்காவின் அருகிலேயே அமர்ந்து கவனித்தபின் தொடங்கினேன்.

நூலை இடது கையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே பிடித்துக் கொண்டேன். காகிதத்தின் நடுப்பகுதியை நூலில் வைத்து வலது கையின் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே அதே நூலை பிடித்துக் கொண்டு காகிதத்தின் நடுப் பகுதியை கீழிருந்து ஒரு சுற்று சுற்றினேன். அதே நூலை, வலது கையின் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் ஆங்கில எழுத்து V போல வைத்து நூலை இரண்டு விரல்களுக்கும் மேலாக சுற்றி இழுத்து, நூலின் பகுதி, நடுவிரலின் உள் பகுதிக்கு வரும் போது, கட்டை விரலால் அதை அழுத்தி பிடித்துக் கொண்டு, அந்த வளையத்தில்  காகிதத்தின் தலைப்பகுதியை விட்டு, நடுப்பகுதியில்‌ நூலை முடிச்சிட்டேன். காகிதம் நூலில் கட்டப்பட்டுவிட்டது. இவ்வளவு நேரமும் மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததை உணர்ந்து, இலகுவாக மூச்சு விட்டேன். 

இதே முறையை பின்பற்றி நான்கு காகிதங்களை முடிச்சிட்டேன். மூன்று விரல்களும் ஒன்றையொன்று புரிந்து கொண்டு , ஒரு முறை விலகி, ஒரு முறை நெருங்கி, ஒரு முறை தள்ளி நின்று என பூ தொடுக்கும் வேலையை செய்கின்றன. செய்யும் அனைத்து சிறு செயல்களிலும் ஒரு சமுதாயத்தின் கட்டமைப்பை உணர முடிகின்றது. விரல்களுக்கான உரையாடல்கள் என்னவாக இருக்கும்? 
      
பூக்களை வைத்து கட்டத் தொடங்கினேன். இரண்டிரண்டாக நானே எடுத்து வைத்துக் கொண்டேன். மேல் பகுதியில் வைக்கும் பூவையே முதலில் நூலில் வைத்தேன். கீழ்ப்பகுதியில் வைக்கும் பூவின் காம்பை மேல்பகுதியில் வைத்த பூவின் முகத்தில் வைத்து இடது கையின் கட்டை விரலால் பிடித்துக் கொண்டேன்.  வலது கை விரல்களை வைத்து நூலை முடிச்சிட்டேன். காகிதத்தில் இறுக்கியது போல பூவை இறுக்காமல், மெல்லிய முடிச்சிட்டேன். சில  பூக்களின் காம்புகள் வதங்கியிருந்தன. நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து காம்புகள் உறுதியான பின்பு எடுத்து கட்ட ஆரம்பித்தேன். அவ்ளோதான் எந்தவொரு வேலையா இருந்தாலும் ஆர்வம் இருந்தா அரைமணி நேரத்தில கத்துக்கலாம் என்றார் பக்கத்து வீட்டு அக்கா . 

புதிதாக ஒரு விசயத்தை கற்றுக்கொள்ளும் போது வரும் மகிழ்ச்சியை அப்படியே தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். செயலில் இருக்கும் இன்பத்தை விட , அதை கற்றுக் கொள்ளும் போது வரும் இன்பமே முதன்மையானது. ஒவ்வொரு முறையும் செயலில் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளாத வரை செயல் இன்பம் அளிக்கப் போவதில்லை என்று தோன்றியது.

_ Manobharathi Vigneshwar