Skip to main content

பூங்கா வாசகம்....

 

       இன்று பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துக் கொண்டே நடந்தேன். 


அதில் சீராக சிந்தனை செய் , விரைவாக செயல்படு என்ற வாசகம் சிறு வெளிச்சம் போல அறுபட்ட எண்ணங்களை இல்லாமலாக்கியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? நடந்து கொண்டிருக்கிறேன். பூங்காவில் இருக்கும் நபர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். மனதில் பலவகையான எண்ணங்களை தொடர்பில்லாமல் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் நான் எங்கே இருக்கிறேன்? இதுவரைக்கும் எண்ணங்கள் தான் சிந்தனைகள் என்று நினைத்திருந்தேன். ஒரு எண்ணத்தில் இருந்து இன்னொரு எண்ணத்திற்கு மனம் தாவிச் செல்கிறது. இதை நான் ஏதோ ஒரு அதிமேதாவித்தனம் என்று தான் நம்பியிருக்கிறேன். ஆனால் இந்த வாசகம் அதை ஒரு குப்பை கூடம் என கூறிவிட்டது.

Sakamoto என்ற ஒரு ஜப்பானிய கார்ட்டூன் சீரிஸ் ஒன்றை  விக்னேஷ்வர் பார்த்து வருகிறார். வன்முறை சார்ந்தது தான். ஆனால் அதில் சில நல்ல எபிசோடுகள் வரும் போது என்னை பார்க்க சொல்வார். அதில் வரும் நாயகன் பெயர் Sakamoto. அவனை கொல்வதற்காக நிறைய பேர் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அதில் ஒருவன் Mind reading செய்யக்கூடியவன். எதிராளி அடுத்த என்ன செய்யப் போகிறான் என அவனுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டு வெற்றி பெற்று விடுவான். அவன் Sakamoto-வை தேடி வருகிறான். Sakamoto அமைதியாக ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறான். இளைஞன் Sakamoto- எண்ணங்களை தெரிந்து கொள்ளும் சக்தியை பிரயோகிக்கிறான். ஒன்றுமே கேட்கவில்லை. இதைப்போல ஐந்து முறை முயற்சி செய்து பார்க்கிறான். எதுவும் கிடைக்காமல் போகவே தன்னுடைய சக்தியை சந்தேகப்படுகிறான். அதே சூப்பர் மார்க்கெட்டில் மற்றொரு மனிதனின் எண்ணங்களை படிக்க முயல்கிறான். காய்கறிகள் விலை அதிகமாகிவிட்டது. டீவியில் இன்று என்ன நிகழ்ச்சி இருக்கும்? நாளை நான் வெண்ணிற சட்டை அணியப் போகிறேன். மனைவி வீட்டுக்கு வந்திருப்பாளா ? என்ற குழப்பமான தொடர்பற்ற எண்ணங்களை கொண்டிருக்கிறான் அந்த மனிதன் . சக்தியை உறுதி செய்து கொண்ட இளைஞன் Sakamoto -வை மறைந்திருந்து தாக்க முயற்சிக்கிறான். அவன் எரியும் கத்தியை Sakamoto - பார்க்காமலேயே பிடித்து விடுகிறான். இளைஞனுக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. திரும்பவும் Sakamoto- வின் எண்ணங்களை படிக்க முயற்சி செய்கிறான்.எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த நொடியே Sakamoto இளைஞனை தாக்கி விடுகிறான். இது எப்படி சாத்தியம்? Sakamoto யோசிப்பதே இல்லையா ? எண்ணங்களே இல்லாத மனிதர்கள் உண்டா ? எந்த எண்ணங்களும் இல்லாமல் எப்படி ஒரு மனிதனால் இவ்வளவு விரைவாக செயல்பட முடியும் ? என்ற ஆச்சர்யத்துடன் மயக்கமடைகிறான் இளைஞன். இதை பார்த்து முடித்த பின் கதாநாயகனாக காட்ட இதுவெல்லாம் தேவை தான்! என்ற முடிவுக்கு வந்தேன். 

ஆனால் இன்று பூங்காவில் படித்த வாசகம் எண்ணங்கள் வேறு சிந்தனைகள் வேறு என்று கூறிவிட்டது. எண்ணங்கள் இல்லாமல் ஒரு ஐந்து நிமிடம் நம்மால் இருக்க முடியுமானால் அதுவே வாழும் நிமிடங்கள் எனத் தோன்றுகிறது.அதைத் தானே நம்முடைய ஞானிகளும், யோகிகளும் கண்டடைந்தது. வெறும் எண்ணங்களை மட்டுமே கொண்டவர்கள் சாமானியர்கள். எண்ணங்களை திரட்டி சிந்தனைகளாக மாற்ற முடிந்தவர்களே பெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள். 

சிந்தனை சீராக இருக்க வேண்டும் என்பதே ஒரு பயிற்சி தான். அந்த பயிற்சியை செய்தால் மட்டுமே நாம் சிந்தனைகளை தொகுத்துக் கொள்ள முடியும். அப்படி தொகுத்துக் கொண்ட சிந்தனைகளை வைத்தே விரைவாக செயல்பட முடியும். அதன் மூலமே எந்தவொரு துறையிலும் முதன்மையாக இருக்க முடியும் . அது தான் வையத் தலைமை கொள்வது ! 


Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
18-08-2025