Skip to main content

வெந்தயக்கீரை....

 அம்மியில் வைத்து அரைத்தால் நொறு நொறுவென சத்தத்துடன் மாவாக மாறும் தன்மையுள்ளதாக இருந்தது வெந்தயம்.‌மெல்லிய கசப்பு மணம் அதை மேலும் வசீகரமுள்ளதாக்கியது.

கைப்பிடி அளவு வெந்தயம் எடுத்து சிறு பாத்திரத்திலிட்டு கழுவினேன். நீர் மங்கலான மஞ்சள் நிறத்தில் சிறு தூசிகளுடன் உடையதாக ஆகியது. திரும்பவும் ஒரு முறை நீர் விட்டு கழுவினேன். கண்ணாடிக்குள் வெறுமனே வைத்தது போல் வெந்தயம் நீரில் மூழ்கியிருந்தது. இரவில் அதை மூடி வைத்துவிட்டு உறங்கிப்போனேன். 

மறு நாள் காலையில் வந்து பார்த்த போது தன்னால் குடிக்க முடிந்த அளவு நீரை உள்வாங்கி வளமான மினுமினுப்புடன்  வெந்தயம் அளவான புன்னகையை காட்டியது. நீர் அடர்த்தியான பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் மெலிதான ஆடைகட்டி இருந்தது. திரும்பவும் நீர் விட்டு அலசி வடிகட்டினேன். முத்துக்கள் போல துணியில் அல்லாடியது வெந்தயம். 

தென்னை மரத்தின் வேரின் அருகில் சிறு பள்ளம் பறித்தேன்.  மண்ணை தன் உடல் முழுதும் இறுக்கமாக பூசிக் கொண்ட சிறு சிறு கற்களாக வந்தன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சுண்டுவிரல் அளவான சிறு பள்ளத்தில் ஊறிய வெந்தயத்தை பரப்பினேன். அதன் மீது பறித்தெடுத்த மண்ணை மேலோட்டமாக பொலபொலவென தூவினேன். பள்ளம் மண்ணால் மூடப்பட்டதும் அதன் மேல் இரண்டு கைப்பள்ளம் தண்ணீர் இறைத்தேன் . 

விதைத்த மண் மட்டும் மேலெழுந்து பொறுக்கு தட்டியது போல இருந்தது மறுநாள். மேலும் இரண்டு கைப்பள்ளம் நீரை தெளித்து விட்டு வந்தேன். இரண்டாம் நாள் காலையில் எழுந்ததும் ஓடிவந்து பார்த்தேன். பொறுக்கு தட்டியிருந்த மண் திசைக்கொன்றாக தெறித்து சிதறியிருக்க சிறு பள்ளத்தில் வெண்ணிறத்தில் முளைவிட்டு , பழுப்பு நிறத் தொப்பி அணிந்து  விடுதலை உணர்வுடன் மூச்சை நிதானமாக விட்டுக் கொண்டிருந்தன வெந்தயப்பயிர்கள். ஒரு கணம் பிரவ்னி என்ற நாய்க்குட்டி வந்து பறித்ததோ எனத் தோன்றியது. ஆனால் மண் வெடித்து சிதறியிருந்த விதத்தை பார்த்து போது உள்ளிருந்த கூட்டு உயிர்விசையினால் மட்டுமே இது சாத்தியம் என உவகை கூடியது.  திரும்பவும் சிதறியிருந்த மண்ணை எடுத்து வெந்தயப்பயிர்களின் மேல் மெலிதாக மூடினேன். ஒரு கைப்பள்ளம் தண்ணீரை தெளித்து விட்டு வந்தேன். 

மறுநாள் பழுப்பு நிற தொப்பியை உதறிவிட்டு துளிர்  இலைகளுடன் கீழே விழுந்து மண் அப்பியதை துடைக்க எத்தனிக்கும் சிறு பிள்ளைகள் போல தலையில் ஒட்டியிருந்த மண்ணை உதிர்க்க முயற்சித்தன. அடுத்த வந்த நாட்களில் இலைகள் நன்றாகவே வளர்ந்து சிறு நீள்வட்ட வடிவில் இருந்து மாறி வட்டமாக வெந்தயக்கீரை போலவே வளர்ந்து விட்டன. 

பருப்பில் போட்டு குழம்பு வைக்க வேண்டும் என்று தான் வளர்த்தேன். இப்போது பறிக்கவும் மனமில்லாமல் அப்படியே விடவும் மனமில்லாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். 

Manobharathi Vigneshwar
Raja Annamalai Puram
01- 07- 2024