மாமரத்து கிளைகளும், இலைகளும் தாழ்வாரத்து நிழலுடன் பொறுமையாக நகர்ந்து அமைதியாக தங்களுடைய இருப்பிடத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்தன. நிழல்கள் சில சமயங்களில் தாவி வரும் முயல்களை போல நிலத்தை ஆக்கிரமிக்கின்றன. சில சமயங்களில் மெதுவாக நகரும் ஆமைகளை போல. சில சமயங்களில் காலை மிருதுவாக வருடி கொடுக்கும் வாய்க்கால் நீரின் சிற்றலைகள் போல.மற்றும் சில சமயங்களில் அசை போடும் மாட்டை போல. கோலம் போட்டிருக்கும் போது விழும் நிழல், ஆற்றில் சிறு பாறைகளின் மீது கால் வைத்து நடக்கும் இளம் பெண்களை போல சிலிர்ப்புடனும், சிரிப்புடனும் நகர்கின்றன.பூஜைக்கான பித்தளை சாமான்களை கழுவி கவிழ்த்திருக்கும் போது அதில் முகம் காட்டி அழகு பார்த்துக் கொள்கின்றன. விக்னேஷ்வர் செய்தித்தாள் படிக்கும் போது தாழ்வாரத்து நிழலும் உடன் படிக்கிறது. அப்போது அவை இருக்கின்றனவா இல்லையா எனும் படி அவருடன் ஒன்று கலந்து விடுகின்றன.நான் துணி காய போடும் போது கண்ணாமூச்சி விளையாடுகின்றன நிழல்கள் . நாங்கள் இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது எங்களின் மேல் விழும் நிழல் அசையாமல் நிற்கும் யானையை போல இருக்கிறது. எங்களுடைய குழந்தைகளுக்கு என்ன விளையாட்டுக்களை வைத்திருக்கும் தாழ்வாரத்து நிழல்?
நான் அலுவலகம் செல்லும் நாட்களில் நிழல்கள் எப்படி இருக்கும்? என்ன பேசிக் கொள்ளும்?அழகிய தனிமை என தங்களுக்குள் கொண்டாடுமா? தன்னை கவனிக்க ஆள் இல்லை என ஏங்குமா? மனிதர்களுக்காகவா இயற்கை தன் நாடகத்தை நடத்தும்? எல்லாமே தனக்காக தான் நடக்கிறது என்று சிலாகித்து கொள்கிறது மனித மனம். தாழ்வாரத்து நிழல் என்னுடைய பொழுதுகளை உருவாக்குகிறது. அதனுடைய இருப்பை போல தான் எனக்கான பொழுதுகளை நான் உருவாக்குகிறேன் என தோன்றுகிறது.
Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
18-12-2024