Skip to main content

பக்கத்து வீட்டுக்காரம்மாவின் பாத்திரம்.....

 

நாம் புழங்கும் பொருட்கள் நம்முடைய முகமாகவே மாறி விடுவதன் மாயத்தை எண்ணி புன்னகை வந்தது. பக்கத்து வீட்டுக்காரம்மா பலகாரம் கொடுத்து விட்ட பாத்திரம் நம் வீட்டில் அந்நியமாகவே தெரிவது எப்படி ? வீட்டின் பாத்திரங்கள் அதை ஏற்றுக் கொள்வதேயில்லை. நான் எப்போது வீட்டுக்கு செல்வேன்? என்று ஏக்கத்துடனும் , பரிதவிப்புடனும் இருக்கும் பால்வாடி குழந்தையை போல இருக்கிறது அது. 


அதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதில் நானும் ஏதேனும் பலகாரத்தை போட்டு தான் கொடுக்க வேண்டும். 


இரும்பு வடசட்டியை எடுக்கும் போதெல்லாம் பெரியம்மாவின் சாயல் தெரிகிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக என் அம்மா அதை பயன்படுத்தி வந்திருந்தாலும் அம்மாவின் சாயலை அதில் நான் ஒரு போதும் கண்டதில்லை. 
அம்மாவிற்கு பெரியம்மா கொடுத்த நல்ல கனமான இரும்பு வடசட்டி. திருமணத்துக்கு பிறகு அம்மாவின் வீட்டுக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் சூட்கேசில் வைத்து தூக்கி கொண்டு வந்தேன். பெரியம்மா எனக்காகவே அம்மாவிடம் கொடுத்தாள் என்று எண்ணுகிறேன். 

வடசட்டி சூடாக ஆரம்பித்தது . நிலக்கடலையை எடுத்து போட்டேன். தீயை மிதமாக வைத்தேன். முதலில் நிலக்கடலையின் தோல் சிவக்கத் தொடங்கியது.தோசை கரண்டியை வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருந்தேன்.  மெதுவாக நிலக்கடலையின் வறுபடும் மணம் வர ஆரம்பித்தது. சில கடலைகள் வெடிக்க ஆரம்பித்தன. தீ இன்னமும் மிதமாகவே இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அடுப்பை அணைத்து விட்டு தட்டில் நிலக்கடலையை கொட்டினேன். அதனுடைய சூட்டினால் எவர்சில்வர் தட்டு சத்தம் கொடுத்தது. கடலைகள் சவுக்சவுக்கென்று இருந்தன. ஆறினால் தான் மொடுக் மொடுக்கென்று இருக்கும். ஆறியபின் முறத்தில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். உள்ளங்கையை நிலக்கடலைகளின் மேல் வைத்து மெதுவாக தேய்க்க ஆரம்பித்தேன். மிதமான சூட்டுடன் நிலக்கடலை தோல்கள் வர ஆரம்பித்தன. முறத்தில்  எடுத்து புடைத்தேன். அழகாக நிலக்கடலை தோல்கள் முறத்தின் ஓரத்திற்கு வர, வெண்ணிற மணிகள் போல நிலக்கடலைகள் மற்றொரு புறம் இருந்தன. எனக்கும் முறத்தில் புடைக்க தெரியும் என்பதை இப்போது தான் நானே உணர்கிறேன்.  சிறு வெற்றிக் களிப்புடன் நிலக்கடலையை மிக்சியில் போட்டேன். கூடவே வெல்லத்தையும் சேர்த்தேன்.உதிரி மாவாக வரும் என எதிர்பார்த்திருக்க உருண்டை பிடிக்கும் பக்குவத்தில் வந்தது கலவை. சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்தேன். சொன்ன பேச்சை கேட்டு அமைதியாக அதே இடத்தில் அமர்ந்திருந்தன அவை. 

பரிதவிப்புடன் இருக்கும் பாத்திரத்தில் நிலக்கடலை உருண்டைகளை நிறைத்து , பக்கத்து வீட்டுக்காரம்மாவிடம் சென்றேன். எதுக்கு இதெல்லாம் என்ற சிரிப்புடன்  வாங்கி உணவு மேசையின் மீது வைத்தாள் அவள். அதன் வீட்டில் கம்பீரமாக என்னை பார்த்து புன்னகைத்தது அந்த பாத்திரம். 

- Manobharathi Vigneshwar
  Raja Annamalaipuram
  29-07-2025