தலையில் வெள்ளை பாலிதீன் கவரை அணிந்து கொண்டு ஆடுகளை ஓட்டியபடி ஒருவர் சென்றார். பாலிதீன் கவர் மேல் மழைத்துளிகள் நிறைந்திருந்தன.பால் பாயசத்தில் தெரியும் ஜவ்வரிசி போல இருந்தது. இரண்டு நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.செல் ஃபோன் சார்ஜ் இல்லாமல் அணைந்து எட்டு மணி நேரமாகிறது. பக்கத்து வீட்டு தோட்டம் தெளிவாக தெரிந்தது. எறும்புகள் வாழை மரத்தின் வேரின் அருகில் உள்ள தங்களுடைய இருப்பிடத்திற்கு சுறுசுறுப்பாகவும் சீராகவும் சென்று கொண்டிருந்தன.எறும்பின் இயக்கத்தை கூட பாதிக்காத வகையில் ஒரு மெல்லிய தூறல்.மழை பெய்து கொண்டிருப்பதை வாழை இலையில் நீர் நூலருவி போல் வழிவதை வைத்தே அறிய முடிந்தது.மழை எப்போது அழகாகிறது? வாழை இலையில் விழும்போது தான் என்று எண்ணிக்கொண்டேன்.அடுத்த கணமே அந்த வாழைக்கன்றை ஓடி வந்த ஆடு மோதி விட்டு தாண்டி சென்றது.எதிர் வீட்டு அக்கா வந்து பால்காரர் வந்துட்டு போயாச்சா என்று பக்கத்து வீட்டு அக்காவிடம் கேட்டாள். பாருங்க்கா ஆடு முட்டி வாழக்கன்னு சாஞ்சிருச்சு என்று கூறினாள் பக்கத்து வீட்டு அக்கா. ஆமாங்கண்ணு நானும் பால் டீ குடிச்சு நாலு நாள் ஆச்சு என்றாள் எதிர் வீட்டு அக்கா.
மழை இப்போது சற்று வேகம் கூடியது.
ரெயின்கோட் அணிந்து கொண்டு , சைக்கிளில் வந்திறங்கினார் பால்காரர். ரெயின் கோட் முழுவதும் ஈரமாக இருந்தது. குடை பிடித்துக் கொண்டு பெண்கள் சென்று பால் வாங்கினார்கள். எல்லோரின் முகங்களிலும் குளுமை தெரிந்தது. வீடுகளின் வெளிப்புற சுவர்கள் மழை நேரத்தில் மட்டுமே தெரியும் ஒளியுடன் இருந்தது.எனக்கு சரியாக டீ போட வராது. பக்கத்து வீட்டில் பால் பொங்கும் சத்தமும் , பாலின் மாமிச வாடையும் சேர்ந்து வந்தது. டீத்தூள் டப்பாவை தேடுவார்கள் போல. டீத்துள் பாலில் கொட்டும் சத்தம் துல்லியமாக கேட்டது. மின்சாரம் இல்லை. எந்த வீட்டிலிருந்தும் எலக்ட்ரானிக் சத்தங்கள் வெளிவரவில்லை.தேவையில்லாத இரைச்சலாக கேட்கும் ரயிலின் சத்தம் இன்று சிறுவர்கள் காத்தாடியை பிடித்துக் கொண்டு எதிர் காற்றில் ஓடுவது போன்ற சிலிர்ப்புடன் கேட்டது. மழையில் தண்டவாளம் மினுமினுத்துக் கொண்டிருக்ககூடும். தண்டவாளத்தின் ஓரத்தில் சிறு செடிகள் கூட வெளிர் பச்சை நிறத்தில் நான்கிலைகள் விட்டு ரயிலின் வேகத்தில் அலைக்கழியக்கூடும். டீத்தூள் கொதிக்க ஆரம்பித்தது. அதன் துவர்ப்பு மணம் நாசிக்குள் ஏற மறுத்தது. பாலுடன் கலந்த அந்த துவர்ப்பு இப்போது அடர்த்தியான மணத்தை கொடுத்தது. சர்க்கரை சேர்க்கிறார்கள். சர்க்கரையின் முறுகலான மணம் வந்தது. எல்லாமும் சேர்ந்து டீயாகும் மாயக்கணம் இது. வடிகட்டும் சத்தம் கேட்டது. உடையும் நீர் மொட்டுக்கள் கொண்ட டீயின் நுரை மேலெழுந்து வந்து கொண்டே இருக்க அந்த டீ கப் நிரம்பியிருக்க கூடும்.
நானும் சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்தேன்.நைனிடாலில் விக்னேஷ்வரும் நல்லதொரு டீயை அருந்தி கொண்டிருக்ககூடும். என்றுமில்லாமல் டீ சுவையாக இருப்பது போல் தோன்றியது. நான் போடும் தேனீருக்கும் சுவை கூடி விடுகிறது மழை நாளில்.
_ Manobharathi Vigneshwar