மாராத்தான் உண்மையில் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தது. நேற்றிரவு தான் 5கிமீ மாரத்தான் ஐஐடி மெட்ராஸில் நடப்பதை அறிந்து கொண்டோம். காலை ஐந்தரை மணியளவில் அங்கே இருக்க வேண்டும். நாங்கள் இருக்குமிடத்தில் இருந்து பத்து நிமிடம் தான் . ஆனால் நாங்கள் நான்கு மணிக்கே எழுந்து கொண்டோம். ஐந்து மணி ஆகும் போது காரில் பயணத்தை துவக்கினோம் . வீட்டைத் தாண்டியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் கூட ரன்னிங் செல்பவர்கள் குறைவான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். அடையார் ஆற்றங்கரையை கடக்கும் போது சாக்கடை நாற்றம் எடுத்தது. பகல் பொழுதுகளில் கடக்கும் போது வாகனங்களின் புகை , ஹார்ன் சத்தங்கள், ஆட்டோக்களின் இரைச்சலினாலும் சாக்கடை நாற்றம் அமுங்கி போகிறது. ஒருவேளை வெறிச்சோடியிருந்த அடையார் ஆற்றங்கரை பாலமும் , அதிகாலையும் , தூறல் மழையும் , சாக்கடை நாற்றத்தை தூண்டியிருக்கலாம் அல்லது எங்களின் கவனத்திற்கு வந்ததிற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.
ஐஐடிக்குள் நுழையும் போது செக்யூரிட்டி மாரத்தான் ஆ என்று கேட்க ஆம் என் கூறி உள்ளே சென்றோம். ஐஐடிக்குள் செல்வது எனக்கு முதல் முறை. பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்தது போல் இருந்தது. இருபுறமும் புளியமரங்களும் கண் நிறைக்கும் பச்சை புதர்களும் கூடிய தார்சாலை உள்ளே சென்றது. வேகம் 20கி.மீ மட்டுமே என எழுதப்பட்டிருந்தது. இங்கே கல்லூரி இருக்கிறதா என்ன என்ற ஆச்சரியம் தாளாமல் பார்த்துக்கொண்டே வந்தேன். சில கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்தன. ஆசிரியர்களுக்கான குடியிருப்பு என எழுதியிருந்தது. அதை தாண்டி செல்லும் போது ஆளுயர புற்று தென்னையின் பன்னாடியினால் ஆங்காங்கே மூடியிருந்தது. அடுத்து சில கட்டிடங்கள் கண்ணில் பட்டன. ஆடு கூட வளர்க்கிறார்கள் என எண்ணினேன். அங்க பாரும்மா மான் என்று என் கணவர் பரபரப்பாக கூறிய போது தான் அது மான் என்றே உணர்ந்தேன். நீளமான கொம்புகள் , மிகக் குறுகிய முகத்தில் நீண்ட கண்கள் , வால் என ஏதுமில்லை. உடல் முழுவதும் கண்கள் என மான் அப்படியே சிலையாக நின்றது. மானில் அப்படி என்ன அழகை கண்டு ராமனிடம் அது வேண்டும் என சீதை கேட்டாள் என்று தெரியவில்லை . ஆடு கூட மானை விட அழகாக இருக்கும் எனத் தோன்றியது. ஒரு வேளை ஏதேனும் புதருக்கருகில் அல்லது மரங்களின் இடையில் அவை துள்ளி ஓடும் போது பார்த்திருந்தால் நானும் பரவசமடைந்திருப்பேன்.
குறு வனம் போல சென்று கொண்டே இருந்தது ஐஐடி வளாகம். ஆங்காங்கே மாணவர்கள் சைக்கிளில் ஒரு கட்டிடத்தில் இருந்து அடுத்த கட்டிடத்திற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தனர். மழைதூறிக் கொண்டே இருந்தது. ஜலகண்டேஸ்வரர் ஆலயம் என எழுதப்பட்டிருந்த சிறு கோவிலை கடந்தோம். நல்ல நண்பகல் வேளையில் வந்தாலுமே நிழல் மட்டுமே தெரியும் வளாகம் இது. அதிகாலையும் , மேகம் மூடிய வானமும் , தூறலும் அடர் கானகமும் மகாபாரத காலத்தின் குருகுலம் ஒன்றில் பிரம்ம முகூர்த்தத்தில் நுழைந்தது போன்ற அனுபவத்தை கொடுத்தது.
ஓப்பன் ஏர் தியேட்டர் என்று எழுதப்பட்டிருந்த மைதானத்தின் அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். மைதானத்தில் நுழைந்த போது தான் வானத்தையே பார்க்க முடிந்தது. தங்களின் பெயரையும் , வயதையும் பதிவு செய்து கொண்டு டி சர்ட் வாங்கிக் கொள்ள நீண்ட வரிசை மூன்று இடங்களில் இருந்தது.
மைதானத்தின் கம்பி வலைகளில் குரங்குகள் ஆங்காங்கே உட்கார்ந்து கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தன. நாங்கள் ஒரு வரிசையில் சென்று நின்றோம். மேடையில் இரு பெண்கள் அறிவுப்புகளை தொடர்ந்து வழங்கியபடி கூட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்தனர். ஐஐடி அலுமினி என்ற டி சர்ட் ஐ அணிந்திருந்த எழுபது வயதை கடந்த தாத்தா ஒருவரும் எங்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். இவருமா மாராத்தான் ஓடப் போகிறார் என்று நான் என் கணவரின் காதில் கிசுகிசுத்தேன். சும்மா இரு என்று கண்களால் என்னை கட்டுப்படுத்தினார் என் கணவர். பெருமிதமும் , பண்பும் , மேட்டிமைத்தனமும் , எரிச்சலும் ஒருங்கே வெளிப்பட்ட முகத்தை கொண்டிருந்தார் அலுமினி தாத்தா.
படிகளில் ஏறி வந்த குரங்குகளின் இளைஞரணி சற்று மிரண்டு நிற்க, வரிசையில் நின்ற மனிதர்கள் அதிகமாக பயந்து வானர சேனைகளுக்கு இடம் விட்டு நகர்ந்து நின்றனர். ராஜபாட்டை போன்ற வழியில் வானர சேனைகள் வேகமாக ஓடிச் சென்றன. ரெஜிஸ்டர் செய்துவிட்டு நாங்கள் தள்ளி வந்தோம். மழையின் ஈரத்தில் அலுமினி தாத்தாவின் செருப்புகள் வழுக்கிய போது ஐஐடி இளைஞர் தாங்கிப் பிடித்து அழைத்து சென்றார்.
மைதானத்தின் நடுவில் வரும் படி மேடையில் இருந்த பெண்கள் அறிவிப்பு செய்தனர். மாராத்தானுக்காக வார்ம் அப் பயிற்சிகள் தரப்பட்டன. அடுத்து ஸூம்பா நடனப் பயிற்சியும் தரப்பட்டது.
மாராத்தான் ஆரம்பித்தது. எல்லோரும் மெதுவாக ஓடினர். நானும் ஒரு இரண்டு நிமிடம் ஓடினேன். அதன்பிறகு மெதுவாக நடப்போம் என நடக்க ஆரம்பித்தேன். என்னை பார்த்து என் கணவர் ஓடுவதை நிறுத்திவிட்டு நிற்க நான் அவரிடம் நடந்தே சென்றேன். இருவரும் நடக்க ஆரம்பித்தோம். ஐஐடி யின் குறுவனத்தை பார்த்தபடி நடந்தோம். ஓடை ஒன்று தென்பட்டது. பெரிய பெரிய ஆலமரங்களின் விழுதுகள் மரங்கள் போல தெரிய அவை ஓய்வில் இருந்தன.
என் கணவரை அடையாளம் கண்டு அவருடைய அலுவலக நண்பர்கள் இருவர் இணைந்து கொண்டனர். சில நிமிடங்கள் அலுவலக பேச்சுகள் என சென்றது. எங்களுக்கு முன்னால் கொஞ்சம் பூரிப்பான குட்டி செல்லத் தொப்பையை கொண்ட பதின் வயது சிறுவர்கள் இருவர் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தனர். கணவரின் நண்பர் வேகமாக அவர்களிடம் ஓடிச் சென்று தம்பி , உங்களுக்கு நாங்க தான் காம்பிடேஷன் என்று கூறினார். அதை தாங்க இயலாமல் சிறுவர்கள் வேகமாக முன்னால் ஓடினர். நாங்கள் அனைவரும் பெக்க பெக்க என்று சிரித்துக் கொண்டோம். இப்படித்தாங்க மோட்டிவேட் பண்ணனும் என்றார் அவர். அடுத்த சற்று தூரத்தில் சிறுவர்கள் மூச்சு வாங்க நின்றிருக்க இவரை பார்த்ததும் திரும்பவும் ஓட ஆரம்பித்தார்கள். சிறுவர்களின் மனநிலை இன்னமும் சிரிப்பை கொடுத்தது எனக்கு. இதைப்போலவே நான்கு முறை நடந்து விட , அதன்பிறகு சிறுவர்களை நாங்கள் பார்க்கவே இல்லை. ஆங்காங்கே தண்ணீர்பாட்டில்களும் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் மெதுவாக ஓடுவதை போல நடித்து தண்ணீர் பாட்டிலை வாங்கி கொண்டு வந்தார் என் கணவர். சார் அப்படியே கொஞ்ச தூரம் ஓடி தண்ணியை தலை மேல் ஊத்திட்டு மூச்சு வாங்கணும் சார் என்றார் நண்பர். தொடர்ச்சியான சிரிப்புகளுடன் ஒரு வழியாக 5கி.மீ மாராத்தானை நாற்பது நிமிடத்தில் முடித்துவிட்டு மைதானத்தை அடைந்தோம். நாற்பது நிமிடத்தில் எங்கேயும் அலுமினி தாத்தாவை நான் பார்க்கவில்லை. பதினைந்து நிமிடத்தில் முடித்துவிட்டு வந்தவர்களுக்கான பரிசுகள் வழங்க மேடை தயாராகி கொண்டிருந்தது. மாற்றம் தன்னார்வலர் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களுடைய அமைப்பை பற்றிய விரிவான தகவல்களை வழங்கி கொண்டிருந்தனர். மாற்றம் பவுண்டேசன் ஐ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மைதானத்தின் படிகளில் அலுமினி தாத்தா அமர்ந்திருக்க ஐஐடி இளைஞர் அவரிடம் நின்று கொண்டிருந்தார்.
மாரத்தானில் கலந்து கொண்டவர்களுக்கும் சக்கரை நீரும் , பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.
பரிசுகள் வழங்கி முடித்ததும் வெளியே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.
மாரத்தானில் மறக்க முடியாதது அலுமினி தாத்தாவின் மனநிலை தான்.
- Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
05-11-2024