Skip to main content

நண்பகல்....(அனுபவம்)

 தெருவில் நாய்களும் நண்பகல் உறக்கத்தில் இருந்தன. வெயில் மட்டுமே தன்னந்தனியாக அலைந்து கொண்டிருந்தது. வெயிலை போன்ற சுதந்திரமான நிலை எனக்கு வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டிருக்கிறேன். சுதந்திரமான வாழ்க்கை தான் அபாயகரமானது என்பது வளர வளர புரிந்தது.எங்கேயோ ஒற்றைக் காகம் கரைந்து முடித்தது. மத்தியான நேரத்தில் தனியே கரையும் காகத்தின் குரல் , வீட்டை பார்த்து கொண்டு வீட்டிலேயே இருக்கும் பெண்களின் தனிமையை உணர்த்துவதாக இருந்தது.  இந்த பகல் பொழுது நீண்டு கொண்டே இருக்கிறது.அதை நீட்டிக்க விரும்பாமல் வெளியே வந்தேன்.காம்பவுண்டு சுவரில் காகத்திற்கு காலையில் வைத்த இட்லியில் அரை இட்லி காய்ந்திருந்தது.பிள்ளையார் கோவிலின் சாத்தப்பட்ட கம்பி கதவுகளின் மேல் வெயில் தெரிந்தது. பூனை ஒன்று சோம்பலாக நடந்து சென்றது.தெருவில் புழுதி கூட தூங்கிக் கொண்டிருந்தது. வாகனங்கள் ஏதுமில்லை.ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது இந்த நண்பகல்? தெருவில் இருக்கும் வீடுகளிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை.கைவிடப்பட்ட புராதனமான கிராமத்தில் தனியாக நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.எத்தனை வடிவமைப்புகளுடன் கூடிய வீடுகள்.வெயிலுக்கு துணையாக நான் நடப்பதாக நினைத்துக் கொண்டேன். நிமிர்ந்து பார்த்த போது மேகங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தது சூரியன். பெருமூச்சோடு பஜனை கோவில் தெருவில் நடந்தேன். சுண்டைக்காய் செடியை இங்கே தான் பார்த்த நினைவு. செடி என்று கூற முடியாது. அது ஒரு குறு மரம் எனலாம். இலைகள் அகன்று விரிந்தும்  பச்சை நிறத்தில் சிறு முட்களுடனும் சிறிய பிளவுகளுடனும் இருந்தது. நட்சித்திர வடிவில் வெண்மையான பூக்கள் மையத்தில் மஞ்சள் நிற மகரந்தத்துடன் கொத்து கொத்தாக இருந்தது. பூ கனிந்து காய்கள் குட்டி குட்டி பந்துகள் போல பச்சை நிறத்தில் இருந்தன. அதன்  நிழலில் பல்லாங்குழி விளையாடியிருப்பார்கள் போலும். புளியங்கொட்டைகள் குழிகளில் நிரப்பப்பட்டிருந்தது. சட்டென்று ஏதோ ஒரு வீட்டில் ஜன்னல் திறந்தது. புழுதியுடன் சேர்ந்த மண் வாசம் வீசியது. நாய்கள் சோம்பல் முறித்து யாரை பார்த்து குரைக்கலாம் என்று பார்வையை அலைய விட்டுக் கொண்டிருந்தன.வாகனங்கள் ஒன்றிரண்டு சென்றது.


சின்ன வெங்காயம் நினைக்கும் போதே கண் எரிந்தது.  சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்தேன்.  புளியை ஊற வைத்தேன். புளியை எடுக்கும் போதெல்லாம், மே மாத பரீட்சை விடுமுறை நினைவிற்கு வரும், கூடவே பொரை முள்ளின் நினைவும். மே மாதம் பரீட்சை லீவு விடுவதே புளியமரம் உலுக்கி புளியை எடுப்பதற்கு தான் என்று நம்பயிருந்தேன் நான். எங்கள் தோட்டத்தின் வேலியின் அருகில் எங்களுக்கு சொந்தமான ஆறு புளியமரங்கள் இருந்தன. ஆறு புளியாமரம் என்பது இன்றைய லேண்ட் மார்க் காக மாறிவிட்டது.புளியம்பழம் உலுக்கும் போது வேலியில் சில விழுந்து விடும். அதை எடுப்பதற்கு முயலும் போதெல்லாம் கையில் பொரை முள் குத்தி விடும். எந்த முள் குத்தினாலும் அதை எடுத்து விடலாம்.ஆனால் பொரை முள் அப்பிடி அல்ல.அதன் முள் அடுக்கடுக்காக இருக்கும். எடுக்க எடுக்க வந்து  கொண்டே இருக்கும். ஆகாத வேலைக்கு அச்சக்காரம் வாங்காத என்று பல்லை கடித்து கொண்டு  நாலு அடி போட்டபின் தான் அம்மா முள்ளெடுத்து விடுவாள்.அதற்கான அர்த்தம் என்னவென்று இப்போதும் எனக்கு தெரியாது. இது வருடம் தவறாமல் நடக்கும். முள்ளெடுத்தபின் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி விடுவாள். புளியம்பழம் பெரிய பெரிய கோணிப்பைகளில் கட்டி வைக்கப்படும்.அடுத்த வாரத்தில் புளியம் பழத்தை ஓடுகளுடன் களத்தில் காய் விடுவார்கள். ஓடு கலகலவென்று ஆன பிறகு குச்சியால் தட்டுவார்கள். சில சமயங்களில் டோப்பா போல கழன்று வந்து விடும் ஓடு. வராத ஓடுகளை நீக்குவதற்கு  நான்கு பெண்கள் வேலை செய்வார்கள். புளியம்பழத்தை பற்றியிருக்கும் புளியைமாரை வெளியே எடுத்து தனியாக வைப்பார்கள். அதை பித்தளை பாத்திரங்கள் தேய்த்து கழுவுவதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். நல்ல இனிப்பான புளியம் பழம் பார்க்கும் போது தெரிந்து விடும். அதை அவ்வப்போது ஒவ்வொரு பகுதியாக பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே வேலை செய்வார்கள்.ஓடு நீக்கிய புளியம்பழத்தை களத்தில் போட்டு காய வைப்பார்கள். அது சலசலவென்று காய்ந்ததும் புளியங்கொட்டை எடுப்பதற்கு புளியாமுட்டி அல்லது குலவிக்கல்லின் மேல் வைத்து சுத்தியிலால் அடிப்பார்கள்.  இரும்பில் புளியம் பழம் ஒட்டாமல் இருப்பதற்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள்.புளியங் கொட்டைகள் பளபளவென்று பறக்கும். பல்லாங்குழி விளையாடுவதற்கும் , சம்பா விளையாடுவதற்கும் நான் சேகரித்து வைத்துக் கொள்வேன். புளியங்கொட்டை நீக்கிய புளியை திரும்பவும் வெயிலில் காய வைப்பார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாக காய்கிறதோ அந்த அளவிற்கு அதன் பயன்பாட்டின் வாழ்நாள் நீடிக்கும். பெரிய மண்பானையில் வீட்டிற்கு வருடம் முழுவதற்கும் தேவையான புளியை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை சந்தைக்கு அனுப்புவார்கள். வெளியே தேன் நிறத்திலும் உள்ளே வெள்ளையான பரப்புடனும் கொட்டை இருந்த வடுவை காட்டும்.பார்ப்பதற்கு இரயில்வே பெட்டிகள் போல  இருக்கும். மண்பானையில் முதலில் கல் உப்பு  பரப்பி புளியை வைப்பார்கள்.அடுத்து கொஞ்சம் கல் உப்பு பரப்பி அடுத்த அடுக்கு புளியை வைப்பார்கள்.பானை நிறையும் வரை இந்த முறை தொடரும். வருட இறுதியில் புளியின் தேன் நிறம் மாறி கருப்பு நிறமாக இருக்கும். 
கனமான இரும்பு வடசட்டியில் நல்லெண்ணெய்  ஊற்றினேன். நன்றாக காய்ந்ததும்  வெந்தயம் சேர்த்தேன். வெந்தயம் எண்ணையில் பொரியும் போது எழும் மெலிதான கசப்பின் நறுமணம் எப்போதுமே எனக்கு நாவூறச் செய்யும். சீரகம் சேர்த்து பின், உரித்த சின்ன வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்தேன். வெங்காயம் சேர்த்ததும் வெந்தயத்தின் வாசனை இன்னும் தூக்கலாக வந்தது. வெங்காயத்தின் வழியாக ஒளி ஊடுருவும் பக்குவம் வந்ததும் கழுவி வைத்த சுண்டைக்காயை போட்டேன். குழம்பு மிளகாய்த்தூள் , உப்பு போட்டேன். சுண்டைக்காய் மேட் பினிசிங்கில் இருந்து வெளிர் பச்சை நிறத்தில் மின்னியது. சுண்டைக்காய் மூழ்கும் அளவிற்கு நீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வடசட்டியை தட்டு வைத்து மூடினேன். கால் மணி நேரம் கழித்து புளித்தண்ணியை ஊற்றி திரும்பவும் மூடி வைத்தேன்.நேரம் ஆனதும் மூடியை திறந்தேன். சுண்டைக்காய் தொக்கு,தேன் நிறத்தில் அடர்த்தியாக இருந்தது. சுண்டைக்காயும் புளியும் , எண்ணையும் கலந்த மணம் மெலிதான இனிப்புடன்  வந்தது. நண்பகல் வெயில் இன்னமும்  கொஞ்சம் மிச்சமிருந்தது.

_ Manobharathi Vigneshwar