Skip to main content

பருத்திக்கறை பூச்சி...

      புத்தகங்கள் அதனதன் இடத்தில் சரியாக உள்ளனவா என பார்த்துவிட்டு ,   'The Magic Finger' கதையை படிக்க ஆரம்பித்தேன். மூன்று பக்கங்களை கடந்திருப்பேன். என்னுடைய வலது காலின் அருகில் ஏதோ ஒன்று நகர்வது போல் உணர்ந்தேன். சட்டென்று காலை உதறிவிட்டு எழுந்து கொண்டேன். 

உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி. இரண்டு உணர் கொம்புகளுக்கு அருகில் தலை அடர் சிவப்பு நிறமும்‌ , பின்கழுத்து முக்கோண வடிவில் கருப்பு நிறத்துடன் இருந்தது. நடுமுதுகில் தொடங்கி பின் பக்கம் வரை முக்கோணமாக தீபத்தின் ஒளிச்சுடர் போல கருப்பு நிறம் பரவியிருந்தது.  ஒரு பக்கத்திற்கு மூன்று கால்கள் வீதம் ஆறு கால்கள் இருந்தன.கால்கள் சிவப்பு நிறத்திலும் , நுனியில் வெண்மை நிறமும் கொண்டிருந்தது. 





இது வரையில் நான் பார்த்திராதது. லேடி பக் ஆக இருக்கவும் வாய்ப்பில்லை. லேடி பக் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த சிவப்பு பூச்சி சற்று நீளமாக இருந்தது. 

இது எப்படி நூலகத்திற்குள் வந்தது? மூன்று நாட்களாக பென்ங்கால் புயல் காரணமாக பள்ளி விடுமுறையாக இருந்தது. அதிகப்படியான மழையினால் இந்த பூச்சி வந்திருக்குமோ ?

 அப்படியே இருந்தாலும் இது தோட்டத்தில் தானே இருக்க வேண்டும் ? எதைப் படித்து தெரிந்து கொள்வதற்காக நூலகத்திற்கு வந்தது? 

பூச்சிகளை பற்றிய புத்தங்கள் இருக்கும் பகுதிக்கு செல்லுமோ ? ஆனால் நான் பார்த்த போது குழந்தைகளுக்கான கதை புத்தகங்களின் பகுதியில் தானே இருந்தது? ஒரு வேளை தன்னுடைய குழந்தைகளுக்கு கதை சொல்வதற்காக புத்தகங்களை தேடியிருக்கும் போல. மழைக்காலம் தான் கதைகளை கேட்கவும் , சொல்லவும் உகந்த பருவம் என்பதை பூச்சிகள் இன்னமும் நினைவில் வைத்துள்ளன போலும்.

 உடனடியாக புகைப்படம் எடுத்து கூகுளில் தேடினேன்.பருத்திக்கறை பூச்சி என பதில் வந்தது. பருத்தி வெடிக்கும் போது அவற்றை உண்பதால் இவற்றிற்கு பருத்திக்கறை பூச்சி என்று பெயர்.பருத்திக்கும் நூலகத்திற்கும் என்ன உறவு ? இருப்பினும், நல்வரவு பருத்திக்கறை பூச்சியே! என புன்னகைத்து கொண்டேன். இந்த நூலகம் இன்னமும் எத்துனை அதிசயங்களை கொண்டுள்ளதோ !? 

- Manobharathi Vigneshwar 
  ATA LIBRARY - Besant Garden
  02-12-2024