நேற்று இரவு வீட்டுக்கு வருவதற்கே மணி பனிரெண்டு ஆகியிருந்தது. இருப்பினும் காலை ஆறு மணிக்கே முழிப்பு வந்து விட்டது. நண்பரின் வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். நாங்கள் எழுந்து காலை நடை சென்று வந்தோம். மழை சிறு தூறலாக ஆரம்பித்தது பெரிய மழையாக கொட்டியது.. வீட்டில் அனைவரும் எழுந்திருந்தனர். பிள்ளைகள் செஸ் விளையாட ஆரம்பித்தனர். அவர்களோடு விக்னேஷ்வர் சேர்ந்து கொண்டார். நிலக்கடலை சட்னியும் தோசையும் கொடுத்தார்கள். வெளியே மழை கொட்டி கொண்டிருந்தது.
பதினோரு மணியளவில் மழை விட்டதும் சலார்ஜங் மியூசியம் சென்றோம். நண்பரின் பைக்கை எடுத்து கொண்டு ஒரு மணி நேர பயணம். முதன்மை சாலையில் அரசியல்வாதிகளின் படம் கட்சி கொடிகளுடன் தொடர்ச்சியாக இருந்தது.மாநிலங்கள் தான் மாறுகிறது , அரசியல்வாதிகளின் உடல்மொழியும், அதற்கென்றே கொண்ட சிரித்த முகமும் ஒன்று போலவே இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற போது இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களில் எதுவும் இதை போன்ற உடல்மொழி இல்லை. பேனர் கலாச்சார காலம் வந்த பிறகு தான் அரசியல்வாதிகளின் பொதுவான உடல்மொழியும் பரவியிருக்கிறது. சலார்ஜுங் மியூசியம், பார்க்கிங்க்கு பத்து ரூபாய், ம்யூசியத்திற்கு டிக்கெட் ஒருவருக்கு ஐம்பது ரூபாயும், மொபைலை கையில் வைத்திருந்தாலே ஒருவருக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்பட்டது. மொத்தமாக இருநூறு ரூபாய் செலுத்தி விட்டு நுழைந்தோம்.
சிலைகள் இருந்த பகுதிக்கு முதலில் சென்றோம். சோழர் கால சிலைகள் கூர் மூக்கு முனையை கொண்டிருந்தன . ஒடிஷா சிலைகள் கிட்டத்தட்ட வடகிழக்கு மக்களின் முகங்களை பார்ப்பது போல இருந்தது.
நவாபுகள் பயன்படுத்திய துணிகள் இருந்தன. அவர்கள் இந்த ஆடம்பரமான துணிகளை பயன்படுத்தி, பிரிட்டிஷுக்கு வரி செலுத்தி அரண்மனைகளில் வசித்த காலத்தில் காந்தி அரை ஆடை அணிந்து , சுதந்திர உணர்வை மக்களிடம் பரப்ப இந்தியாவெங்கும் நடை பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் சுவற்றில் ஒரு படம் சந்தேலர்கள் எழுச்சி வரையபட்டிருந்தது. முர்மு என்ற பழங்குடியினர் பிரிட்டிஷுக்கு எதிராக போரிட்டு, கிட்டத்தட்ட 60,000 பேர் இறந்திருக்கிறார்கள்.
முர்மு இந்த பெயர் எங்கயோ கேட்டிருக்கிறோம் என யோசித்து, சட்டென்று இருவருமே குடியரசு தலைவர் என்றோம். நூற்றி அறுபது ஆண்டு காலம் கழித்து அந்த மக்களின் பிரதிநிதியாக நம்முடைய குடியரசு தலைவராக இருக்கும் திரௌபதி முர்முவை நினைத்து பெருமையாக இருந்தது. ஜனநாயகம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று மலைப்பாக இருக்கிறது. அம்பேத்கரின் ஜனநாயகத்திற்கான சுதந்திரம் என்ற வரி நினைவிற்கு வந்தது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று மனம் பொங்கியது.
தந்த வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் இருக்கும் அறைக்கு சென்றோம். அனைத்துமே நுண்ணிய அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தன. ஆனாலும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை. எத்தனை யானைகள் இவற்றிக்காக கொல்லப்பட்டிருக்கும் என் கோபமாக வந்தது. அதை புரிந்து கொண்ட விக்னேஷ்வர் , யானை இயற்கையா இறந்த அப்றோம் கூட எடுத்திருக்கலாம்ல என்றார். மனதிற்கு ஒப்பாமல் வெளியே வந்தேன். மியூசிகல் கிளாக் பார்க்க கூட்டம் கூடியிருந்தது.
சரி வா உனக்கு ஜாட் ஸ்டோன் இருக்கற இடத்திற்கு கூட்டிட்டு போறேன் என்று அழைத்து சென்றார். இயற்கையாக கிடைக்கும் கற்களை வைத்து எத்தனையோ பொருட்கள் செய்திருந்தனர்.சில கத்திகளின் உறை கிளியின் வடிவில் இருந்தது .இதை நிச்சயமாக ஒரு இளவரசி தான் பயன்படுத்தியிருப்பார் என்றார் விக்னேஷ்வர். எனக்கு சிரிப்பு வந்தது.
Veiled Rebecca , மார்பிள் சிலையை பார்த்தோம். சலார்ஜங் வந்ததே இதை பார்ப்பதற்கு தான். விக்னேஷ்வர் 2019-ல் ஹைதெராபாத் ட்ரைனிங் வந்த போது, இதை பார்த்து விட்டு, உன்னை நிச்சயமாக இங்கே அழைத்து வருகிறேன் நாம் இருவரும் சேர்ந்து பார்ப்போம் என மனம் பொங்க போனில் பேசியது நினைவிற்கு வந்தது .
முகத்தை மெல்லிய துணியால் மூடி நின்றிருக்கும் அழகிய ஐரோப்பிய பதுமை. அந்த அப்பெண்ணின் ஆடைகள் அதில் இருக்கும் எம்பிராய்டரி டிசைன்கள் உள்ளே மடங்கி நின்றிருக்கும் சில மடிப்புகள் என அனைத்துமே நுண்ணிய வேலைப்பாடுகளுடன் தெரிந்தது. சிற்பி( Giovanni Maria Benzoni) முதலில் எதை செதுக்கி இருப்பார் என மயங்கியது சிந்தை..
நான் ஒரு சிற்பியாக போகிறேன் என்றார் விக்னேஷ்வர் . எந்த கலையின் உச்சத்தை பார்த்து விட்டாலும் அதை உருவாக்கிய தொழில் முறையின் கலைஞராக வேண்டும் என எண்ணுவார் இவர். வருங்காலத்தில் நிச்சயமாக ஒரு சிறந்த சிற்பியாகி விடுவார் . கொஞ்ச நேரம் அமர்ந்து Veiled Rebecca வை பார்த்து விட்டு வந்தோம். இன்னமும் நிறைய அறைகள் இருந்தன. அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என சலார்ஜங் விட்டு வெளியே வந்தோம். ஏக்கமும் , விரக்தியும் ஒன்று சேர ஓய்வாக படுத்திருந்த வயதான சிங்கத்தின் சிலையை நுழைவாயிலில் பார்த்தோம். இந்திய சுதந்திரத்தின் போதிருந்த முகலாய மன்னர்களின் நிலை போலிருந்தது அந்த சிங்கம்.
சார்மினார் பார்த்தே ஆக வேண்டும் என சென்றோம். மிகப்பெரிய பஜார்கள் , திருவிழா சந்தைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நிறைய பொருட்கள், அதை வாங்கும் மனிதர்கள் , அவர்களின் முக பாவனைகள் என மனித திரளை பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும். ஆனால் மால்களிலோ, கோவில்களிலோ,மாநாடுகளிலோ, ட்ராபிக்கில் நிற்கும் போதோ , போராட்டங்களின் போதே மனித திரளை பிடிப்பதில்லை.
பாஸ்ட் பார்க்கிங் சார்ஜ்-ல் வண்டியை நிறுத்திவிட்டு வந்தோம். ஒரு மணி நேரத்திற்கு இருபது ரூபாய், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எண்பது ரூபாய் என்றனர். கடை வீதி முழுவதும் பல் கிளினிக்காக இருந்தன. கிட்டத்தட்ட அந்த ஒரு வீதியில் மட்டுமே நாற்பத்திற்கும் மேற்பட்ட கிளினிக்கள். இங்கே யார் வருகிறார்கள். ஏன் இவ்வளவு கிளினிக்குகள் என்ற குழப்பம் அங்கே இருந்த வியாபாரிகளின் சிவப்பேறிய பற்களை பார்க்கும் போது விலகியது.
எனக்கும், நண்பரின் மனைவிக்கும் சேர்த்து ஒரே டிசைனில் வெவ்வேறு நிறங்களில் இரண்டு சுடிதார்களை எடுத்தேன் . நீண்ட நாளாக பிரவுன் நிற ஆடையை தேடி இங்கே கண்டு கொண்டேன். தாத்தாவிற்காக இரண்டு கீ செயின்களை வாங்கினார் விக்னேஷ்வர். ஐந்தடி நீளமும், இரண்டடி அகலமும் கொண்ட மிதியடியை பார்த்து ஆச்சர்யப்பட்டு நான்கு வாங்கினேன் . இது சென்னையில் கிடைக்காதா என்றார். கிடைக்காது என்று கூறி சிரித்தேன்.
நாதர்குல் நோக்கி பைக்கில் பயணம். வீட்டை நெருங்கும் முனையில் கொய்யாக்காய் விற்று கொண்டிருந்தவரிடம் ஒரு கிலோ வாங்கினேன். அறுபது ரூபாய் தான். சென்னையில் கிலோ இருநூறு ரூபாய் . தீயக உண்டுதி என்றார் வியாபாரி. தீயக என்றால் நல்ல இனிப்பு என்று பொருள். எனக்கு தெரிந்த தெலுகுவில் உரையாடிவிட்டு வந்தேன்.
மத்திய உணவை உண்டு விட்டு உறக்கம். மாலை ஆறு மணிக்கு நண்பரின் வீட்டில் அனைவரிடமும் விடை பெற்று கொண்டு L B நகர் வந்து, ட்ராவெல்ஸில் ஏறி கொண்டோம்.பேருந்து சென்னையை நோக்கி பயணித்தது.எனக்கு மனம் ஒருவித பதைபதைப்புடன் இருந்தது.என்னுடைய முன்னோர்கள் இந்த தெலுகு பேசும் தேசத்தில் இருந்து எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னால் கோயம்புத்தூருக்கு வந்தவர்கள்.. ஆயிரம் கிலோமீட்டர்கள், எவ்வளவு நாட்கள் பயணம் செய்திருப்பார்கள்? , நடந்தே வந்திருப்பார்களா ? எதற்காக அந்த இடப்பெயர்ச்சி? இதி எவரு பில்லலு ! என்ற பெருமாள் தாத்தாவின் குரல் என்னுள்ளே ஆதி ஆழத்தில் கேட்டது. பெருமாள் தாத்தாவோடு வீட்டில் தெலுகு பேசும் பழக்கம் முடிந்து போனது. என்னுடைய வேர் இங்கே தான் எங்கோ இருக்கிறது. எதை தேடி என்ன செய்வேன் என தெரியவில்லை. மூச்சுமுட்டுவது போல இருந்தது . பதட்டத்தை குறைக்க நண்பரின் மனைவி கொடுத்த முறுக்கை வேகமாக எடுத்து சத்தம் வெளியே கேட்கும் அளவிற்கு கடித்து தின்ன ஆரம்பித்தேன்.