நூலகத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்கே மணி 4.20 ஆகியது. வீட்டுக்கு வந்ததுதும் உடனடியாக பாத்திரங்களை கழுவி வைத்தேன். அடுத்து அடை மாவு அரைத்தேன்.இனிப்பு பணியாரம் செய்வதற்கான மாவு அரைத்தேன். அரிசி கொஞ்சம் ஊற வைத்து, காலையிலேயே ஊறவைத்து விட்டு போன அனைத்து பருப்பு வகைகளுடன் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்தேன். இன்னுமும் பொரி உருண்டையையும், நிலக்கடலை உருண்டையும் செய்ய வேண்டும். அடை செய்வதற்கும், இனிப்பு பணியாரம் செய்வதற்கும் தேங்காய் வேண்டும். அதை உடைக்க வேண்டும். மணி 6 ஆகியிருந்தது. இன்னுமும் விக்னேஷ்வர் வீட்டுக்கு வரவில்லை. நான் வீட்டை கூட்டி முடித்தேன்.
விக்னேஷ்வர் வந்து விட்டார். உடனடியாக தேங்காய் உடைத்து, பருப்பு ஆடை மாவிலும், இனிப்பு பணியாரத்தில் போட்டேன். விக்னேஷ்வரை நிலக்கடலையை தோல் நீக்க சொல்லிவிட்டு, நான் சமைப்பதில் மும்முரமாக இருந்தேன். இனிப்பு பணியாரம் ஊற்றி முடித்ததும், அடை மாவிலும் பணியாரத்தையே செய்தேன். ஊற வைத்த கடலை பருப்பை வேக வைத்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து லட்டு பிடித்தேன். வாழை பழத்தை பிசைந்து கூட வெல்லமும், பொட்டு கடலையும் சேர்த்து நெய்வேத்தியத்திற்கு எடுத்து வைத்தேன். பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள, கார சட்னி செய்தேன். சமையல் முடிந்தது, அடுத்து பொரி உருண்டையும் , கடலை உருண்டையும் , வெல்லம் காய்ச்சி வடித்து திரும்பவும் பாகு பதம் கொண்டு வந்து பொரியில் சேர்த்தேன். முதலில் சூடு தாங்க முடியாமல் ஒரு விதமாக உருட்டி வைத்தேன். அடுத்து கொஞ்சம் சூடு ஆறியதும் அதை உருண்டைகளாக மாற்றினேன். விக்னேஷ்வரை குளித்துவிட்டு வரச்சொல்லி, நான் விளக்குகளை எடுத்து வைத்து கொண்டேன்.
திரியும் எண்ணயும் ஊற்றி வைத்தேன். அவர் வெளியே வந்ததும் நானும் சென்று குளித்து முடித்து, நாகலிங்க பூவை சாமிக்கு வைத்து விட்டு, செய்த பலகாரங்கள் அனைத்தையும் சாமிக்கு படைத்து விட்டு, விளக்கேற்றி பூஜை செய்தோம். தீபங்களை எடுத்து, ஒன்றை போர்வெல்லின் அருகிலும், பிள்ளையார் அருகிலும் வீட்டுக்கு வெளியே என அனைத்து இடங்களிலும் வைத்து விட்டு வந்தோம் மணி எட்டு ஆகியது. விக்னேஷ்வர் முகத்தில் பசி தெரிந்தது. உடனடியாக தாத்தா வீட்டுக்கு பலகாரங்களை கொடுத்து விட்டேன். அடுத்து நாங்கள் சாப்பிட அமர்ந்தோம். இது நாள் வரைக்கும் பண்டிகைகளை வேலை என்றே வெறுத்து வந்திருக்கிறேன்,. இப்போது எந்த பண்டிகையாக இருந்தாலும் அதை கொண்டாட வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அனைத்து விதமான முறைகளுடனும், உணவு பொருட்களுடனும்.. முழு நாள் விரதம் இருந்து சாமி கும்பிட்டு உணவு உண்ணும் போது மனநிறைவு வருகிறது.
விக்னேஷ்வர் பொரி உருண்டை ஒன்று, கடலை உருண்டை ஒன்று என மாற்றி மாற்றி ருசித்து கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் பிடித்தது அடை மாவு பணியாரம் தான் என்றார்.. இல்லை கலவை சாதம் மிகவும் நன்றாக இருந்தது என்றார்.. ஒவ்வொன்றை சாப்பிடும் போதும் அதுவே நன்றாக இருக்கிறது என்றார். நாம் சமைத்த உணவை ருசித்து சாப்பிடுவதை பார்க்கும் போது வேலையின் சலிப்புகள் மறைந்து விடுகின்றன..
அடுத்து வரும் பண்டிகைக்கு என்ன செய்ய வேண்டும் என இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டேன். பண்டிகைகளை எதிர்நோக்கி நாட்கள் செல்கின்றன.
Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
13-12-2024