Skip to main content

கலாஷேத்ராவின் கைத்தறி ஆராய்ச்சி கூடம்......

   
கலாஷேத்ராவின் கைத்தறி ஆராய்ச்சி கூடத்திற்கு இன்று சென்றோம். வாயில் முகப்பில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு  செய்யும் கீதா உபதேச சித்திரம் வரையப்பட்டிருந்தது. சட்டென்று அனைத்துமே புள்ளி வைத்த கோலமாக தெரிந்தது. உள்ளே சென்றதும் ருக்மணி அருண்டேல்  புகைப்படம் அவருடைய ஐம்பது வயதில் எடுக்கப்பட்டிருக்கலாம்  . 


பருத்தியிலிருந்து எப்படி பஞ்சை எடுக்கிறார்கள். பஞ்சிலிருந்து எப்படி நூலாக மாற்றுகிறர்கள் என கண் முன்னே செய்து காட்டினார்கள். இரும்பு கம்பி ஒன்றை பயன்படுத்தி பருத்தியில் இருக்கும் விதைகளை நீக்கினார்கள் . கைக்கு அடக்கமான பத்து சீமார்  குச்சிகளை கொண்டு  விதை நீக்கிய  பஞ்சை மரப்பலகையில் வைத்து தட்டினார்கள். பஞ்சு , பஞ்சு பஞ்சாக மாறியது. அதன் பின்னர் வில்லை கொண்டு அதனுடைய பஞ்சை அதில் வைத்து நீவினார்கள். பஞ்சு மிருதுவாக மாறியது.இதை இரன்டு முறை செய்தார்கள். பஞ்சு நீளமாக நூலிழையாக மாறியது. அதன் பிறகு வாழை  மட்டையில் பஞ்சு நூலிகளை வைத்து, ராட்டினத்தில் நூல் சுற்றும் ஊசியின் முனையை பஞ்சு நூலிழைகளுடன் சேர்த்து சுற்ற  ஆரம்பித்தார்கள். நூல் கண்டில் பஞ்சு நூலிழைகள் நூலாக மாறி  சேர்ந்து கொண்டிருந்தது.  ராட்டினம் சுற்றி கொண்டே  இருந்தது. நூல் அறுபடும் போதெல்லாம் திரும்பவும் அதை இணைத்து தொடர்ந்து வேலை சென்று கொண்டே இருந்தது.

பஞ்சிலிருந்து நூலாக மாற்றம் செய்வதற்கே  நீண்ட செயல்  முறைகள். மனிதன் எத்தனை காலம் இதில் செலவு செய்து இந்த  செயல் முறைகளை கண்டுபிடித்திருப்பான். மனிதர்களின் சிந்தனை எவ்வளுவு வேகமாக வளர்ந்து வந்திருக்கிறது.

நூலாக மாறியவை பாவு புனைய செல்லும். அடுத்து, கைத்தறியில் துணி நெய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு பருத்தி புடவையை நெய்து முடிக்க மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. ஒரு பட்டு புடவையை செய்து முடிக்க பதினைந்து நாட்கள் ஆகிறது. எத்தனை மனிதர்களின் கூட்டு முயற்சி ஒரு துணி செய்து முடிக்க தேவைப்படுகிறது. இவ்வளவு உழைப்பும் சரியான படி சமுதாயத்தில் நுகரப்பட்டால் நன்றாக இருக்குமே என தோன்றியது. ஆனால்  துணி கடைகளில் எவ்வளுவு எளிதாக  கலைத்து போட்டு, ஏதோ ஒன்றை தேடி கொள்கிறோம்? ஒவ்வொருவரும் அவர்களுக்கான துணியை நெய்து கொள்ள  முடியுமானால் அதி நுகர்வு என்பது மறைந்து விடும். காந்தியின் கைராட்டையின் அர்த்தம் புரிகிறது. மில் துணிகளுக்கு எதிரான , அதி நுகர்வை  எதிர்த்து, சுய சார்பான சமுதாயத்தை  உருவாக்க முனைந்திருக்கிறார்.

கைத்தறியில் உட்கார்ந்து பார்த்தேன். கால்களுக்கு இரண்டு பலகைகள், இடது, வலது என்று மாறி  மாறி  மிதித்து, துணி நெய்யப்படுகிறது. கிட்டத்தட்ட வாகனங்கள்  ஓட்டுவது வரை இது தான்  தொடர்கிறது. விலங்குகள் பூட்டப்பட்ட வாகனங்களிலும்  கயிற்றை எந்த புறம் இழுக்கிறோமா அதற்கு தகுந்தாற் போல வண்டியின் திசையை மாற்றி  கொண்டு செல்லும் .

ஒரு சிந்தனை இப்போது வரை அனைத்து துறைகளிலும் காலத்திற்கு ஏற்ப  மாற்றம் பெற்று,  ஆதி  அடிப்படையில் இயங்குகின்றது என்பது வியப்பை கொடுக்கிறது.

நேற்று நான் நூலகத்தில் பார்த்த பருத்திக்கறை  பூச்சிக்கும், இன்று  சென்று பார்த்த நெசவுக்கும்  எப்படி சம்மந்தப்படுத்துவது என்று யோசனையாக இருக்கிறது.

- Manobharathi Vigneshwar
  ATA library- Besant Garden
 03-12-2024