Skip to main content

மணிமங்கலம்....

 மணிமங்கலத்தில் தான் பரீட்சை என்றார் விக்னேஷ்வர். உடனடியாக அதன் வரலாறு தான் நினைவிற்கு வந்தது. 


சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்து வந்த போது மணிமங்கலத்தில் வைத்து தான் அவனை விரட்டி அடித்திருக்கிறார் முதலாம் நரசிம்மவர்மன். வரலாற்று சிறப்பு மிக்க இடம்.மணிமங்கலத்திற்கு லோகமகாதேவி சதுர்வேதி மங்கலம் என்பது இராஜராஜன் ( மனைவி ) காலப் பெயர். கைலாசநாதர் கற்றளி, பெருமாள் கற்றளி என ஆலயங்களும் இருக்கின்றது. அதையெல்லாம் பார்த்துவிட வேண்டும் என உடன் சென்றேன். 

விக்னேஷ்வர் பரீட்சை எழுத உள்ளே செல்ல நான் அந்த கல்லூரியின் கட்டிடங்களை சுற்றி வந்து கொண்டிருந்தேன். 

கல்லூரியில் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம் பேச்சு கொடுத்தேன். 
நான் என்னுடைய சிறுவயதில் எங்களூரில் பார்த்தவர்களை போலவே இருந்தார்கள். முகப்பருக்கள் இல்லாத  வெயில்பட்ட கருத்த சருமம். இப்போது எங்களூரில் யாரையும் நான் அப்படி பார்க்கவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளில் நிறம் மாறிக் கொண்டே செல்கிறார்கள். எங்களூரில் இப்போது  மாநிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை என மட்டுமே இருக்கிறார்கள். வெயில் பட்ட மினுக்கும் கருத்த மேனியுடன்  யாரும் இல்லை. 
தலைக்கு நன்றாக எண்ணெய் தேய்த்து வாரி கொண்டை போட்டிருந்தார்கள். ஒரு அம்மாளின் கொண்டை எனக்கு பாப்பாத்தி அத்தையை நினைவு படுத்தியது‌ . கொண்டைகளும் கைரேகை போலத்தான் ஒவ்வொருவருக்கும் தனித்தது. கொண்டை போட்டிருப்பதை வைத்தே அவர்களின் குணத்தை அறிந்து கொள்ள முடியும்.

நான் : மணிமங்கலமா நீங்க?

அவர்கள் : இல்லமா,  நடுவீரப்பட்டி . இங்க வேலைக்கு வந்தோம்.

நான் : இங்க என்ன வேலை செய்யறீங்க?

அவர்கள் : கார்டனுக்கு தண்ணீ ஊத்தறது . புல்லு வெட்டறதுன்னு வேலை செய்வோம். ( கார்டன் என்ற ஆங்கில வார்த்தையை வெகு சாதரணமாக புழங்கும் மொழியில் கொண்டு வந்துவிட்டார்கள் )

நான் : சம்பளம் எவ்ளோ குடுக்கறாங்கம்மா?

அவர்கள் :  எட்டாயிரம் ரூவா, சாப்பாட்டுக்கு முந்நூறு , டீக்கு இருநூறுன்னு ஐநூறு புடிச்சிட்டு ஏழாயிரத்து ஐநூறு குடுப்பாங்க. லீவு போட்டுட்டா அந்த நாளைக்கு சம்பளம் கெடையாது. 

நான் : உங்க ஊர்ல விவசாய வேலைங்க இல்லையா? 

அவர்கள் : பெருசா இல்ல! , நெல்லு போட்டுருவாங்க அதுக்கு எப்பவாச்சும் தான் வேலை தேவைப்படும். அதுக்குன்னு கொஞ்ச பேரு இருக்காங்க. அவங்க போவாங்க. 

நான் : இங்க காய்கறி எல்லாம் போட மாட்டாங்களா?

அவர்கள் :அதெல்லாம் முன்ன காலத்தில் இருந்துச்சு. இப்ப எல்லாம் யாரும் போடறதில்ல. எல்லாம் நெல்லு தான். 

நான் : தண்ணீ கஷ்டமா இந்த ஊர்ல?

அவர்கள் :   தண்ணி யெல்லாம் நல்லா இருக்குதும்மா. யாரும் காய்கறி எல்லாம் போடறது இல்ல. நாங்களே கடையில காசு குடுத்து தான் காய்கறி வாங்கிக்கிறோம்.  உங்களுக்கு எந்த ஊரு?

நான் : பொள்ளாச்சி...

அவர்கள் :  உடுமலை பேட்டை கிட்டயா?

நான்: ஆமாங்க...

அவர்கள் :  இருவது வருசத்துக்கு முன்னாடி ஏழு வருஷம் அங்க கல்லறுக்கிறதுக்கு வேலை செஞ்சிருக்கோம்.

நான்: கல்லறுக்கிறதுன்னா?

அவர்கள் :  பச்சக் கல்லு.... பச்ச செங்கல்லு அறுப்பாங்கல்ல அது. 
அங்கயெல்லாம் நிறையா காய்கறிக வெளையும்ல?

நான் : ஆமாங்க...

அவர்கள் : பாத்திருக்கோம். நாங்க போகாத ஊரு இல்ல... என்னமோ வாழ்ந்துட்டு இருக்கோம்.பரீட்சை எழுத வந்தீங்களா ?

நான் : ஆமாங்க...

அவர்கள் : இங்க பக்கத்தில் ஒரு ஊதுவத்தி கம்பெனி இருக்கு. போகும் போது வாங்கிட்டு போங்க. நல்லா மணம் இருக்கும்‌ . பத்த வெச்சா ரெண்டு மணி நேரத்துக்கு எரியும். 

நான் : சரிங்கம்மா.

அவர்கள் :  நாங்க போயிட்டு கார்டனுக்கு தண்ணீ விட்டுட்டு வாரோம். 

எனக்கு கார்டன் என்ற வார்த்தை புரிவதற்கே சில நொடிகள் தேவைப்பட்டது இப்போது. 

கல்லூரியின் பலகை ஒன்றில் All our classrooms are smart Classrooms என்று அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே மிகச் சிறிய எழுத்துக்களில் பேனாவால் , But not our Students என எழுதப்பட்டிருந்தது. எழுதிய மாணவனின் மனநிலையில் எனக்கும் சிரிப்பு வந்தது. எப்படி இதை கவனிக்காமல் இருக்கிறார்கள்? 

விக்னேஷ்வர் வந்ததும் ஊதுபத்தி கம்பெனியை தேடி போனோம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

சரி மணிமங்கலத்தில் இருக்கும் பல்லவர்கள் கால கோவிலுக்கு செல்வோம் என சென்றோம். மிக மிக செழிப்பான ஊர். பார்க்கும் இடமெல்லாம் குளங்கள். பசுமாடுகள் படையெடுத்து வந்தன. ஒரு சில மாடுகளின் கழுத்தில் கட்டையாக மரம் கட்டி தொங்கவிட்ப்பட்டிருந்தது. குறும்பு செய்யும் மாடுகள் போல . படிய வைப்பதற்காக அப்படி கட்டி விட்டிருக்கிறார்கள் என தோன்றியது. ஆனால் அந்த பசு மாடுகளை பார்த்தால் காலத்திற்கும் படிய மாட்டோம் என்ற இறுமாப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தன. ஒரு மாடு மரக்கட்டையால் காரை உரசி நடந்து சென்றது. 

கைலாசநாதர் கோயில் சென்றோம். நான் எதிர்பார்த்த கோவில் அங்கே இல்லை. கண் கூசும் கலர் கலராக பொம்மைகள் வைத்த கட்டிடம் என்று சொல்லலாம். ஆயிரத்தி ஐநூறு வருடங்களுக்கு முன்னால் கல்லில்  கனவுகளை வடித்த நம் மூதாதையர்கள் அவர்களின் கனவுகள் வெற்று நிறங்களாகி மாற போவதை அறிந்திருப்பார்களா ? கைலாசநாதர் கோவிலை பார்த்தே மனம் நொந்து வேறு கோவில்களை பார்க்கவில்லை. 

ஊர் முழுக்க புதிதாக கட்சி ஆரம்பித்த நடிகரின் பேனர்கள் கலர் கலராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெரிய பேனர்களில் கையெடுத்து கும்பிட்டவாறு சிரிப்புடன் நிற்கும் அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் நிகழ் காலத்திற்கு அபத்தமாக இருக்கின்றன. 

காய்கறிகள் வாங்கினேன். கோயம்பேட்டில் இருந்து தான் காய்கறிகள் வருகிறது என்றனர். ஆனால் மயிலாப்பூரில் விற்கும் விலையை விட குறைவான விலை. 

மணி மங்கலம் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை விரட்டியடித்த போர் . தக்கோலம் கடைசி சோழ அரசன் தோற்று ராஷ்ட்ரகூடர்கள் உள் நுழைந்த இடம். ஆனாலும் இவ்விரு ஊர்களிலும் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் ஒரு தகவல் பலகை கூட வைக்கப்படவில்லை. நினைவிடங்கள் ஏதும் இல்லையென்றாலும் ஊர் ஆரம்பிக்கும் இடத்தில் தகவல் பலகை இருக்க வேண்டும். 

Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
Jan 11 2025