மாமரத்து கிளைகளும், இலைகளும் தாழ்வாரத்து நிழலுடன் பொறுமையாக நகர்ந்து அமைதியாக தங்களுடைய இருப்பிடத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்தன. நிழல்கள் சில சமயங்களில் தாவி வரும் முயல்களை போல நிலத்தை ஆக்கிரமிக்கின்றன. சில சமயங்களில் மெதுவாக நகரும் ஆமைகளை போல. சில சமயங்களில் காலை மிருதுவாக வருடி கொடுக்கும் வாய்க்கால் நீரின் சிற்றலைகள் போல.மற்றும் சில சமயங்களில் அசை போடும் மாட்டை போல. கோலம் போட்டிருக்கும் போது விழும் நிழல், ஆற்றில் சிறு பாறைகளின் மீது கால் வைத்து நடக்கும் இளம் பெண்களை போல சிலிர்ப்புடனும், சிரிப்புடனும் நகர்கின்றன.பூஜைக்கான பித்தளை சாமான்களை கழுவி கவிழ்த்திருக்கும் போது அதில் முகம் காட்டி அழகு பார்த்துக் கொள்கின்றன. விக்னேஷ்வர் செய்தித்தாள் படிக்கும் போது தாழ்வாரத்து நிழலும் உடன் படிக்கிறது. அப்போது அவை இருக்கின்றனவா இல்லையா எனும் படி அவருடன் ஒன்று கலந்து விடுகின்றன.நான் துணி காய போடும் போது கண்ணாமூச்சி விளையாடுகின்றன நிழல்கள் . நாங்கள் இருவரும் அமர்ந்து ...