நாம் புழங்கும் பொருட்கள் நம்முடைய முகமாகவே மாறி விடுவதன் மாயத்தை எண்ணி புன்னகை வந்தது. பக்கத்து வீட்டுக்காரம்மா பலகாரம் கொடுத்து விட்ட பாத்திரம் நம் வீட்டில் அந்நியமாகவே தெரிவது எப்படி ? வீட்டின் பாத்திரங்கள் அதை ஏற்றுக் கொள்வதேயில்லை. நான் எப்போது வீட்டுக்கு செல்வேன்? என்று ஏக்கத்துடனும் , பரிதவிப்புடனும் இருக்கும் பால்வாடி குழந்தையை போல இருக்கிறது அது. அதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதில் நானும் ஏதேனும் பலகாரத்தை போட்டு தான் கொடுக்க வேண்டும். இரும்பு வடசட்டியை எடுக்கும் போதெல்லாம் பெரியம்மாவின் சாயல் தெரிகிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக என் அம்மா அதை பயன்படுத்தி வந்திருந்தாலும் அம்மாவின் சாயலை அதில் நான் ஒரு போதும் கண்டதில்லை. அம்மாவிற்கு பெரியம்மா கொடுத்த நல்ல கனமான இரும்பு வடசட்டி. திருமணத்துக்கு பிறகு அம்மாவின் வீட்டுக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் சூட்கேசில் வைத்து தூக்கி கொண்டு வந்தேன். பெரியம்மா எனக்காகவே அம்மாவிடம் கொடுத்தாள் என்று எண்ணுகிறேன். வடசட்டி சூடாக ஆரம்பித்தது . நிலக்கடலையை எடுத்து போட்டேன். தீயை மிதமாக வைத்தேன். முதலில...