நேற்று இரவு வீட்டுக்கு வருவதற்கே மணி பனிரெண்டு ஆகியிருந்தது. இருப்பினும் காலை ஆறு மணிக்கே முழிப்பு வந்து விட்டது. நண்பரின் வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். நாங்கள் எழுந்து காலை நடை சென்று வந்தோம். மழை சிறு தூறலாக ஆரம்பித்தது பெரிய மழையாக கொட்டியது.. வீட்டில் அனைவரும் எழுந்திருந்தனர். பிள்ளைகள் செஸ் விளையாட ஆரம்பித்தனர். அவர்களோடு விக்னேஷ்வர் சேர்ந்து கொண்டார். நிலக்கடலை சட்னியும் தோசையும் கொடுத்தார்கள். வெளியே மழை கொட்டி கொண்டிருந்தது. பதினோரு மணியளவில் மழை விட்டதும் சலார்ஜங் மியூசியம் சென்றோம். நண்பரின் பைக்கை எடுத்து கொண்டு ஒரு மணி நேர பயணம். முதன்மை சாலையில் அரசியல்வாதிகளின் படம் கட்சி கொடிகளுடன் தொடர்ச்சியாக இருந்தது.மாநிலங்கள் தான் மாறுகிறது , அரசியல்வாதிகளின் உடல்மொழியும், அதற்கென்றே கொண்ட சிரித்த முகமும் ஒன்று போலவே இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற போது இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களில் எதுவும் இதை போன்ற உடல்மொழி இல்லை. பேனர் கலாச்சார காலம் வந்த பிறகு தான் அரசியல்வாதிகளின் பொதுவான உடல்மொழியும் பரவியிருக்கிறது. சலார்ஜுங் மியூசியம்,...