ஜி.எம் பெண்ணின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என கூறினார் விக்னேஷ்வர் . சமீப நாட்களில் நீண்ட தூர பயணங்களின் மீது சற்று பயம் கூடிப்போனது எனக்கு . இதை அவரிடம் கூறினால் , பயத்தை போக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் இதை போன்ற பயணங்களை திட்டமிடுவார். பயத்தை காட்டி கொள்ளாமல் சரி போகலாம் என்றேன். பேருந்துகளை பார்த்து புக் செய்துவிட்டு இரவில் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும் அனைத்து தயக்கங்களும் விலகி, பயம் இருந்த சுவடே இல்லாமல் போக , தேவையானவற்றை பேக் செய்ய ஆரம்பித்தேன். பேக் செய்து முடித்தவுடன் வீட்டையே நான் ஹைதராபாத்திற்கு எடுத்து செல்வதை போல உணர்ந்தேன். நாம் பயணம் செல்லும் போதெல்லாம் வீட்டையே நம்முடன் எடுத்து செல்கிறோமோ? வெள்ளிக்கிழமை இரவு, கோயம்பேடு செல்வதற்கு ஆட்டோ வரவைத்து ஏறி கொண்டோம். ஆட்டோவில் ஏறியதும் உணர்ந்தோம் பிரௌனி நிற்கிறான் என்று. அவனை உள்ளே கொண்டு செல்வது கடினம். விக்னேஷ்வர் இறங்கி வேகமாக வீட்டை நோக்கி ஓடினார். பிரௌனியும் அவர் பின்னாலயே ஓடினான். கேட்டை திறந்தும் அவரும் உள்ளே ...