Skip to main content

மினிமலிஸ்ட்....

                          மினிமலிஸ்ட்  என்ற வார்த்தை எப்போதுமே மனதை நெருட செய்து கொண்டே  இருக்கிறது. வெறும் மூன்று ஆடைகள்  மட்டுமே போதும் அது கிழிந்தால் அடுத்தது வாங்கினால் போதும் இது தான்  மினிமலிசிட் என்பதன் விளக்கமா  என்றும் தெரியவில்லை.தன்னுடைய நிலை என்னவென்பதை ஏற்கனவே நிலை நாட்டியவர்கள்  மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை எண்ணி பயப்பட வேண்டியதில்லை. ஆனால் தற்போது தான்  சமூகத்தில் எழுச்சி பெற்று வரும் மக்கள், மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள் என்பதை யோசித்து தான் செயல்பட முடியும். நல்ல சம்பளத்தில் வாழ்ந்து அதன் பிறகு அதில் மனம் நிம்மதி இல்லாததை  உணர்ந்து  மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்பவர்கள்  முதல் தலைமுறையில் நல்ல துணியை போடுபவன் மனிதில் குற்ற உணர்ச்சியையே உண்டாக்குகிறார்கள். மினிமலிஸ்ட்களை   உலகம் கொண்டாவதை  எப்படி ஏற்றுக்  கொள்ள முடியும்? காந்தியே அவருடைய ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் போல் உடை உடுத்தி அதை குடும்பத்தினரிடமும் திணித்தவர் தான். 

சில காலம் அவரவர் வாழ ஆசைப்பட்ட வாழ்வை வாழ்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அதை  போன்ற ஒரு சிறு மகிழ்ச்சி  கூட இல்லாத வாழ்வை விட்டு ஏன்  வண்ணங்களற்ற வாழ்வை வாழ வேண்டும்?  அவரவர்கள் புரிதல் வரும் போது தங்களுக்கான  பாதையை  தேர்ந்தெடுத்து கொள்ளலாம் இல்லையா .

அம்பேத்கர் மிடுக்காக  உடுத்தியதிலும் காந்தி அரை ஆடை உடுத்தியத்திலும் உள்ள மனநிலையை புரிந்து கொண்டால் மட்டுமே , சராசரி நடுத்தர மக்களின் இப்போதைய மனநிலையை புரிந்து கொள்ள முடியும் . ஒருவர் நல்ல சம்பளத்தில் இருக்கும் போது அவருடைய வீட்டில் உள்ளவர்களை ஒரு 5 ஸ்டார்  ஹோட்டலுக்கு அழைத்து செல்வதில் என்ன தவறு  இருக்க முடியும்? அதை மிச்சம் வைத்து அவர் வாழ்க்கையில் எது வாங்கினாலும் அவருடைய  குடும்பம் அந்த ஹோட்டலை  ஏக்கமாக பார்த்து கொண்டே  தானே இருப்பார்கள். 

பணக்காரர்களை  போல நடித்தல் என்று இன்றைய மிடில் கிளாஸ் மக்களின் மீது சுமத்தும் கிண்டல் கேலிகள் செய்பவர்கள் உண்மையில்  பணக்காரர்கள் அல்ல.குறிப்பிட்ட அளவு பணம் வைத்து  சிந்திக்கும் திறன் படைத்தவர்களே கேலி செய்பவர்கள். உண்மையான பணம் வைத்திருப்பவன் இது போன்ற விஷயங்களை கண்டு கொள்ள போவதே இல்லை . அதை இன்னும் அதிகப்படுத்தவே பார்ப்பார்கள் பெரும் பணம் படைத்தவர்கள் . அப்படி தானே  சமூகம் வளர முடியும்? அந்த ஹோட்டலுக்கு உண்மையான  கஸ்டமர்கள் அந்த மிடில் கிளாஸ் மக்கள் தான் . அதை பார்த்து சிரித்து  கொண்டிருப்பவர்கள் ஆபீஸ் பணத்தில் அங்கு தங்கி  வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்கள். அவர்களின் மனதில் என்னிடம் பணம் இருக்கறது. இந்த மிடில் கிளாஸ் மக்கள் என்னை விடவும் கீழானவர்கள். அவர்கள் பணக்காரர்கள்  போல பந்தா காட்டுகிறார்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி சிரிப்பவர்கள்,  என்னிடம் பணம் இருக்கறது நான் பந்தா செய்யவில்லை என்று பேசும்  ஒரு வித வியாதி பிடித்தவர்கள் . ஒரு சமூகத்தின் பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களே  இதை போன்று பேசிக்  கொண்டிருக்க முடியும்.

போல செய்தல் என்பதை வைத்து தான் ஒரு மனிதன் வளரமுடியும். குழந்தைகள்  வளரும் போது தனக்கான வாழ்வை  எப்படி இந்த சமூகத்தில் நிலை நாட்ட முடியும் என்பதை பெற்றவர்களை  வைத்து தான் புரிந்து கொள்கிறார்கள் . அவர்களை  போல செய்வதனால் மட்டுமே நம் உயிர் வாழ முடியும் என்று அதை போலவே செய்கின்றனர் குழந்தைகள். இதை  எப்படி  கேலி கிண்டல்கள்  செய்ய முடியாதோ அதே மாதிரி தான் பணக்காரர்கள்  போல செய்யும் மிடில் கிளாஸ் மக்களின்  நிலையும்  . நான் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சிறிய ஹோட்டலில்  தான் உணவு உண்பேன் என்று பெருமை பேசுவதே ஒரு வித எரிச்சலின் வெளிப்பாடு  தான். சிம்பிளா  இருக்கேன் என்று சொல்லுவதில் உள்ள போலித்தன்மை நகைப்புக்கு உரியதாக உள்ளது. 

நன்றாக வயிறு புடைக்க உண்டு விட்டவர்கள், பசியோடு  உண்பவர்களை பார்த்து சோற்றுக்கு  அலைகிறார்கள் என  ஏளனம் செய்வது தான் சமூகத்தில் நடந்து வருகிறது. இப்போது பணக்கார்கள் போல நடிக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கு இரண்டு தலைமுறைகள் தேவைப்படும் பசி ஆறுவதற்கு  . 

 Manobharathi Vigneshwar

09.12.2024

ATA Library