பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது க்வாக்கி க்வாக்கி என்ற கடுமையான புதிய குரல் ஒன்றை கேட்டு பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தேன். நெல்லிக்காய் மரத்தின் இரண்டாவது கிளையில் அமர்ந்திருந்தது ஒரு பறவை . ஃபோல்கா புள்ளிகள் அதன் தேகம் முழுவதும் கருப்பு வெள்ளையாக இருந்தன. திரும்பவும் அதே போன்ற ஒரு கத்தல். காகத்தின் குரலில் கூட ஒரு அழைப்பு இருக்கும். இந்த பறவையின் குரல் எதையோ ஆணையிடுவது போல , கொஞ்சம் கடுமையாக இருந்தது. அடுத்த நொடியே தொட்டு கண் மை இட்டுக் கொள்ளலாம் என்ற வண்ணத்தில் முழுமையான கருமையுடன் சிவப்பு மணி கண்களை உருட்டியபடி பலா மர கிளையில் வந்தமர்ந்தது இன்னொரு பறவை. ஃபோல்கா புள்ளி பறவையின் கத்தல் அமைதியாகியது. பலா மரத்தில் இருந்த பறவை தன்னுடைய சிவந்த வாயை திறந்தது. முதலில் க்வாக்கி என்ற சத்தத்தை கொடுத்து பிறகு க்கூ , க்க்கூ என்று கூவ ஆரம்பித்தது. குரலை வைத்து தான் அது குயில் என்பதையே தெரிந்து கொண்டேன். நாலைந்து முறை கூவி விட்டு பலாமர கிளையிலிருந்து , நெல்லிக்காய் மர கிளைக்கு பறந்தமர்ந்தது. ஃபோல்கா புள்ளி பறவை மேலும் உயர்ந்த கிளையில் பறந்தமர்ந்தது. திரும்பவும் குயில் கூவ ஆரம்பித்தத