Skip to main content

Posts

ஜிம்

     எவ்வளவு நேரம் நடந்தாலும் நகராத நிலம். எத்துணை நேரம் மிதித்தாலும் பயணத்தை கொடுக்காத சைக்கிள்.தப்பி செல்ல முடியாமல் தவிக்கும் கனவைப் போல கண்முன்னே இருக்கின்றன ஜிம்மில் இருக்கும் மெஷின்கள். பழ ஈ ஒன்றின் முகம் போல இரண்டு முன் கைகளை நீட்டிக்கொண்டு சக்கரங்களை சுழல் வைக்கும் மெசின். சீட்டில் உட்கார்ந்தால் கால் எட்டாத சைக்கிளை நின்று கொண்டே மிதிப்பதை போன்ற உடல் அசைவை தருகிறது.   பகலிலேயே லைட் போட்டு அளவான குளிர் காற்றோடு கொஞ்சம் இரைச்சலாக கேட்கும் பாடல்களோடு ( ஒருவேளை எனக்கு மட்டும் தான் இரைச்சலோ ) சிலர் தங்கள் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு அதிக இரைச்சலை கொடுக்கும் ஹெட்செட் களை அணிந்தவாறு முற்றிலும் வேறு உலகத்தில் இருக்கிறார்கள் . நம்முடைய கால்களையும் , கைகளையும் அசைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட மெஷின்கள்.   சக்கரத்தின் கண்டுபிடிப்பையே மாற்றம் செய்த தற்கால மனிதனின் அறிவு வளர்ச்சி.மெசின்கள் மனிதனை ஆட்டி வைக்கும் பொம்மலாட்ட நூல்கள் போலவே தெரிகின்றன. இயற்கையின் பிடியில் இருந்து தப்பிய மனிதன் தானே உருவாக்கிய மெசின்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கிறான். திரும்பும் இடமெல்லாம் கண்ணாடிகள். மனிதர்

வெந்தயக்கீரை....

  அம்மியில் வைத்து அரைத்தால் நொறு நொறுவென சத்தத்துடன் மாவாக மாறும் தன்மையுள்ளதாக இருந்தது வெந்தயம்.‌ மெல்லிய கசப்பு மணம் அதை மேலும் வசீகரமுள்ளதாக்கியது. கைப்பிடி அளவு வெந்தயம் எடுத்து சிறு பாத்திரத்திலிட்டு கழுவினேன். நீர் மங்கலான மஞ்சள் நிறத்தில் சிறு தூசிகளுடன் உடையதாக ஆகியது. திரும்பவும் ஒரு முறை நீர் விட்டு கழுவினேன். கண்ணாடிக்குள் வெறுமனே வைத்தது போல் வெந்தயம் நீரில் மூழ்கியிருந்தது. இரவில் அதை மூடி வைத்துவிட்டு உறங்கிப்போனேன்.  மறு நாள் காலையில் வந்து பார்த்த போது தன்னால் குடிக்க முடிந்த அளவு நீரை உள்வாங்கி வளமான மினுமினுப்புடன்  வெந்தயம் அளவான புன்னகையை காட்டியது. நீர் அடர்த்தியான பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் மெலிதான ஆடைகட்டி இருந்தது. திரும்பவும் நீர் விட்டு அலசி வடிகட்டினேன். முத்துக்கள் போல துணியில் அல்லாடியது வெந்தயம்.  தென்னை மரத்தின் வேரின் அருகில் சிறு பள்ளம் பறித்தேன்.  மண்ணை தன் உடல் முழுதும் இறுக்கமாக பூசிக் கொண்ட சிறு சிறு கற்களாக வந்தன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சுண்டுவிரல் அளவான சிறு பள்ளத்தில் ஊறிய வெந்தயத்தை பரப்பினேன். அதன் மீது பறித்தெடுத்த மண்ணை மேலோட்

அம்மாவின் முகங்கள்....

       பசுஞ்சாணத்தை குளிர்ந்த நீரில் கரைக்கும் போது மட்டுமே எழும் மணம் மார்கழியின் அதிகாலை தான். மூன்றாம் வகுப்பில் மீனலோசினி டீச்சர் காலை ஐந்து மணிக்கு வெள்ளி கோள் பூமிக்கு மிக அருகில் தெரியும் என்று வகுப்பெடுத்திருந்தார். சின்னதா மூக்குத்தி மாதிரி மினுங்கிட்டு இருக்கும் என்று கூறும் போது டீச்சருடைய மூக்குத்தி போல இருக்குமோ என்று கற்பனை செய்திருந்தேன். பெரியவள் ஆனதும் மீனலோசினி டீச்சர் போலவே மூக்குத்தி போட வேண்டும் என்று எண்ணினேன். அன்றிரவே அம்மாவிடம் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பும்படி கூறிவிட்டு உறங்கிப் போனேன். காலையில் அம்மா வாசல் தெளிக்கும் தப்தப்பென்ற சத்தம் கேட்டு வேகமாக பாயிலிருந்து எழுந்து ஓட எத்தனிக்கும் போது கொலுசின் திருகாணி பாயின் நூலில் மாட்டிக் கொண்டு தாமதப்படுத்தியது. நூலை வேகமாக இழுத்து பிய்த்துக் கொண்டு வெளியே ஓடினேன். அம்மா, உங்கள அஞ்சு மணிக்கு என்னய எழுப்ப சொன்னேன்ல என்று முகத்தில் விழுந்த முடியை இருபுறமும் தள்ளிவிட்டுக் கொண்டு வானத்தை நோக்கியபடி கேட்டேன். இன்னும் அஞ்சு ஆகல சாமி என்று கூறியது எங்கேயோ கனவில் கேட்டது. வானத்தின் ஓரத்தில் மினுங்கிய மூக்குத்தியை பா

வீடு என் வீடு.....

 சோபாவில் வந்து அமர்ந்தால் ஜன்னலின் வழியே தெரிவது எதிர்வீட்டின் உப்பரிகை தான். முகலாயபாணியில் கட்டப்பட்ட வீட்டின் முகப்பும் , உப்பரிகையும் நான் பார்த்ததும் மலர்ச்சி கொள்வது போல தோன்றும். மனிதர்கள் வீட்டை எத்தனை வடிவங்களில் கட்டுகிறார்கள். அதை அவர்கள் தினந்தோறும் ரசித்து மகிழ்ச்சியாக பார்க்கிறார்களா ? எத்தனை பேர் தங்களுடைய வீட்டை வெளியில் நின்று வருடத்தில் ஒரு நாளேனும் ரசிக்கிறார்கள். வீட்டின் வடிவங்களை பார்ப்பவர்கள் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர்களே எனத் தோன்றுகிறது. அவர்களும் ஜன்னலைத் திறந்தால் மட்டுமே.  நாங்கள்  கருங்குழியின் வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இரண்டரை வருடங்களாக ஜன்னலையே திறந்தததில்லை. கதவும் சாத்தியே இருக்கும். என் மனதையே  அப்படித்தான் வைத்திருந்தேனோ என இப்போது தோன்றுகிறது. ஏதோ ஒரு நாள் காலையில் திடீரென வீட்டின் அனைத்து ஜன்னல்களையுமே திறந்து வைத்தேன். வீடே குளுமையாகவும் , வெளிச்சமாகவும் மாறியது. இதற்கும் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்பட்டிருந்தாலும் நான் திறந்து வைக்க விரும்பாமல் இருந்த காரணத்தை என்னால் யூக

பேராசிரியர் டாக்டர். ஜினு கோஷியும் மாணவர்களும் ......

      செங்கல்பட்டிற்கு அருகே செட்டிமேடு பதூர் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடப்பதை அறிந்து கொண்டு அங்கே சென்று பார்த்தோம். நாங்கள் இப்போதிருக்கும் கருங்குழியில் இருந்து இருபது நிமிட பயணம் மட்டுமே செட்டிமேடு பதூர்.  இவ்வூர் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களை மீடியாக்கள் ஏற்கனவே பதிவு செய்துவிட்டன. அதனுடைய இணைப்புகளை  முடிவில் தந்திருக்கிறேன்.  அகழ்வராய்ச்சி மாணவர்களை பற்றியும் அவர்களுடைய பேராசிரியர்களைப் பற்றியும் மட்டுமே நான் எழுதுகிறேன்.   நாங்கள் அவ்விடத்தை அடைந்தபோது கல்லூரி மாணவ மாணவிகள் வெயிலை பொருட்படுத்தாமல் சிலை செதுக்குவதை போல மண்ணை உள் நோக்கி மிகக் கவனத்துடன் செதுக்கி கொண்டிருந்தனர். செதுக்கும் மாணவர்க்கு உதவியாக மாணவிகளும் அவர்கள் கூறும் விசயங்களை குறிப்பெடுத்து எழுதும்  மாணவர்களும் என முழுக்க முழுக்க இளம் தலைமுறையினர் மட்டுமே இருந்தனர். வரலாற்றை தோண்டுவது என்று தான் தேய்ந்த சொல்லாட்சியை கேள்விபட்டிருக்கிறோம். இங்கே பழங்கால வரலாற்றை செதுக்குவதை  நாங்கள் கண்டோம்.  ஒரு கேக் வெட்டுவதை போல படிப்படியாக மண்ணை இவ்வளவு அழகாக அகழ்ந்தெடுக்க முடிய