சோபாவில் வந்து அமர்ந்தால் ஜன்னலின் வழியே தெரிவது எதிர்வீட்டின் உப்பரிகை தான். முகலாயபாணியில் கட்டப்பட்ட வீட்டின் முகப்பும் , உப்பரிகையும் நான் பார்த்ததும் மலர்ச்சி கொள்வது போல தோன்றும். மனிதர்கள் வீட்டை எத்தனை வடிவங்களில் கட்டுகிறார்கள். அதை அவர்கள் தினந்தோறும் ரசித்து மகிழ்ச்சியாக பார்க்கிறார்களா ? எத்தனை பேர் தங்களுடைய வீட்டை வெளியில் நின்று வருடத்தில் ஒரு நாளேனும் ரசிக்கிறார்கள். வீட்டின் வடிவங்களை பார்ப்பவர்கள் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர்களே எனத் தோன்றுகிறது. அவர்களும் ஜன்னலைத் திறந்தால் மட்டுமே.
நாங்கள் கருங்குழியின் வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இரண்டரை வருடங்களாக ஜன்னலையே திறந்தததில்லை. கதவும் சாத்தியே இருக்கும். என் மனதையே அப்படித்தான் வைத்திருந்தேனோ என இப்போது தோன்றுகிறது. ஏதோ ஒரு நாள் காலையில் திடீரென வீட்டின் அனைத்து ஜன்னல்களையுமே திறந்து வைத்தேன். வீடே குளுமையாகவும் , வெளிச்சமாகவும் மாறியது. இதற்கும் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்பட்டிருந்தாலும் நான் திறந்து வைக்க விரும்பாமல் இருந்த காரணத்தை என்னால் யூகிக்கவே இயலவில்லை. சமையலறையில் நின்றாலே வேர்வை ஊற்றும். இப்போதெல்லாம் இயல்பாக இருக்கிறது . வீட்டை குளுமையாக்கவும் , காற்று வரவும் , மகிழ்ச்சி வரவும், வெளிச்சம் வருவதற்குமே ஜன்னல்கள் அமைக்கிறார்கள் என புரிந்து கொள்வதற்கு இவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டதா எனக்கு ?
வாயில் கதவிற்கு அருகில் இருக்கும் ஜன்னலை திறந்ததும் முதலில் தெரிந்தது எதிர் வீட்டு உப்பரிகை தான். நான் பார்த்த கணமே அந்த வீடு மலர்ச்சி கொள்வதை உணர்ந்தேன். தன்னை ஒருவர் கவனிக்கிறார்கள் என்பது எவ்வளவு ஆனந்தத்தை தருவதாக இருக்கிறது வீடுகளுக்கு. மிகச்சிறிய வீடு ஒரு அடுக்கு மாளிகை தான். வீடு முழுவதற்கும் வெள்ளை நிறமும் , அதனுடைய உப்பரிகையின் முகப்பு பார்டர்களில் ராமர் பச்சை நிறமும் , இருபுறமும் உள்ள தூண்களில் முந்தரி கேக்கை வைத்தது போன்ற வடிவமைப்பில் வெண்மை நிறமும் அடிக்கப்பட்டிருந்தது.
வீட்டை சரியாக நாம் உற்று நோக்கினால் அவை நம்முடன் உரையாடும். வீடு அங்கு வாழ்பவர்களையே பிரதிபலிப்பதாகவே எண்ணுகிறேன். வீட்டில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளையே வீட்டின் வெளிப்புறம் காட்டுகிறது. சில வீடுகளின் தோற்றத்தை பார்த்தாலே நம்மையறியாமல் மகிழ்ச்சி தொற்றிக் கொள்வதை உணர்கிறேன். எத்தனை அழகான வடிவமைப்பில் இருந்தாலும் சில வீடுகள் நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தாதையும் பார்க்கிறேன். வீடு என்பதன் வரையறை வெறுமனே வெளிப்புறத் தோற்றம் இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது. சில வீடுகள் எப்போதும் சோம்பலில் இருப்பது போலவும் , சில வீடுகள் கோபத்தில் இருப்பது போலவும் , சில வீடுகள் குறும்பு குழந்தைகள் ஏதோ ஒன்றை உடைத்து விட்டு அதை மறைப்பதற்காக சிரிப்பது போலவும் , சில வீடுகள் உம்மென்றும் , சில வீடுகள் வரவேற்கும் புன்னகையை கொண்டுள்ளது போலவும் , சில வீடுகள் அமைதியான பக்தி சூழலை காட்டுவது போலவும் என்று மனிதர்களின் வாழ்நாளில் நிகழும் அனைத்தையும் தன்னிடம் வைத்துள்ளன வீடுகள்.
வீடு என்றதும் எனக்கு நினைவில் நிற்பது பொள்ளாசி உடுமலை நெடுஞ்சாலையில் இருந்த ஒரு கிராமத்தில் நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்த போது இருந்த வீடு தான். இரண்டே அறைகள் கொண்ட வீடு.
வடக்கு பார்த்து இருக்கும் வீட்டில் நுழைந்ததும் குட்டி வரவேற்பறை. ஒரு சிறு சுவர் வைத்து சமையலறை விறகடுப்பு . தென்னை மட்டையை கைக்கு அடக்கமாக வெட்டி அடுப்பில் வைக்க ஏதுவாக வைத்திருப்பார் அம்மா. அருகில் இருக்கும் சிறு சுவற்றில் சமையல் சாமான்கள் வைக்கும் டப்பாக்கள் அடுக்கியிருக்கும். வலது பக்கம் சிறு அறை அது தான் எங்கள் அனைவருக்கும் படுக்கையறை. அங்கே பீரோவும் , டேபிளும் , மரப்பெட்டிகளும் , வைக்கப்பட்டிருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது அந்த குட்டி வரவேற்பறை தான்.படுக்கை அறைக்கு நான் செல்வதே , பிஸ்கட் டின்னில் இருக்கும் திண்பண்டங்களை எடுப்பதற்கு தான். வீட்டின் தளம் ஜல்லி மண் கொண்டு போடப்பட்டு இருக்கும். அதற்கு அம்மா வாரந்தோறும் சாணி மொழுகுவார். ஜல்லி மண் போட்ட தளம் என்பதால் வீடு எப்போதும் குளுமையாகவே இருந்ததாகவே நினைவு இருக்கிறது. வீட்டின் இருபுறமும் ஜல்லிமண் போட்ட திண்ணை. வாசலும் ஜல்லிமண் போட்டது தான். வாசலில் இரு வரப்புகளாக பூச்செடிகள் வைக்கப்பட்டிருக்கும். வலது புற திண்ணையின் முடிவில் ஒரு சுண்டைக்காய் செடியும் , துவரம் பருப்பு மரமும் , பப்பாளி மரமும் இருக்கும்.
சுண்டைக்காய் செடியின் நிழலில் ஆட்டாங்கல்லும் , அம்மிக்கல்லும் இருக்கும். சுண்டைக்காய் செடியையே மரமாக நினைத்த வயதில் இருந்தேன் நான் அப்போது. துவரம்பருப்பு மரத்தின் நிழலில் ஒரு சிறு சிமெண்ட் தொட்டி எப்போதுமே நீருடன் இருக்கும். அதற்கருகே அடுப்பு சாம்பலும் தேங்காய் மஞ்சியும் இருக்கும். அங்கே வைத்து தான் சமையல் பாத்திரங்களை கழுவுவது . அந்த நீர் கீரைச்செடிகளுக்கு செல்லும் வகையில் சிறு மண் வாய்க்கால் அமைக்கப்பட்டிருக்கும். பப்பாளி மரத்தின் நிழலின் கீழ் துணி துவைக்கும் கல் அடுக்கப்பட்டிருக்கும் . மஞ்சள் நிற அரசன் சோப் எப்போதுமே கவருடன் வைக்கப்பட்டிருக்கும். துணி துவைக்கும் நீர் கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டிருக்கும் குழாய்க்குள் செல்லும்.
இவற்றையெல்லாம் கடந்து பெரிய குளியலறையும் , சிறிய கழிவறையும் இருக்கும். சுற்றிலும் தென்னையோலை கொண்டே மறைத்திருந்தார்கள். அந்த படலில் புடலங்காய் கொடியும் , அவரை கொடியும் , ஜூஸ் காய் கொடியும் படர்ந்திருக்கும். ஒரு பக்கம் ரோஜா செடி நன்றாக பூ கொடுத்துக் கொண்டிருந்தது. பெரிய குளியலறையின் ஒரு ஓரத்தில் வாழைமரமும் , முருங்கை மரமும் நடப்பட்டு இருந்தது. இன்னொரு மூலையில் தண்ணீர் காய வைக்கும் அடுப்பு பெரிய ஈய அண்டா மூடியுடன் இருக்கும். நான்கு பெரிய சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் எப்போதுமே நிரம்பியிருக்கும். பக்கத்திலேயே சிறு கல்லில் லைபாய் சோப்பு , சிவப்பு நிறத்தில் காய்ந்து கொண்டிருக்கும். இரும்பு போசி தான் தண்ணீர் எடுத்து குளிக்கும் மக்காக ( Mug ) பயன்படுத்தப்பட்டது. அவரைப்பூக்கள் உதிர்ந்திருக்கும் தொட்டி தண்ணீர்.
வீடு என் வீடு நானும் அம்மாவும் , இரண்டு அக்காக்களும் அவ்வப்போது வந்து போகும் ஊர்பாட்டியும் , எப்போதுமே எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த ராமன் என்ற நாயும் வாழ்ந்த வீடு. நான் இரண்டாம் வகுப்பும் , காருண்யா அக்கா ஐந்தாம் வகுப்பும் , ரேணு அக்கா பத்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம் அப்போது.
மழை நாளில் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு வாசலில் மழைநீர் நிறைந்து செம்மண்ணில் கலந்து செந்நீராகி கொண்டிருக்கும் போது அதன் மேலேயே மேலும் விழும் மழைத்துளிகள் உருவாக்கும் குதிரைகளை எண்ணிக் கொண்டிருப்போம். வாசல் படியில் போட்டிருக்கும் கோணிப்பையின் மேல் அமைதியாக வந்து உடலை சுருட்டி ராமன் படுத்துக்கொள்வான். அம்மா செய்து கொடுக்கும் கருப்பு காபியும், போண்டாவை பிய்க்கும் போது அதிலிருந்து எழும் ஆவியுடன் கூடிய அரிசிமாவின் வெந்த மணம் மழை நாளுக்கு மட்டுமே உரித்தான சுவையில் இருக்கும். மகிழ்வுடன் வாழ்வதற்கு மனம் இருந்தால் மட்டுமே போதும் என்று இப்போது தோன்றுகிறது.
இரவாகும் போது பித்தளை விளக்கில் சீமெண்ணய் ஊற்றி விளக்கு ஏற்றப்படும். விளக்கு வெளிச்சத்தில் ரேணு அக்கா, எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்ததும் இந்நாடே ! என்ற தமிழ் பாடத்தின் கடவுள் வாழ்த்து பாடலை மனப்பாடம் செய்து கொண்டிருப்பாள். அம்மா இரவு நேர உணவு சமைக்க நானும் , காருண்யா அக்காவும் பழைய நோட்டு புத்தகங்களின் பக்கங்களை கிழித்து விட்டு வெறும் அட்டைகளை கொண்டு கூடாரங்கள் அமைத்து , நான் ஒரு கிராமத்தை உருவாக்க , காருண்யா அக்கா ஒரு கிராமத்தை உருவாக்குவாள். இரு கிராமத்திற்கும் இடையே பண்ட பரிமாற்றும் எல்லாம் நடைபெறும். என்னுடைய கூடாரத்திற்குள் சில சமயம் பிஸ்கட் டின்னிலிருந்து எடுத்து வந்து மறைத்து வைத்த முறுக்குகளும் இருக்கும். அதை காருண்யா அக்கா கண்டுபிடிக்கும் போது இரு கிராமங்களுக்கு இடையே மாபெரும் போர் கூட நடைபெறும். சாப்படலாம் வாங்க என்ற ஒற்றை சமாதான குரலில் இரு கிராமங்களும் ஒற்றுமையாகி சாப்பிட அமர்வோம். சிறு வட்டல்களில் தேங்காய் அரிசி கஞ்சி ஊற்றயிருப்பார் அம்மா. தொட்டுக் கொள்வதற்கு தேங்காய் சட்னி . சிறு வட்டலில் இருக்கும் தேங்காய் அரிசி கஞ்சி முழுநிலவு போல பால் வடியும். முழு நிலவை கொஞ்சம் கொஞ்சமாக உண்டு வானத்தை மட்டுமே காட்டும் வட்டலை யார் முதலில் கொண்டு வருவார்கள் என்ற போட்டியும் நடக்கும்.
சாப்பிட்டு முடித்தவுடன் தூங்குவதற்கு முன் பாட்டுக்கு பாட்டு நடக்கும். நீ சொல்லு பூங்காற்றே !! என்று நான் பாடும் அந்த பாட்டுக்காகவே காத்திருந்தது போல அனைவரும் சிரிப்பார்கள். பாட்டுக்கள் தீர்ந்ததும் கதை சொல்வது தொடரும். ரேணு அக்கா தான் கொக்கும் , ஆமையும் கதை கூறுவாள்.
ஒரு பெரிய குளத்தில ஒரு ஆமை இருந்துச்சாம். அங்க ரெண்டு கொக்குக மீன் கொத்த வருமாமா . அப்படி வந்தப்ப ஆமையும் கொக்குகளும் பிரெண்ட் ஆயிட்டாங்களாமா. வெயில் காலம் வந்தப்போ குளத்திலிருந்த தண்ணியெல்லாம் வத்த ஆரம்பிசிருச்சாமா. கொக்குக வேற தூரமா இருக்கிற குளத்துக்கு போயிருச்சுங்களாமா. அப்ப திடீர்னு கொக்குகளுக்கு ஆமையோட நியாபகம் வந்துச்சாம். உடனே பழைய குளத்துக்கு போயிட்டு ஆமைய பாத்தாங்களாம். ஆமை பாவமா இருந்துச்சாம். செரி நீ எங்க கூட வந்திரு வேற குளத்துக்குன்னு கூப்பிட்டுச்சாம் கொக்குங்க. ஆனா என்னால உங்கள மாதிரி பறக்க முடியாதேன்னு ஆமை சொல்லுச்சாம். அதனாலென்ன நாங்க ரெண்டு பேரும் ஒரு குச்சியை ஆளுக்கொரு முனையில பிடிச்சிக்கிறோம். நீ அந்த குச்சியோட நடுவில வாயால கவ்விக்கோ நாம மூணு பேரும் தண்ணியிருக்கிற குளத்துக்கு போயிரலாம்னு சொல்லுச்சுங்களாம் கொக்குகங்க. நல்ல ஐடியாவா இருக்கேன்னு ஆமையும் சந்தோஷமா ஒத்துக்கிட்டு குச்சியை கவ்வி பிடிச்சிட்டு பறந்து போயிருச்சாம். மூணு பேருமே அந்த நிறைய தண்ணி இருக்கிற குளத்தில ஜாலியா சந்தோஷமா இருந்தாங்களாம். என்று கதையை முடிப்பாள் ரேணு அக்கா. கதையை கனவில் கண்டவாறே நானும் காருண்யா அக்காவும் தூங்கிவிடுவோம். வீடு என் வீடு . மகிழ்வதற்காக இருந்த வீடு.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, பரம்பரை சொத்து திரும்ப கைக்கு வந்ததும் அந்த வீட்டை புதிதாக நவீன வசதிகளுடன் எடுத்துக் கட்டினார் அம்மா. ஆனாலும் நினைவில் இருப்பது கூரைவேய்ந்த ஜல்லிமண் தளம் போட்ட அந்த சிறு வீடு தான். எங்கள் அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்தபின் அம்மா இப்போது அமைதியாக தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதே இடத்தில் இருக்கும் வீடு எனக்கு இப்போது அன்னியமாகவே தெரிகிறது. வீடு என் வீடு .
- Manobharathi Vigneshwar
Karunguzhi