Skip to main content

அம்மாவின் முகங்கள்....

       பசுஞ்சாணத்தை குளிர்ந்த நீரில் கரைக்கும் போது மட்டுமே எழும் மணம் மார்கழியின் அதிகாலை தான்.

மூன்றாம் வகுப்பில் மீனலோசினி டீச்சர் காலை ஐந்து மணிக்கு வெள்ளி கோள் பூமிக்கு மிக அருகில் தெரியும் என்று வகுப்பெடுத்திருந்தார். சின்னதா மூக்குத்தி மாதிரி மினுங்கிட்டு இருக்கும் என்று கூறும் போது டீச்சருடைய மூக்குத்தி போல இருக்குமோ என்று கற்பனை செய்திருந்தேன். பெரியவள் ஆனதும் மீனலோசினி டீச்சர் போலவே மூக்குத்தி போட வேண்டும் என்று எண்ணினேன்.

அன்றிரவே அம்மாவிடம் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பும்படி கூறிவிட்டு உறங்கிப் போனேன். காலையில் அம்மா வாசல் தெளிக்கும் தப்தப்பென்ற சத்தம் கேட்டு வேகமாக பாயிலிருந்து எழுந்து ஓட எத்தனிக்கும் போது கொலுசின் திருகாணி பாயின் நூலில் மாட்டிக் கொண்டு தாமதப்படுத்தியது. நூலை வேகமாக இழுத்து பிய்த்துக் கொண்டு வெளியே ஓடினேன். அம்மா, உங்கள அஞ்சு மணிக்கு என்னய எழுப்ப சொன்னேன்ல என்று முகத்தில் விழுந்த முடியை இருபுறமும் தள்ளிவிட்டுக் கொண்டு வானத்தை நோக்கியபடி கேட்டேன். இன்னும் அஞ்சு ஆகல சாமி என்று கூறியது எங்கேயோ கனவில் கேட்டது. வானத்தின் ஓரத்தில் மினுங்கிய மூக்குத்தியை பார்த்துவிட்டேன். ம்மா ம்மா அங்க பாருங்க அது தான் வெள்ளி கோளு வெடியக்காலைல தான் பூமி கிட்ட தெரியுமாமா , மத்த நட்சத்திரம் எல்லாம் ராத்திரில தான் தெரியும் என்று மூச்சு விடாமல் கூறி முடித்தேன். கோலப்பொடி டப்பாவை கையில் வைத்தபடி வானத்தை பார்த்து ம், அத விடிவெள்ளின்னு சொல்லுவாங்க , அது முளைக்கும் போதே வாசல்ல கோலம் போட்ரணும் என்றாள். நானும் அம்மாவும் மட்டுமே வானத்தை பார்த்திருந்தோம். என்றுமில்லாமல் அம்மா என் அறிவுக்கு நெருக்கமாக இருப்பதை உணர்ந்தேன். அம்மாவின் முகமும் என்னுடைய முகமும் ஒரே போல் இருந்தது. 

வாசலில் திப்பி திப்பியாக பசுஞ்சாணி தெளிக்கப்பட்டிருந்தது. வைக்கோல் சாப்பிடும் பசுவின் சாணத்தை எப்போதும் எடுக்க மாட்டாள். பசும்புல் சாப்பிடும் பசு அல்லது கன்னுக்குட்டி சாணமாக தேடி எடுத்து வருவாள். திரும்பவும் வானத்தை பார்த்துவிட்டு அம்மாவின் மூக்குத்தியை பார்த்தேன். அரைவட்டத்தில் வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட பெரிய மூக்குத்தி . ஒவ்வொரு கல்லும் ஒரு வெள்ளிக்கோள் போலத் தோன்றியது. வாசல் கோலம் முடித்து சாணிப்பிள்ளையார் செய்து உச்சியில் செம்பருத்தி பூ வைத்து பிள்ளையாருக்கு சந்தனம் குங்குமம் வைத்திருந்தாள்.

பொழுது பொல பொலன்னு வெடிஞ்சிருச்சு என்று பதட்டத்துடன் சமையலறைக்குள் நுழைந்தாள் . வானத்தை பார்த்தேன் வெள்ளிக்கோள் மினுங்க  இருட்டாகத்தான் இருந்தது. பின்னாடியே நானும் ஓடினேன். துள்ளிக்குதித்து ஓடிய கொலுசு என்னுடையதாகவும் , அவசரமாக ஓடும் நடையின் கொலுசு அம்மாவினுடையதாகவும் இருந்தது.  விறகடுப்பிற்கு சாணம் மெழுகி அதற்கும் ஒரு சிறு கோலம் போட்டு சந்தனம் குங்குமம் வைத்து வணங்கினாள். திரும்பவும் முகத்தில் விழுந்த முடியை இருபக்கமும் ஒதுக்கிவிட்டு நானும் கும்பிட்டேன். அம்மாவின் முகத்தில் என்னுடைய பாட்டியின் சாயலை கண்டேன். 

உடனடியாக சாமியறைக்கு சென்று அங்கேயும் சிறு கோலம் போட்டு பூக்களை சாமிப் படங்களுக்கு வைத்து , தீபமேற்றி  சாம்பிராணி கரண்டியில் புகை போட ஆரம்பித்தாள். ம்க்கஉம் ம்க்கஉம் என்று இருமியபடி நான் நகராமல் அங்கேயே நின்றேன். புகை எழ ஆரம்பித்ததும் என்னுடைய வெண்ணிற கவுனில் நான் தேவருலகில் இருப்பதாக கற்பனை செய்தேன். சிறு வாழை இலையில் கொய்யாப்பழம் ஒன்றும், மாங்காய் ஒன்றும், தேங்காய் ஒன்றும் படைத்தாள்.  பாடல் ஒன்றை பாடி சாமிக்கு பூஜை செய்து விட்டு திரும்பவும் சமையலறைக்கு சென்றாள். அம்மாவுடைய முகமும் சாமிபடத்தில் இருக்கும் சரஸ்வதியின் முகமும் ஒரே அமைதியை கொண்டிருந்தன.

தென்னை ஓலையும், மட்டையும் இணைந்து ஈரமான புகை வாசனையை கொடுத்தபடி மண் அடுப்பில் சீரான வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்தது. பெரிய இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வைத்துவிட்டு , தேங்காயை உடைத்து சட்னி செய்ய ஆரம்பித்தாள். இட்லி வேகும் மணமும் , தேங்காய் சட்னி தாளிப்பும் , வெளியே க்விக் க்விக் என்ற தேன்சிட்டின் சத்தமும் சாம்பிராணி புகையுடன் சேர்ந்து ஒரு புது வித உலகை உருவாக்கியது. சாப்பாட்டிற்கு என சொர்க்கம் இருந்தால் அது இந்த மத்துடன் தான் இருக்கும் என்று எண்ணினேன்.  போதும் போதும் ஓடிப்போய் குளிச்சிட்டு வா என்ற என்னை துரத்தினாள். என்னுடைய கொலுசின் சத்தம் இப்போது தயங்கி தயங்கி சோம்பேறித்தனமாக ஒலித்தது. நான் குளித்து விட்டு  தலைவாரி பொட்டு வைத்து சமையலறையை நோக்கி ஓடினேன். என்னை விட என்னுடைய கொலுசுக்கு தான் அதிகம் பசி இருந்தது போல . என்னுடைய குட்டித் தட்டில் இரண்டு இட்லிகளையும் , வரமிளகாய் சேர்த்து அரைத்த தேங்காய் சட்னியும் வைத்தாள். அம்மாவின் முகம் ஏதோ ஒரு தெய்வத்தின் சாயலில் இருப்பதை உணர்ந்தேன்.

ஒவ்வொரு செயலின் போதும் வெவ்வேறு மாதிரி நான் இதுவரை பார்த்திராத தோற்றமளித்தாள். அம்மாவின் முகங்கள் நிலைக்கு ஒன்றாக மாறியது . கரங்கள் எத்தனை‌ என்று கவனிக்க இயலாத வேகத்தில் வேலை செய்து கொண்டிருந்தன. அன்று முழுக்க அம்மாவின் பின்னாலேயே சுத்திக் கொண்டிருந்தேன். அம்மாவின் முகங்களை கணக்கெடுத்தபடி. 

Manobharathi Vigneshwar 
Raja Annamalai Puram
30-06-2024