Skip to main content

பேராசிரியர் டாக்டர். ஜினு கோஷியும் மாணவர்களும் ......

      செங்கல்பட்டிற்கு அருகே செட்டிமேடு பதூர் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடப்பதை அறிந்து கொண்டு அங்கே சென்று பார்த்தோம். நாங்கள் இப்போதிருக்கும் கருங்குழியில் இருந்து இருபது நிமிட பயணம் மட்டுமே செட்டிமேடு பதூர். 

இவ்வூர் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களை மீடியாக்கள் ஏற்கனவே பதிவு செய்துவிட்டன. அதனுடைய இணைப்புகளை  முடிவில் தந்திருக்கிறேன். 

அகழ்வராய்ச்சி மாணவர்களை பற்றியும் அவர்களுடைய பேராசிரியர்களைப் பற்றியும் மட்டுமே நான் எழுதுகிறேன்.  

நாங்கள் அவ்விடத்தை அடைந்தபோது கல்லூரி மாணவ மாணவிகள் வெயிலை பொருட்படுத்தாமல் சிலை செதுக்குவதை போல மண்ணை உள் நோக்கி மிகக் கவனத்துடன் செதுக்கி கொண்டிருந்தனர். செதுக்கும் மாணவர்க்கு உதவியாக மாணவிகளும் அவர்கள் கூறும் விசயங்களை குறிப்பெடுத்து எழுதும்  மாணவர்களும் என முழுக்க முழுக்க இளம் தலைமுறையினர் மட்டுமே இருந்தனர். வரலாற்றை தோண்டுவது என்று தான் தேய்ந்த சொல்லாட்சியை கேள்விபட்டிருக்கிறோம். இங்கே பழங்கால வரலாற்றை செதுக்குவதை  நாங்கள் கண்டோம். 





ஒரு கேக் வெட்டுவதை போல படிப்படியாக மண்ணை இவ்வளவு அழகாக அகழ்ந்தெடுக்க முடியும் என்றும் மண்ணிற்குள் இவ்வளவு அடுக்குகள் இருக்கும் என்பதும் இங்கு தான் கண்டோம். 




பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு அடுக்கு முடிந்ததும் , சட்டென்று அதனுள் குதித்து ஊசி போன்ற சிறு கம்பியினால் மண்ணை மெலிதாக கீறி சிறு துளை ஒன்றை போட்டு மண் மாதிரிகளை எடுத்துக் கொடுத்தார் அவர்களுடைய பேராசிரியர். அதே போன்ற மண் மாதிரி எந்த ஆழம் வரைக்கும் வருகிறதோ அது ஒரு காலகட்டம் என்று கோடு போடப்பட்டது. ஒவ்வொரு அடுக்கும் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை. வரலாற்று காலகட்டங்களை மண்ணின் சிறு அடுக்குகளாக கண்ட போது மூச்சையடைத்தது...

மண் மாதிரிகளை ஒரு இரும்பு சட்டியில் எடுத்துக்கொண்டார் ஒரு மாணவி. திரும்பவும் பேராசிரியர் எம்பி மேலே குதித்து சமதளத்திற்கு வந்து சம்மணம் போட்டு அமர்ந்து குறிப்புகளை எழுத ஆரம்பித்தார். மண் மாதிரிகளை மாணவி கொண்டு வந்து அவரிடம் வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றார். அங்கே  ஒரு பேரியக்கம் தொடர்ந்து சலிப்பில்லாமல் , ஓய்வில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு செயல் எவ்வித அதிகாரமும் இன்றி ஏவல் குரல்களும் இன்றி அறிவார்ந்த உரையாடல்களுடனும் , அதனால் விளைந்த சிறு சிரிப்புகளுடனும் மட்டுமே அமைதியாக நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஒரு மாபெரும் வேள்வி நடந்து கொண்டிருக்கிறது என்று எண்ணச் செய்தது .





நாங்களும் அவர்களின் வேலைக்கு இடையூறு தரக்கூடாது என்று அமைதியாகவே நின்றிருந்தோம். பேராசிரியர் அவரது குறிப்புகளை முடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தார். எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். மெல்லிய புன்னகையுடன் ஒரு மாணவியை அழைத்து எங்களுக்கு இவ்வகழ்வாய்வை பற்றி விளக்கச் சொல்லிவிட்டு அடுத்த ட்ரென்ச்சை நோக்கி சென்றார். 

ஆராய்ச்சி மாணவி எங்களுக்கு அகழ்வாய்வை பற்றிய அனைத்தையும் உற்சாகத்துடன் விளக்கினார். சிவப்பு கருப்பு சுடுமண் பாத்திரங்களின் ஓடுகள் இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஆர்வமிகுதியால்  ஒரு கருப்பு சுடு மண் ஓட்டை எடுத்து கையில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.



சுடுமண் ஓட்டைத் தொட்டதும் அக்காலத்திற்கே சென்று விட்ட உணர்வை அடைந்தேன். என் எண்ணவோட்டத்தை புரிந்த கொண்ட கணவர், மனோ நீ 2024 _ ல இருக்கிற உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிருச்சு என்றார்.  மாணவி  சிரித்துக் கொண்டே  எனக்கும் முதல் முறை இந்த பானையோடுகளை செதுக்கி எடுத்த போது இதே போலத் தான் தோன்றியது என்றார். 

ஆர்க்கியாலஜியில் ஆர்வம் வந்தது எப்படி என்று மாணவியிடம் கேட்டேன்.

தான் பல் மருத்துவம் பயின்று கொண்டிருந்ததாகவும், நான்காம் ஆண்டில் இது தன்னுடைய துறை அல்ல என்று உணர்ந்து அதை அப்படியே விட்டுவிட்டு இளங்கலை வரலாறு படிக்க சென்றதாக கூறினார். வரலாறு படித்து முடித்ததும் மெட்ராஸ் யுனிவர்சிடியில் ஆர்க்கியாலஜி படிக்க சேர்ந்தேன் என்றார். எம்.ஏ ஆர்க்கியாலஜி இரண்டாண்டு படிப்பு. இரண்டாம் ஆண்டில் களப்பணியாக அகழ்வராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறினார். ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அவருடைய பேராசிரியரை பற்றி மரியாதையுடனே முடித்தார். 




குருவின் மீதான மரியாதையை அங்கிருக்கும் அனைத்து மாணவர்களின் கண்களிலும் காண முடிந்தது. ஆசிரியர் கூறும் முன்னரே எதை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டு வேலைகள் தானாக நடந்து கொண்டிருந்தன.தனக்கான ஆசிரியரை கண்டடைதல் மாணவர்களின் பெரும்பேறு. மாணவர்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது பேராசிரியரும் அவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் தனியே மணல் மேட்டில் அமர்ந்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார்.

பேராசிரியர் டாக்டர். ஜினு கோஷி பேசும் போது கூறிய சில விசயங்கள் வியக்கத்தக்கவையாகவே இருந்தன. இவ்வகழ்வாய்வு கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெறுகிறது எனவும் 
அரசின் மிக மிக குறைந்த உதவித் தொகையில் மட்டுமே இதை செய்வதாகவும் கூறினார்.  அரசியல்வாதிகள் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை  கட்டுவதற்கு ஐம்பது லட்சம் கணக்கை கல்வெட்டில் எழுதுவதை நினைத்த போதே எரிச்சல் உணர்வு வந்தது .  

காந்தியும் நிறைய சமூக செயல்களை இதே போன்று மிகக் குறைந்த செலவிலேயே செய்து முடித்தார் என்றே படித்திருக்கிறோம். செயல்வீரர்கள் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன். 





ஆர்க்கியாலஜியில் ஆர்வம் இருந்தால் எம்.ஏ படிக்க சேரும் படி கூறினார். யு.ஜி எந்த மேஜராக வேண்டுமானாலும் இருக்கலாம், எம்.ஏ ஆர்க்கியாலாஜி சேரலாம் என்றார். 

யு.ஜி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதே அப்போது தான் தெரியும் எனக்கு. இலக்கியம் வாசிப்பவர்கள் அனைவருக்குள்ளும் ஆர்க்கியாலஜியை பற்றிய ஆர்வம் இயல்பாகவே வந்து விடும். ஆர்க்கியாலஜி படிக்க நினைக்கும் நம் இலக்கிய நண்பர்களுக்கு இந்த தகவல் பயன்படும் என்று நினைக்கிறேன். 

டாக்டர். ஜினு கோஷி அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு வந்தோம்.


                                                           Centre Prof. Jinu Koshy

* Prof . Jinu Koshi 

Related Links about Chettimedu Pathur Excavation:


      - Manobharathi Vigneshwar