ரங்கமன்னார் என்ற பெயரையே இந்த நவராத்திரியின் போது தான் அறிந்து கொண்டேன். கோதையின் மடியில் தலை வைத்து உலகமே அது தான் என சுகஜீவனம் கொண்டிருந்தார் பெருமாள்.உலகையே தன் மடியில் வைத்திருக்கும் சிறு கர்வம் கூட இல்லாமல் கோதையின் முகம் வெகு சாதாரணமாக சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் இருந்தது. கொலுவில் மேலிருந்து இரண்டாம் படியில் ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் பெருமாளின் காலடியில் இருந்த லக்ஷ்மியின் முகம் அபலை பெண் போல இருந்தது. பெருமாளோ உலகையே காத்துக் கொண்டிருக்கும் பெருமிதம் பரவிய குறு நகையில் இருந்தார். காதலிகளுக்கு மட்டுமே என்று சில முகபாவனைகளை கைக் கொள்கிறார்கள் ஆண்கள். காதலியின் மடியில் தலை வைத்தும், மனைவியினை காலடியில் வைத்தும் என்று சிலை வடித்த சிற்பியின் கற்பனை உருவாக காரணமாக இருந்த புராணக்கதை எழுதியவரை நினைத்து புன்னகை எழுகிறது. காதலிகளுக்கு என்றுமே வயதாவதில்லை. Manobharathi Vigneshwar Raja Annamalaipuram 21-10-2024