தலையில் வெள்ளை பாலிதீன் கவரை அணிந்து கொண்டு ஆடுகளை ஓட்டியபடி ஒருவர் சென்றார். பாலிதீன் கவர் மேல் மழைத்துளிகள் நிறைந்திருந்தன.பால் பாயசத்தில் தெரியும் ஜவ்வரிசி போல இருந்தது. இரண்டு நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.செல் ஃபோன் சார்ஜ் இல்லாமல் அணைந்து எட்டு மணி நேரமாகிறது. பக்கத்து வீட்டு தோட்டம் தெளிவாக தெரிந்தது. எறும்புகள் வாழை மரத்தின் வேரின் அருகில் உள்ள தங்களுடைய இருப்பிடத்திற்கு சுறுசுறுப்பாகவும் சீராகவும் சென்று கொண்டிருந்தன.எறும்பின் இயக்கத்தை கூட பாதிக்காத வகையில் ஒரு மெல்லிய தூறல்.மழை பெய்து கொண்டிருப்பதை வாழை இலையில் நீர் நூலருவி போல் வழிவதை வைத்தே அறிய முடிந்தது.மழை எப்போது அழகாகிறது? வாழை இலையில் விழும்போது தான் என்று எண்ணிக்கொண்டேன்.அடுத்த கணமே அந்த வாழைக்கன்றை ஓடி வந்த ஆடு மோதி விட்டு தாண்டி சென்றது.எதிர் வீட்டு அக்கா வந்து பால்காரர் வந்துட்டு போயாச்சா என்று பக்கத்து வீட்டு அக்காவிடம் கேட்டாள். பாருங்க்கா ஆடு முட்டி வாழக்கன்னு சாஞ்சிருச்சு என்று கூறினாள் பக்கத்து வீட்டு அக்கா. ஆமாங்கண்ணு நானு...