மணிமங்கலத்தில் தான் பரீட்சை என்றார் விக்னேஷ்வர். உடனடியாக அதன் வரலாறு தான் நினைவிற்கு வந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்து வந்த போது மணிமங்கலத்தில் வைத்து தான் அவனை விரட்டி அடித்திருக்கிறார் முதலாம் நரசிம்மவர்மன். வரலாற்று சிறப்பு மிக்க இடம்.மணிமங்கலத்திற்கு லோகமகாதேவி சதுர்வேதி மங்கலம் என்பது இராஜராஜன் ( மனைவி ) காலப் பெயர். கைலாசநாதர் கற்றளி, பெருமாள் கற்றளி என ஆலயங்களும் இருக்கின்றது. அதையெல்லாம் பார்த்துவிட வேண்டும் என உடன் சென்றேன். விக்னேஷ்வர் பரீட்சை எழுத உள்ளே செல்ல நான் அந்த கல்லூரியின் கட்டிடங்களை சுற்றி வந்து கொண்டிருந்தேன். கல்லூரியில் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம் பேச்சு கொடுத்தேன். நான் என்னுடைய சிறுவயதில் எங்களூரில் பார்த்தவர்களை போலவே இருந்தார்கள். முகப்பருக்கள் இல்லாத வெயில்பட்ட கருத்த சருமம். இப்போது எங்களூரில் யாரையும் நான் அப்படி பார்க்கவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளில் நிறம் மாறிக் கொண்டே செல்கிறார்கள். எங்களூரில் இப்போது மாநிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை என மட்டுமே இருக்கிறார்கள். வெயில் பட்ட மினுக்கும்...