எவ்வளவு நேரம் நடந்தாலும் நகராத நிலம். எத்துணை நேரம் மிதித்தாலும் பயணத்தை கொடுக்காத சைக்கிள்.தப்பி செல்ல முடியாமல் தவிக்கும் கனவைப் போல கண்முன்னே இருக்கின்றன ஜிம்மில் இருக்கும் மெஷின்கள். பழ ஈ ஒன்றின் முகம் போல இரண்டு முன் கைகளை நீட்டிக்கொண்டு சக்கரங்களை சுழல் வைக்கும் மெசின். சீட்டில் உட்கார்ந்தால் கால் எட்டாத சைக்கிளை நின்று கொண்டே மிதிப்பதை போன்ற உடல் அசைவை தருகிறது. பகலிலேயே லைட் போட்டு அளவான குளிர் காற்றோடு கொஞ்சம் இரைச்சலாக கேட்கும் பாடல்களோடு ( ஒருவேளை எனக்கு மட்டும் தான் இரைச்சலோ ) சிலர் தங்கள் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு அதிக இரைச்சலை கொடுக்கும் ஹெட்செட் களை அணிந்தவாறு முற்றிலும் வேறு உலகத்தில் இருக்கிறார்கள் . நம்முடைய கால்களையும் , கைகளையும் அசைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட மெஷின்கள். சக்கரத்தின் கண்டுபிடிப்பையே மாற்றம் செய்த தற்கால மனிதனின் அறிவு வளர்ச்சி.மெசின்கள் மனிதனை ஆட்டி வைக்கும் பொம்மலாட்ட நூல்கள் போலவே தெரிகின்றன. இயற்கையின் பிடியில் இருந்து தப்பிய மனிதன் தானே உருவாக்கிய மெசின்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கிறான். திரும்பும் இடமெல...