Skip to main content

Posts

Showing posts from July, 2024

வெந்தயக்கீரை....

  அம்மியில் வைத்து அரைத்தால் நொறு நொறுவென சத்தத்துடன் மாவாக மாறும் தன்மையுள்ளதாக இருந்தது வெந்தயம்.‌ மெல்லிய கசப்பு மணம் அதை மேலும் வசீகரமுள்ளதாக்கியது. கைப்பிடி அளவு வெந்தயம் எடுத்து சிறு பாத்திரத்திலிட்டு கழுவினேன். நீர் மங்கலான மஞ்சள் நிறத்தில் சிறு தூசிகளுடன் உடையதாக ஆகியது. திரும்பவும் ஒரு முறை நீர் விட்டு கழுவினேன். கண்ணாடிக்குள் வெறுமனே வைத்தது போல் வெந்தயம் நீரில் மூழ்கியிருந்தது. இரவில் அதை மூடி வைத்துவிட்டு உறங்கிப்போனேன்.  மறு நாள் காலையில் வந்து பார்த்த போது தன்னால் குடிக்க முடிந்த அளவு நீரை உள்வாங்கி வளமான மினுமினுப்புடன்  வெந்தயம் அளவான புன்னகையை காட்டியது. நீர் அடர்த்தியான பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் மெலிதான ஆடைகட்டி இருந்தது. திரும்பவும் நீர் விட்டு அலசி வடிகட்டினேன். முத்துக்கள் போல துணியில் அல்லாடியது வெந்தயம்.  தென்னை மரத்தின் வேரின் அருகில் சிறு பள்ளம் பறித்தேன்.  மண்ணை தன் உடல் முழுதும் இறுக்கமாக பூசிக் கொண்ட சிறு சிறு கற்களாக வந்தன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சுண்டுவிரல் அளவான சிறு பள்ளத்தில் ஊறிய வெந்தயத்தை பரப்பினேன். அதன் மீது பறித்தெடுத்த மண்ணை மேலோட்