Skip to main content

Posts

Showing posts from June, 2024

அம்மாவின் முகங்கள்....

       பசுஞ்சாணத்தை குளிர்ந்த நீரில் கரைக்கும் போது மட்டுமே எழும் மணம் மார்கழியின் அதிகாலை தான். மூன்றாம் வகுப்பில் மீனலோசினி டீச்சர் காலை ஐந்து மணிக்கு வெள்ளி கோள் பூமிக்கு மிக அருகில் தெரியும் என்று வகுப்பெடுத்திருந்தார். சின்னதா மூக்குத்தி மாதிரி மினுங்கிட்டு இருக்கும் என்று கூறும் போது டீச்சருடைய மூக்குத்தி போல இருக்குமோ என்று கற்பனை செய்திருந்தேன். பெரியவள் ஆனதும் மீனலோசினி டீச்சர் போலவே மூக்குத்தி போட வேண்டும் என்று எண்ணினேன். அன்றிரவே அம்மாவிடம் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பும்படி கூறிவிட்டு உறங்கிப் போனேன். காலையில் அம்மா வாசல் தெளிக்கும் தப்தப்பென்ற சத்தம் கேட்டு வேகமாக பாயிலிருந்து எழுந்து ஓட எத்தனிக்கும் போது கொலுசின் திருகாணி பாயின் நூலில் மாட்டிக் கொண்டு தாமதப்படுத்தியது. நூலை வேகமாக இழுத்து பிய்த்துக் கொண்டு வெளியே ஓடினேன். அம்மா, உங்கள அஞ்சு மணிக்கு என்னய எழுப்ப சொன்னேன்ல என்று முகத்தில் விழுந்த முடியை இருபுறமும் தள்ளிவிட்டுக் கொண்டு வானத்தை நோக்கியபடி கேட்டேன். இன்னும் அஞ்சு ஆகல சாமி என்று கூறியது எங்கேயோ கனவில் கேட்டது. வானத்தின் ஓரத்தில் மினுங்கிய மூக்குத்தியை பா