திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி பாரதத்தின் கடற்படை விமான நிலையத்தின் சுற்றுசுவரை பெருமையுடன் பார்த்துக் கொண்டே வந்தேன். கல்லாறு பாலத்தை தாண்டி காஞ்சிபுரம் செல்லும் வழியில் கார் திரும்பியபோது தக்கோலம் 8 கி.மீ என்ற வழிகாட்டி பலகையை பார்த்ததும் சிறு துணுக்குறல் வந்தது. தக்கோலம் இதை நான் எங்கேயோ படித்திருக்கிறேன். சோழர்களுக்கும் , ராஷ்ட்ரகூடர்களுக்கும் போர் நடந்த இடம் இந்த தக்கோலம் தான். சோழர்களின் ஆட்சி சரிய காரணமாக இருந்த தக்கோலப் போர். உடனடியாக காரை தக்கோலத்தை நோக்கி திருப்ப சொல்லிவிட்டு ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். எந்த இடத்தில் போர் நடந்திருக்கும்? ராஜாதித்யா யானை மீதமர்ந்து போர் புரியும் போது ராஷ்ட்ரகூட இளவரசனின் அம்புகள் பட்டு யானை மீதே இறந்ததாக வரலாறு இருக்கிறது. யானைப்படை இங்கே எந்த இடத்தில் நின்றிருந்திருக்கும்? குதிரைப்படையும் , காலாட்படையும் என எத்தனை படைவீரர்கள் இங்கே சண்டையிட்டுருப்பார்கள்? ராஷ்ட்ரகூடர்கள் எங்கே நின்றிருந்திருப்பார்கள் ? அப்போதைய அவர்களுடைய உரையாடல்கள் என்னவாக இருந்திருக்கும்....