Skip to main content

தக்கோலம்...

திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி பாரதத்தின் கடற்படை விமான நிலையத்தின் சுற்றுசுவரை  பெருமையுடன் பார்த்துக் கொண்டே வந்தேன். கல்லாறு பாலத்தை தாண்டி காஞ்சிபுரம் செல்லும் வழியில் கார் திரும்பியபோது தக்கோலம் 8 கி.மீ என்ற வழிகாட்டி பலகையை பார்த்ததும் சிறு துணுக்குறல் வந்தது. தக்கோலம் இதை நான் எங்கேயோ படித்திருக்கிறேன்.

 

 சோழர்களுக்கும் , ராஷ்ட்ரகூடர்களுக்கும்  போர் நடந்த இடம் இந்த தக்கோலம் தான். சோழர்களின் ஆட்சி சரிய காரணமாக இருந்த தக்கோலப் போர். உடனடியாக காரை தக்கோலத்தை நோக்கி திருப்ப சொல்லிவிட்டு ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். எந்த இடத்தில் போர் நடந்திருக்கும்? ராஜாதித்யா யானை மீதமர்ந்து போர் புரியும் போது ராஷ்ட்ரகூட இளவரசனின் அம்புகள் பட்டு யானை மீதே இறந்ததாக வரலாறு இருக்கிறது. யானைப்படை இங்கே எந்த இடத்தில் நின்றிருந்திருக்கும்? குதிரைப்படையும் , காலாட்படையும் என எத்தனை படைவீரர்கள் இங்கே சண்டையிட்டுருப்பார்கள்? ராஷ்ட்ரகூடர்கள் எங்கே நின்றிருந்திருப்பார்கள் ? அப்போதைய அவர்களுடைய உரையாடல்கள் என்னவாக இருந்திருக்கும். போரின் மனநிலைகள் எப்படி இருந்திருக்கும்? ஏன் தக்கோலத்தை போர் நிகழும் இடமாக தேர்ந்தெடுத்தார்கள் ? வழியெங்கும் செடி அவரைத் தோட்டங்களும் , நெல்வயல்களும் கலந்து காட்சியளித்தன. பனிக்காலத்தில் அவரை கொத்து கொத்தாக காய்த்திருந்தது . சில இடங்களில் ஓலை வேய்ந்த சிறு நிழல் கூடங்களில் தோட்டத்து காய்கறிகள் விற்பனைக்கு இருந்தன. தக்கோலத்தை அடைந்துவிட்டோம். ஆனால் இங்கே எந்த இடத்தில் போர் நிகழ்ந்தது என்பதை எப்படி தெரிந்து கொள்வது. ஏதேனும் தொல்பொருள் ஆராய்ச்சி கல்வெட்டுகள் இருக்குமா ? ஊர்மக்கள் யாருக்கேனும் தெரிந்திருக்குமா ? எண்ணங்களை செயல்படுத்த ஊர் முழுக்க சுற்றி வந்தோம். எந்த விபரமும் கிடைக்கவில்லை. ஊரில் பழைய சிவன் கோவில் ஒன்று இருப்பதாக கூறினார்கள். சிவன் கோவிலை நோக்கி சென்றோம். ஜலனாதீஸ்வரர் கோவில். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் பிறகு சோழர் காலத்தில் விரித்தெடுக்கப்பட்டு நாய்க்கர் காலத்தில் திரும்பவும் கட்டப்பட்டது. 

கோவில் ஐந்து மணிக்கு தான் திறக்கப்படும் என்றார்கள். கோவிலுக்கு அரை கி.மீ முன்பாக செவ்வக வடிவான குத்துக்கல் ஒன்றிற்கு மஞ்சள் சேலையை சுற்றியிருந்தார்கள். கல் முழுக்க மஞ்சளும் குங்குமமும் பொட்டு பொட்டாக வைக்கப்பட்டிருந்தது. பூஜைப் பொருட்கள் விற்கும் பாட்டியிடம் கல்லை பற்றி கேட்ட போது , அது சாமிக்கல்லு அந்த கல்லுக்கு கீழ பெரிய எண்ணெய் பானை இருக்கு. அது சாமி. செவ்வாக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சாமிக்கு மஞ்சளும் குங்குமமும் வச்சிட்டு வந்தா வீட்டுக்கு நல்லது, அந்த காலத்திலிருந்து இத பண்ணிட்டு வர்றாங்க என்றார். ஒரு வேளை சோழ இளவரசன் ராஜாதித்யனின் நடுக்கல்லாக இருக்குமோ என்ற சந்தேகம் வரத்தான் செய்தது. 

கோவிலின் மதில் சுவரை சுற்றி நடக்க ஆரம்பித்தேன். அப்படியே பின்பக்கம் போனிங்கன்னா, பாலாறு வரும் பாத்துக்கோங்க என்றார் பாட்டி. பாலாறு இது எவ்வளவு தூரம் தான் வருகிறது? பெங்களூரில் வேலையில் இருந்த போது நந்திஹில்ஸ் தோழிகளுடன் சென்றிருந்தேன். பாலாறு நந்தி ஹில்ஸில் தான் உற்பத்தியாகிறது என்று அப்போது அங்கிருந்த கைடுகளில் ஒருவர் கூறினார்.கிணற்றுப் பாசனத்தை மட்டுமே தெரிந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த  எனக்கு பாலாற்றை பற்றி அப்போது பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. வெறுமனே ம் என்று மட்டும் செவி கொடுத்திருந்தேன். திருமணத்திற்கு பிறகு கணவரின் பணி மாறுதல் காரணமாக செங்கல்பட்டை அடுத்த கருங்குழிக்கு வந்த பிறகு தான் பாலாற்றை பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன். வருடத்தில் நவம்பர் மாத மழைக்காலத்தில் மட்டுமே ஆற்றில் நீரோடும். அதற்காகவே காத்திருந்தது போல மருந்துக் கம்பெனிகளும், கூல்ட்ரிங்கஸ் மற்றும் சாராயம் தயாரிக்கும் கம்பெனிகளும் தங்களுடைய கழிவு நீர் தொட்டியை திறந்து விடுவார்கள். வெண்மையாக நுரை கொப்பளிக்க ஓடும். ஆற்று நீரின் விசையினால் நுரை பொங்கி ஓடிய பாலாறு தற்போது கழிவுநீர்களின் கலப்பினால் மிதமிஞ்சிய நுரையில் ஓடுகிறது. 

        ஜலனாதீஸ்வரர் கோவிலின் வெளிப்புற சுற்று சுவரை சுற்றி வந்த போது கோவிலை சுற்றியிருந்த அனைத்து வீடுகளிலும் முருங்கை மரமும் அதில் மரம் முழுக்க முருங்கை காய்களும் பச்சை பாம்புகளை போலவே தொங்கி கொண்டிருந்தன. வீடுகளுக்கு இடைப்பட்ட வெளியில் பாலாற்று நீரோடுவது தெரிந்தாலும் செல்வதற்கு வழியில்லை. அங்கே இருந்த அக்காவிடம் கேட்டபோது , மொதல்ல வழி இருந்துச்சு, இப்போ நாங்க எல்லாரும் வழியடைச்சிட்டு வீட்ட கட்டிட்டோம். இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போனீங்கன்னா, ஒரு சிமெண்ட் ரோடு வரும். அங்க ஒரு சிவன் கோவில் இருக்கு அதுக்கு பக்கத்தில ஆத்துக்கு போற வழி இருக்கு என்றார். 

நண்பகல் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகவேகமாக இன்னொரு சிவன் கோவிலை நோக்கி நடந்தேன்.  அங்கே கோவில் எடுத்துக்கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. ஆனால் கோவிலின் கேட்டைத் தாண்டி பாலாறு நீருடன் தெரிந்தது. வேகமாக ஆற்றை நோக்கி நடந்தபோது இரு சிறுமிகள் வேகமாக ஓடி வந்தார்கள். மணலில் விளையாடி முகமும் உடலும் , தலைமுடியும் மண்துகள்களுடன் கலந்திருக்க ஆன்ட்டி இங்க வாங்க தனியா இருக்கிற ஒரு சிவன காட்டறேன் என்றார்கள். சரியென்று பின்னால் சென்றேன். 
இங்க பாருங்க இந்த கதவுக்கு பின்னால தான் சிவன் இருக்காரு என்றார்கள். வெளியில் இரும்புக் கம்பிகளினால் ஆன கதவு பூட்டப்பட்டிருக்க உள்ளே மரக்கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. இரும்புக்கம்பிகளினுள் கையை விட்டு மரக்கதவை தள்ளிவிட முயற்சித்தார்கள். அது முடியாமல் போகவே சுற்றி ஏதேனும் இருக்கிறதா என்று தேடிய சிறுமி தென்னை ஓலை சீமாரை எடுத்துக் கொண்டு வந்து கதவை தள்ள முயற்சித்தாள். பாப்பா சீமாரெல்லாம் வெச்சு சிவன் இருக்கிற கதவ தெறக்க கூடாது என்று பதட்டத்துடன் தடுத்தேன். ஆன்ட்டி இந்த சீமாரால தான் சிவன் இருக்கிற ரூமயே நாங்க பெருக்குவோம். ஐயிரு ஒண்ணுமே சொல்ல மாட்டாரு என்று அலட்சியமாக கூறினாள். மரக்கதவை தள்ளிவிட்டாள் உள்ளே கும்மிருட்டாக இருந்தது. 

எதிர்ப்புற சுவரில் இருந்து ஊசி முனை அளவில் சூரிய வெளிச்சம் ஊடுருவியது. ஆனாலும் சிவலிங்கம் முழுமையாகத் தெரியவில்லை. சிறு லிங்கவடிவம் தூலமாக தென்பட்டது. சிவதரிசனத்தை முடித்துக் கொண்டு ஆற்றிற்கு செல்லும் போது இரு சிறுமிகளும் ஒரே குரலில் ஆன்ட்டி இங்க வர்றவங்க எல்லாம் எங்கள போட்டோ எடுப்பாங்க நீங்க  ஏன் எடுக்காம போறீங்க என்றார்கள். ஜெ வின் வலைத்தளத்தில் ஏ.வி மணிகண்டன் அவர்கள் புகைப்படம் மற்றும் ஓவியக்கலையை பற்றி எடுத்த வகுப்பில் கூறிய கருத்து ஒன்று நினைவில் வந்தது . மூன்றாம் உலக நாடுகளாக கருதப்படும் நாட்டில் மட்டும் தான் அழுக்கான  ஆடையணிந்த குழந்தைகளை புகைப்படம் எடுப்பது கலை என்று பதிய வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் அழகான பூங்காவில் நேர்த்தியான உடையணிந்த குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை புகைப்படமாக எடுப்பதை தான் கலையாக வைத்திருக்கிறார்கள் என்று . 

ஆற்றை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு தள்ளி வந்தேன்.  நிறைய புல் தீவுகளுடன் ஆங்காங்கே ஆற்றில் தூக்கிப்போட்ட பழைய துணிகளின் தீற்றல்களுடனும் கொஞ்சமாக நீருடனும் பாலாறு இருந்து கொண்டிருந்தது. பாலாற்றை ஒட்டிய சிவன் கோவில். ஆற்றை ஒட்டியே நிறைய கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பாலாற்றை ஒட்டிய கோவில்களை பற்றி தெரிந்த கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. சிறுமிகளிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பி வந்தேன். 

அடுத்த முறை அதிகாலை நேரத்திலேயே என் கணவருடன்  தக்கோலம் கோவிலுக்கு வர வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அடுத்த முறையாவது தக்கோலப் போர் நடந்த இடம் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டும். தக்கோலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அரிகில்பாடி என்ற ஊரின் பெயர்பலகையை பார்த்தேன் .அரசர்கள் காலத்தில் தற்காலிக படைகளை நிறுத்தி வைத்திருக்கும் ஊருக்கு  பாடி என்று பெயர் வைப்பார்கள் என்பது நினைவிற்கு வந்தது.


- Manobharathi Vigneshwar