பெண், கல்வி ,விடுதலை எனும் கட்டுரைகள் தளத்தில் வெளியாயிருந்தது. அதில் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், வேலைக்கு செல்வதை தடை செய்யப்பட்ட பெண்கள் என்று நிறைய பிரச்சினைகள் எல்லோராலும் பேசப்படுகிறது. ஆனால் கல்வி கற்று , நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுடைய திருமணம் அவர்களுடைய சொந்த குடும்பத்தினராலேயே மறுக்கப்படுவது எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. பெங்களூரில் பிஜியில் இருந்த போது எங்களுடன் தார்வாடு பகுதியை சேர்ந்த ஒரு அக்கா தங்கியிருந்தார். நாற்பது வயதிருக்கும். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர் ஆக வேலை செய்து வந்தார். யாருடனும் பேசவே மாட்டார். நாம் ஏதாவது பேசினாலும் இரண்டொரு வார்த்தை தான் பேசுவார். ஆபிஸ் செல்வதும் , பிஜி அறையில் தங்கியிருப்பதும் தான் அவரது வாழ்வே. திடீரென ஒரு நாள் ஆபிஸிலிருந்து வரும்போது ஹாலில் அமர்ந்து அனைத்து பெண்களுடனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் அந்த அக்கா. அவருக்கு ஒரு தங்கையும், தம்பியும் இருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்ததே இந்த அக்கா தான் என்பதும், தம்பி, தங்கைக்கு குழந்தைகள் பள்ளி செல்...