Skip to main content

கல்வி , பொருளாதாரம் பெண்களுக்கான திருமண வாழ்க்கையை தருகிறதா?

 பெண், கல்வி ,விடுதலை எனும் கட்டுரைகள் தளத்தில் வெளியாயிருந்தது. அதில்  கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், வேலைக்கு செல்வதை தடை செய்யப்பட்ட பெண்கள் என்று நிறைய பிரச்சினைகள் எல்லோராலும் பேசப்படுகிறது. ஆனால் கல்வி கற்று , நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுடைய திருமணம் அவர்களுடைய சொந்த குடும்பத்தினராலேயே மறுக்கப்படுவது எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.  பெங்களூரில் பி‌ஜியில் இருந்த போது எங்களுடன்  தார்வாடு பகுதியை சேர்ந்த ஒரு அக்கா தங்கியிருந்தார். நாற்பது வயதிருக்கும். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர் ஆக வேலை செய்து வந்தார். யாருடனும் பேசவே மாட்டார். நாம் ஏதாவது பேசினாலும் இரண்டொரு வார்த்தை தான் பேசுவார். ஆபிஸ் செல்வதும் , பிஜி அறையில் தங்கியிருப்பதும் தான் அவரது வாழ்வே. 

திடீரென ஒரு நாள் ஆபிஸிலிருந்து வரும்போது ஹாலில் அமர்ந்து அனைத்து பெண்களுடனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் அந்த அக்கா.
 அவருக்கு ஒரு  தங்கையும், தம்பியும் இருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்ததே இந்த அக்கா தான் என்பதும், தம்பி, தங்கைக்கு குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருக்கிறார்கள் என்பதும் அப்போது தான் தெரியும் எங்களுக்கு.

ஒரு வாரத்தில் அந்த அக்காவிற்கு திருமணம் என்று கூறினார்.  அவருடைய வாட்சப் டி.பியில் மாப்பிள்ளையின் புகைப்படத்தை வைத்திருந்தார். 

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் அந்த அக்காவுடன் அவருடைய அறையிலேயே நாங்கள் அனைவரும் இருந்தோம். திடீரென அந்த அக்காவின் பெற்றோர் வந்து சத்தமாக பேச ஆரம்பித்து விட்டனர்.
திருமணத்திற்கு பிறகு அந்த அக்காவின் சம்பளத்தில் இருந்து பெற்றோருக்கு மாதம் ஐம்பதாயிரம் தர வேண்டும் என்று பெற்றோர்கள் டிமாண்ட் செய்திருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டில் அதை மறுத்திருக்கிறார்கள். இந்த அக்காவிடம் பெற்றோர்கள் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். உன்னை படிக்க வைத்து வேலைக்கு போக வைத்தது நாங்கள் தான். இந்த வேலையில் நீ வாங்கும் லட்சம் ரூபாய் சம்பளம் எங்களால் தான். உன்னுடைய திருமணத்திற்கு பிறகு எங்களை யார் பார்த்துக் கொள்வது ? இப்படி ஒரு பிரச்சினையில் எங்களை தள்ளிவிடும் திருமணம் இந்த வயதில் உனக்கு தேவையா என்றே கேட்டுவிட்டார்கள். அந்த அக்கா எதுவுமே பேசாமல் அழுதுகொண்டே இருந்தார்.  திருமணத்தை நிறுத்திவிட்டார்கள் . இரண்டு நாட்கள் அந்த அக்காவுடனேயே தங்கியிருந்தோம்.  பிறகு  பெங்களூருக்கு எங்களுடனேயே திரும்பி வந்தார் அந்த அக்கா.

ஒரு வார காலம் அலுவலகத்திற்கு கூட செல்லாமல் அறையிலேயே இருந்தார்.
திரும்பவும் பழையபடி யாருடனும் பேசாமல் ஆபிஸ் செல்வதும் , வருவதுமாக மாறிவிட்டார்.

சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். 
சென்னையில் பி.ஜியில் சேர்ந்த முதல் நாளே , இன்ஸ்பெக்டர் அக்காவை பார்த்தாயா? என்பது தான் கேள்வியாகவே இருந்தது. அந்த பி.ஜி யில் யார் சேர்ந்தாலும் முதலில் இன்ஸ்பெக்டர் அக்காவை பார்த்துவிட வேண்டும் என்பது விதியாகவே இருந்தது. 
அன்றிரவு சாப்பிடும் போது தான் இன்ஸ்பெக்டர் அக்கா வந்தார். யாருல்லாம் புதுசா வந்திருக்கீங்கலோ எல்லாருமே கேட்டுக்கோங்க என்று பேச ஆரம்பித்தார்.
25 வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிடனும் புரியுதா? அப்படி வீட்டில ஏதும் பண்ணி வைக்கலன்னா சொல்லுங்க நானே மாப்பிள்ளை தேடி பண்ணி  வெச்சிடறேன் புரியுதா? வீட்டை காப்பாத்தறேன் , அக்கா கல்யாண கடன் கட்டறேன்,  அண்ணனுக்கு பிஸினஸ் பண்ண காசு தாரேன்னு எதயாவது வீட்டில சொல்லிராதீங்க. அவ்வளவு தான் உங்களைய குலதெய்வம் ஆக்கி வேண்டுதல் வெச்சே காலத்த ஓட்டிருவாங்க. கல்யாணமே பண்ணி வைக்க மாட்டாங்க புரியுதா? என்றார்.
. படிச்சு வேலைக்கு வந்துட்டா மட்டும் பத்தாது வாழ்க்கையை அமைச்சுக்க தெரியணும் புரியுதா? என்று கூறிவிட்டு திரும்பவும் டியூட்டிக்கு சென்று விட்டார். 
இன்ஸ்பெக்டர் அக்காவுக்கு 38 வயதாகியும் அவருடைய வீட்டில் அந்த அக்காவிற்கு திருமணம் செய்து வைக்க முன்வரவில்லை, அவருடைய சம்பளத்தில் தான் மொத்த குடும்பமும் அக்கா குடும்பமும், அண்ணன் குடும்பமும் நடக்கிறது என்பது தான் அதனுடைய காரணம்.தார்வாடு அக்காவின் கதையை போலவே. 

இவ்வளவு பேசும் நீங்கள், ஏன் இன்னும் தானாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு நாள் கேட்டபோது, 
இருவத்தஞ்சு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணி வாழனும்னு ஆசை இருக்கும்.அந்த வயச தாண்டிட்டா நமக்கு வாழ்க்கை வேற மாதிரி புரியும். நம்மாலேயே குடும்பத்தையும், நம்மையும் பாத்துக்க முடியும் , மாப்பிள்ளை யாராவது வந்தா அவங்களும் அவுங்க குடும்பமும் நம்ம குடும்பத்த விட அதிகமா நம்ம கிட்ட வேண்டுதல் வெப்பாங்க. ரெண்டையும் சமாளிக்க முடியாமதான் கல்யாணம் வேணாம்னு முடிவெடுத்துட்டேன். இதுல என்னோட குடும்பத்தில எல்லாரும் ரொம்ப தெளிவா இருக்காங்க எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்திட கூடாதுன்னு. அவங்க மூஞ்சியில கரிய பூச வாச்சும் கல்யாணம் பண்ணிக்கனும்னு முயற்சி பண்ணினேன். அதையும் ஏதேதோ சொல்லி எங்க வீட்டிலேயே தடுத்திட்டாங்க. எங்கயோ மனசுக்குள்ள நான் போயிட்டா இந்த மொத்த குடும்பமும் இல்லாம போயிரும் அந்த பாவத்தை நான் செஞ்சிர கூடாதுன்னு உறுத்திட்டே இருக்கும். என்னால அதய தாண்டி வர முடியலை. நானும் ஒரு மாதிரி இது தியாக வாழ்க்கைன்னு மனச தேத்திட்டு வாழ ஆரம்பிச்சிட்டேன் என்றார்.

ஒவ்வொரு பிஜியிலும் இது போன்ற யாரோ ஒரு பெண் இருப்பார் என்றே தோன்றுகிறது.  திருமணம் என்ற வாய்ப்பே கிடைக்காத படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்களை பற்றி யாரும் எதுவுமே வெளிப்படையாக பேசுவதில்லை. கொற்றவை நாவலில் வரும் பாலை நில சிறுமியை தெய்வமாக்கி  வாழ்க்கையை இல்லாமல் செய்வது போலத்தான் இந்த பெண்களின் நிலையும் என்றே தோன்றுகிறது. இது அதிகமும் அந்த குடும்பங்களில் முதல் தலைமுறையில் படித்து வேலைக்கு வந்து குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் பெண்களிடமே நடக்கிறது .

ஆள்பவர்களை தெய்வங்களாக மதித்து போற்றிய சமூக மனநிலையிலிருந்து  வெளியே வந்தது தான் மக்களாட்சி என்று கூறியிருந்தீர்கள்.  பெற்றோர்களை தெய்வங்களாக மதிப்பதிலிருந்து எப்போது நாம் வெளிவர முடியும்? பெற்றோர்களுக்கான கடமையை சரிவர செய்தாலும் அதை விட அதிகமாக வீண் ஆடம்பரங்களை ஏன் ஊக்குவிக்க வேண்டும்? இப்படிபட்ட பெற்றோர்கள் உண்டாக்கும் குற்ற உணர்வில் இருந்து வெளியேறும் வழி என்ன? 

// பொதுவாக இன்னொருவரின் வாழ்க்கையை உறிஞ்சி வாழ்பவர்களை suckers என்பார்கள். இன்னொருவரின் பணத்தை மட்டுமல்ல, நேரம், உணர்ச்சிகள் ஆகியவற்றை உறிஞ்சி வாழ்பவர்களும் ஒருவகை கொசுக்கள்தான். நம் பணம் அளவுக்கே நேரம், மனம் இரண்டையும் நாம்தான் காத்துக்கொள்ளவேண்டும் .// - ஜெ



நண்பர்களிடமும் , உறவினர்களிடமும் , மற்ற நபர்களிடமும் நாம் நிபந்தனைகளை வைத்து ஒதுங்கி கொள்ள முடியும். ஆனால் பெற்றோரிடம் என்ன செய்வது?