Skip to main content

குக்குடம் எதை தான் தேடுகிறது !

 

 

குக்குடம் எதை தான் தேடுகிறது !

 

வானம் இருண்டிருந்தது. மழை பெய்ய போவதற்கான வாசம் வீசியது. வேப்பிலை ஒன்றை  கொடை  பிடித்து சென்றது எறும்பு. சட் சட் என மழைத்துளிகள் விழுந்தன. 

வேகமாக ஓடி பெரிய புல்  ஒன்றின் அடியில் நின்றது எறும்பு.

தவளைகளின் கொரக்.. கொரக் என்ற சத்தம் கேட்டது. 

 மழை பெய்தால் தவளைகளுக்கு தான் கொண்டாட்டம்! என்று சலித்து கொண்டது எறும்பு.

குவிக் குவிக் என்ற பாடல் மகிழ்ச்சியாக ஒலித்தது! 

எனக்கும் கூட தான்! என்று வந்து அமர்ந்தது மழைக்காடை. 

ஹ்ம்ம் ! குவிக் குவிக் என்ற சத்தம் வந்ததும் தெரிந்து கொண்டேன்! என்றது எறும்பு.

மழை எப்போது நிற்பது? நான் எப்போது உணவை சேமிப்பது? என புலம்பியது எறும்பு.

நீ தான் ஏற்கனவே உணவை சேமித்து வைத்திருப்பாயே! என்றது மழைக்காடை.

அந்தக்  கதை தெரியாதா ? உனக்கு ? என சலித்துக்  கொண்டது எறும்பு. 

விருப்பமிருந்தால் கூறு! என்று றெக்கையை உலுக்கி கொண்டது மழைக்காடை.

நான் கொஞ்சம் கொஞ்சமாக உணவை சேர்த்து வைத்திருந்தேன்!

குவிக்! என்றது மழைக்காடை!

நேற்று ஒரு கோழி வந்து அதை எல்லாம் சாப்பிட்டு விட்டது! என்று ஆதங்கப்பட்டது எறும்பு. 

என்னது கோழியா ? அது எப்படி உன்னுடைய புற்றுக்குள்  வந்தது?

யாருக்கு தெரியும்? அது எப்போது பார்த்தாலும் நிலத்தை பறித்து கொண்டே இருக்கிறது! 

அப்படியே என்னுடைய சேமிப்பையும் உண்டு விட்டது! என்று பெரு மூச்சு விட்டது எறும்பு.

இந்த கோழி ஏன் எப்போதுமே  நிலத்தை பறித்துக்  கொண்டிருக்கிறது? என கேட்டது மழைக்காடை.

கோழியை கேட்டால் தான் தெரியும் ! என்றது எறும்பு!

மழை பெய்து முடித்தது! நிலத்தில் தண்ணீர் தேங்கியது! 

வேப்பிலையை படகு போல செய்தது எறும்பு! அதன் மேல் பயணம் செய்ய ஆரம்பித்தது. மழைக்காடை பறந்து சென்றது. அதை பின் தொடர்ந்து படகில் பயணம் செய்தது எறும்பு.

 நீர் தேக்கத்தை கடந்ததும்  வேப்பிலை படகில் இருந்து வெளியே வந்தது. ஈரமான மண்ணில் மெதுவாக நடக்க ஆரம்பித்தது எறும்பு. 

ஆமாம்! ஓசனித்தலுக்கு கோழிக்கும் அழைப்பு விடுக்குமா? பூ நாரை? என கேட்டது எறும்பு.

இறகுகள் உள்ள அனைத்திற்கும் அழைப்பு உண்டு ! என்றது மழைக்காடை.

பேசிக் கொண்டே கோழி இருக்கும் இடத்தை அடைந்தன எறும்பும், மழைக்காடையும் 

கொக் ! கொக் ! என நிலத்தை பறித்து கொண்டிருந்தது கோழி.

குவிக்! என அதன் அருகில் வந்தது மழைக்காடை! 

வெடுக்கென நிமிர்ந்து பார்த்தது கோழி!

எறும்பு கோபமாக முகத்தை வைத்துக் கொண்டது .

மழை காலத்தில் எறும்புக்கு வெளியில் என்ன வேலை? என்று கேட்டது கோழி.

செய்வதையும் செய்துவிட்டு கேள்வி வேறு கேட்கிறாயா? என்று எறும்பு கோபத்தில் பெருமூச்சாக விட்டு கொண்டிருந்தது. 

அட கோழியே ! கொஞ்சம்  சும்மா இரு! நீ தானே எறும்பின் புற்றை பறித்து உணவை சாப்பிட்டாய்  !

எறும்பை மேலும் கோபப்படுத்ததே! என்றது மழைக்காடை.

ஓ! அப்படியா! என கேட்டுவிட்டு திரும்பவும் நிலத்தை பறிக்க ஆரம்பித்தது.

உனக்கு தான் மனிதர்கள் தானியங்களை கொடுக்கிறார்களே! நீ ஏன் எப்போதுமே நிலத்தை பறித்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது எறும்பு.

அதெல்லாம் எனக்கு தெரியாது! எங்களுடைய முன்னோர்கள் இப்படி தான் செய்தார்கள்! அதை தான் நானும் செய்கிறேன்! என்றது கோழி. 

காலத்திற்கு தகுந்தபடி மாற வேண்டும்! என்று வேகமாக கூறியது எறும்பு. 

முன்னோர்கள் என்ன முட்டாள்களா? என சண்டைக்கு வந்தது கோழி.

முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதற்காக செய்தார்கள் என தெரியாமல் செய்வது முட்டாள்தனம்! என்றது மழைக்காடை. 

கோழிக்கு என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருந்தது. 

தீடிரென உத்வேகம் கொண்டு, அதென்ன உனக்கு மழைக்காடை என்று பெயர்? என்று கேட்டது கோழி. 

மழைக்காடை அமைதியாக இருந்தது. 

கோழிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்காவது என் முன்னோர்களை பற்றி தெரியவில்லை! உனக்கு உன்னை பற்றியே தெரியவில்லை ! என்று சிரித்தது கோழி.

குவிக் குவிக்!

என்போமே!

மழை வந்தால் 

குவிக் குவிக்

என்போமே !

புல்வெளிகளோ! புதர்க்காடோ !

வெட்டவெளிகளோ! விளைநிலங்களோ!

எல்லா இடத்திலும் இருப்போமே!

குவிக் ! குவிக் !

மழை காலத்தில் 

பிறப்போமே!

மழைக்காடைகள் 

நாங்களே!

குவிக் குவிக்!

என்போமே!

மழை வந்தால் 

குவிக் குவிக்

என்போமே !

என்று பாடி முடித்தது மழைக்காடை. 

கோழி அமைதியாக நடந்து சென்றது. 

இன்னும் ஒரு வாரத்தில் திரும்பவும் வருவோம்! அப்போது நீ நிலத்தை பறிப்பதற்க்கான காரணத்தை கூற வேண்டும்! என்று கத்தியது எறும்பு. 

இரவானதும் கோழியை பெரிய மூங்கில் கூடையை கவிழ்த்து  மூடி வைத்தான் அந்த வீட்டு சிறுவன்.கோழிக்கு அன்றிரவு  உறக்கமே வரவில்லை! அடுத்த நாள் காலையில் சூரியன் உதயமாகியது. கோழி சோர்வுடன் நிலத்தை பறிக்க ஆரம்பித்தது. 

உனக்கு என்ன ஆச்சு? ஏன் சோர்வாக இருக்கிறாய்! என்று கேட்டது சூரியன்!

நேற்று நடந்த கதையை கூறியது கோழி. 

எனக்கு எங்கேயோ கொஞ்சம்  நியாபகம் இருக்கிறது! மாலையில் நான் செல்லும் போது கூறுகிறேன்! என்றது சூரியன். 

கோழிக்கு தைரியம் வந்து கொக்! கொக்! என கொக்கரித்தது.

மாலையில் சூரியன் பேசியது. உன்னுடைய முன்னோர்களுக்கு குக்குடம் என்ற பெயர் இருந்தது! இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடு! யோசித்து சொல்கிறேன்! என சென்றது சூரியன். 

கோழிக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! 

குக்குடம்!

நாங்களே!

கோழிகளும் 

நாங்களே!

என்று பாடிக்  கொண்டே இருந்தது. 

அன்று இரவு கோழி நன்றாக உறங்கியது. 

அதிகாலை நேரத்தில் அந்த வீட்டில் இருந்த சிறுவன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். 

ஓ! இனி இவன் வேறு கத்தி கத்தி படிப்பானே! படித்து முடித்த பின் தானே, மூங்கில் கூடையை திறந்து விடுவான்! என சலித்து கொண்டது கோழி.

நான் சூரியனிடம் பேச வேண்டுமே! என தவித்தது .

பரிட்சைக்காக சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்தான் சிறுவன்.

 இந்த மனிதர்கள் புத்தகத்தை படித்து என்ன தான் தெரிந்து கொள்கிறார்கள்?

எல்லாம் நேர விரயம்! என்று தலையில் அடித்து கொண்டது  கோழி.

“வாளகிரியைத் தனது தாளிலிடியப்பொருது

           வாகைபுனை குக்குடப தாகைக்காரனும்”

என்று மூன்று முறை வாய் விட்டு படித்து மனப்பாடம் செய்தான்.

குக்குடம் என்ற வார்த்தையை கேட்டதும் கோழிக்கு பதட்டம் ஆகியது. 

என்னது குக்குடமா? இவன் குக்குடம் என்றா  படித்தான்? என செவியை கூர்ந்து கேட்டது.

ஆம்! குக்குடம் தான்! என உறுதி செய்து கொண்டது.

யாரிடம் கேட்பது? சூரியன் வருவதற்கு இன்னுமும் நிறைய நேரம் இருக்கிறதே! என யோசித்தது.

மெலிதாக காற்று வீசியது! காற்றே! காற்றே! என கூவியது கோழி.

என்ன ? என கேட்டது காற்று.

இந்த சிறுவன் ஏதோ படிக்கிறான்! அதனுடைய அர்த்தம் எனக்கு புரியவில்லை! ஆனால் அதில் குக்குடம் என்ற வார்த்தை வருகிறது! அது எங்களின் பெயர். முழுமையான அர்த்தத்தை எனக்கு கூறவும்! என வேண்டிக்கொண்டது கோழி.

காற்று புன்னகையுடன் கோழியின் காதில் கிசுகிசுத்து சென்றது.

தன்னுடைய மூங்கில் கூடையை தூக்கி எறிந்து விட்டு வெளியே வேகமாக ஓடியது கோழி . 

மழைகாடையே!

எங்கிருக்கிறாய் !

புற்று எறும்பே 

எங்கிருக்கிறாய் !

குக்குடம் என்பது 

கோழிகளே!

நிலத்தை பறிக்கும் 

கோழிகளே!

பெரும் மலைகளாம்! பெரும் மலைகள்!

அவற்றை காலால் நாங்கள்  சிதறிடத்தோம் ! 

நாங்கள் தேடுவது 

மலைகளையே!

மண்ணாக

சிதறிய  

மலைகளையே!

குக்குடம் என்பது 

கோழிகளே!

நிலத்தை பறிக்கும் 

கோழிகளே!

நானும் புத்தகம் எழுதுவேனே !

குக்குடம் வரலாறு 

அதன் பெயராம்!

கோழிகள் அனைவரும் 

படிக்கணுமாம்!

என கூவிக்  கொண்டே ஓடியது கோழி. 

வானத்தில் பிரகாசமான  புன்னகையுடன் உதித்தது  சூரியன்.

- Manobharathi Vigneshwar