Skip to main content

அசுணமாவிற்கு தூது சென்ற யாழிசை !

 

அசுணமாவிற்கு தூது சென்ற யாழிசை !

 

வானத்தில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தது . ஆனால் அதனுடைய வெளிச்சம் மரங்கள் சூழ்ந்த காட்டினுள் வரவில்லை.ஈர வாசம் மண்ணில்  இருந்து எழுந்து கொண்டிருந்தது.

அப்போது பசுமையான  இருட்டில் இருந்து இரண்டு பிறை நிலாக்கள் கண்ணுக்கு தெரிந்தன. பார்க்கும் போதே பிறை நிலாக்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.

அதோ வந்து விட்டது! பிறை கவ்வி நடக்கும் மலை! என்று கூறியது ஒரு வண்டு.

நிலத்தை தோண்டிக்  கொண்டிருந்தது  கரடி ஒன்று. என்னது நடக்கும் மலையா ? என ஆச்சர்யப்பட்டது .

கரடி நடக்கும் மலையை பார்க்க திரும்பியது . அப்போது நிலத்திற்குள் இருந்த பாம்பு ஒன்று வேகமாக தப்பி சென்றது.

மலையில் பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீர்  மட்டுமே தெரிந்தது கரடிக்கு.

வண்டுகள் வேகமாக நீர் தேக்கத்தை  சுற்றி ரீங்கரிக்க ஆரம்பித்தன.

நடக்கும் மலையை கண்டு பயந்து புலி ஒன்று மெதுவாக புதரில் பதுங்கி அமைதியாக இருந்தது. 

கரும் பச்சை இலைகளை கிழித்துக்கொண்டு மலை நகர்ந்து வந்து கொண்டே இருந்தது!

சிறுகண் யானை ! என்று சலசலத்தன இலைகள். 

ஓ ! தந்தங்கள் தான் பிறையை போல தோன்றியதா? என்று புன்னகைத்தது கரடி.

ஆனால் வண்டுகள் தீடிரென ரீங்கரிப்பதை நிறுத்தின!

என்னவாயிற்று? என்று கேட்டது யானை.

எப்போதுமே நாங்கள் ரீங்கரிக்கும் போது இசை எழும். அந்த இசையை  மலை குகைகளில் வசிக்கும் அசுணுமா ரசித்து கேட்கும்.

இப்போதும் கேட்டுக்கொண்டு தானே இருக்கும்? என்றது யானை.

இல்லை! இப்போது எங்களின் இசையை கேட்கும் அசுணமாவை காணவில்லை! என்றன வண்டுகள்.

ம்ம்! அது பறவையா? விலங்கா? என கேட்டது கரடி.

தெரியாது! என்றன வண்டுகள்.

பறவையாக இருந்தால் ஓசனித்தலுக்கு நிச்சயமாக வரும்! அப்போது பார்க்கலாம்! விலங்காக இருந்தால் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும்! என்று கூறியது யானை.

அசுணமா எப்படி இருக்கும்? என்று கேட்டது கரடி.

நாங்கள் தான் அசுணமாவை பார்த்ததில்லையே! என்றன வண்டுகள்.

பார்த்தேயிராத அசுணமா தான்  இசை கேட்கும் என்று கூறினீர்களா? என்று தலையில் அடித்து கொண்டது கரடி.

எங்களுக்கு அதெல்லாம் தெரியாது! இந்த கதையை எங்கள் முன்னோர்கள் கூறினார்கள்!  எங்களுடைய குலக்கதை அது தான்! என்று கர்வத்துடன் கூறின வண்டுகள்.

சரி! இப்போது அசுணமாவை காணவில்லை என்பது எப்படி உங்களுக்கு தெரியும்? என்று கேட்டது யானை.

இந்த காட்டில் இருக்கும் இலைகள் தான் பேசி கொண்டன! என்றன  வண்டுகள்.

இலைகளே! உங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேட்டது  கரடி.

மரங்களின் வேர்கள் பேசி கொண்டன! அப்படி தான் எங்களுக்கு தெரியும்  என கூறின இலைகள்.

வேர்களே! உங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேட்டது  யானை .

வேர்கள் தானே உலகின்  அனைத்து பகுதிகளையும் மண்ணுக்குள் இணைக்கிறது . அப்போது தான் மனிதர்கள் பேசி கொள்வதை கேட்க முடிந்தது. அசுணமா என ஒன்று இல்லை என பெரிய விவாதம் சென்று கொண்டிருக்கிறது நாட்டில்! என்றன வேர்கள்.

என்ன செய்வது? என அனைவரும் சிந்தனையில் ஆழ்ந்தனர். 

யாழிசை அசுணமாவிற்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு மனிதன் பேசினான்! என்றன வேர்கள் . 

ஓ ! இப்போது யாழிசையை வேறு தேட வேண்டுமா? என சலித்து கொண்டது கரடி.

ஒரு இசை கலைஞரின் வீட்டில் நான் இந்த யாழிசையை கேட்டுள்ளேன்! என்றது காற்று.

நல்லது! நல்லது! காற்றே ! அந்த யாழிசையை இங்கே அழைத்து வா என்றது யானை.

அனைவரும் யாழிசைக்காக காத்திருந்தனர்!

அருவியின் ஓசை மென்மையாகி போனது போல ஒரு சத்தம்  கேட்டது.

அந்த சத்தம் மனதில் மகிழ்ச்சியான நினைவுகளை கொண்டு வந்தது. ஒட்டுமொத்த காடே இனிமையில் திளைத்தது.

ஒரு பெரிய தேன் கடலில் தான் இருப்பது போல தோன்றியது கரடிக்கு  .

யானை இளம் குருத்துகள் கொண்ட மூங்கில் காடுகளில் இருப்பது போல உணர்ந்தது.

நான் தான் யாழிசை ! என்னை எதற்கு பார்க்க விரும்பினீர்கள் ?

சட்டென்று காடே விழித்து கொண்டது. இலைகள் சலசலத்தன !

வேர்கள் திரும்பவும் நீர் குடிக்க ஆரம்பித்தன.

வந்துவிட்டாயா? உனக்கு அசுணமாவை தெரியுமா? என கேட்டன வண்டுகள்.

எனக்கு தெரியாது! என்றது யாழிசை.

ஆனால் அசுணமாவிற்கு யாழிசை மிகவும் விருப்பமானது  ! என்று கூறின வேர்கள்.

என்னை நிறைய பேருக்கு பிடிக்கும்! நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்! எல்லாருக்கும் என்னை தெரியலாம்! ஆனால் நான் எவரையும் தெரிந்து கொண்டதில்லை ! என்று கர்வத்துடன் கூறியது யாழிசை.

மனம் மயக்கும் யாழிசையே!

மகிழ்ச்சி தரும் யாழிசையே!

அசுணமா மயங்கும் யாழிசையே!

மனிதர்கள் வாசிக்கும் யாழிசையே!

தூது செல்வாயே!

தூது செல்வாயே!

அசுணமாவிற்கு ,

தூது செல்வாயே!

என்று யாழிசையை புகழ்ந்து பாடின வண்டுகள்.

சற்று நேரம் யோசித்தது யாழிசை . சரி தூது செல்கிறேன்! என்று ஒப்புக்கொண்டது. அதற்கு காற்றும் எனக்கு உதவி வேண்டும் என கேட்டது.

நிச்சயமாக உதவி செய்கிறேன்! என்றது காற்று.

யாழிசையை எடுத்து கொண்டு காற்று அலைந்தது.

எனக்கென்னவோ , அசுணமாவை பற்றி தெரிந்து கொள்ள நாம் பின்னோக்கி தான் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன்! என்றது யாழிசை.

அதற்கென்ன! உடனே சென்று விடுவோம்!

எப்படி? என ஆச்சர்யப்பட்டது யாழிசை. 

பூமியில்  காற்றிடம் தான் காலம் உள்ளது ! என பின்னோக்கிய கால பயணம் செய்தது காற்று.

மனிதர்களின் ஆடைகள் வித்தியாசமாக இருந்தன. யாரும் அலுவலகம் செல்ல வில்லை. ஒரு மனிதன் ஓலை சுவடியில் ஊசியால் ஏதோ எழுதி கொண்டிருந்தான்.

அதை எட்டி பார்த்து நின்றது யாழிசை.

வண்டின் ஓசையை யாழிசை என மயங்கும் அசுணம் ! என எழுதினார்.

என்னது என்னுடைய இசை வண்டின் ஓசையை போலவா இருக்கும்?  என யோசித்தது  யாழிசை.

இசை என்றால் என்னவென்று அறியாத உயிர் அசுணம் தான்! என கோபப்பட்டது யாழிசை.

சரி செல்வோம் ! என அடுத்த பயணத்தை தொடர்ந்தார்கள்!

சில மனிதர்கள் யாழை  எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றனர்! இவர்கள் எங்கே செல்கிறார்கள்? என ஆச்சர்யப்பட்டு பின்னாலேயே சென்றது யாழிசை.

ஒரு மலை குகையின் அருகே நின்று மென்மையாக யாழை இசைத்தனர்.

அடடா! வித விதமான ராகத்தில் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்! என்று பெருமை கொண்டது யாழிசை.

நிழல் போல ஒரு உருவம் மண்ணில் தெரிந்தது. அதற்கு நீண்ட காதுகள் இருந்தன. நிழல் வெண்ணிற புகையாக மாறியது . மனிதர்கள் மீட்டிய யாழிசையின் அருகில் நெருங்கி வந்தது.

சட்டென்று மறைத்து வைத்திருந்த ஒரு பறையை எடுத்து காதுகள் அடைக்கும் அளவிற்கு சத்தம் கொடுத்தனர். அந்த சத்தத்தை தாங்க முடியாமல் அந்த வெண்ணிற புகை சுருண்டு விழுந்தது. என்ன நடந்தது என்று பார்ப்பதற்குள் மனிதர்கள் சென்று விட்டனர்.

யாழிசைக்கு மயங்கி மனிதர்களிடம் சிக்கி கொண்டதே அசுணமா ! 

 

என்னுடைய இசைக்காக இவ்வளவு பெரிய ஏக்கமா ? 

 

அசுணமாவின் அளவிற்கு தன்னால் கூட இசையை ரசிக்க முடியாது என்று உணர்ந்தது யாழிசை. 

 

இசையை நுட்பமாக ரசிக்கும் அசுணமாவிற்கு நான் என்றென்றும்  கடமைப்பட்டுள்ளேன்! என்று பெருமைப்பட்டது. 

அசுணமா! அசுணமா! என மலை குகைகளின் உள்ளே சென்று தேடியது யாழிசை.

எந்த பதிலும் வரவில்லை! தீடிரென நினைவில் வந்து, யாழிசை மென்மையாக இசைக்க ஆரம்பித்தது.

அந்த இசையை கேட்டு அசுணமா யாழிசையின் அருகில் வந்தது. ஆனால் அசுணமாவின் உருவம் தெளிவாக தெரியவில்லை.

யாழிசையாகிய நானே!

என்னை ரசிப்பவரை  தேடி வந்தேனே!

யாழிசையாகிய நானே!

அசுணமா உனக்கு  தூது வந்தேனே!

நீ பறவையோ! விலங்கோ!

அசுணமா!

நீ பறவையோ! விலங்கோ!

ரசிப்பவர்கள் இல்லாமல்

என்ன செய்ய?

வண்டுகள் ஏங்குகின்றன!

அசுணமா!

ரசிப்பவர்கள் இல்லாமல்

என்ன செய்ய?

உன்னிடம் இதை சொல்ல வந்தேனே!

அசுணமா!

உன்னிடம் இதை சொல்ல வந்தேனே!

என்று பாடியது யாழிசை.

அசுணமா யாழிசையில் அப்படியே மெய்மறந்து மகிழ்ச்சியாக இருந்தது.

பாடலை நிறுத்திய பின் தான் நினைவிற்கு வந்தது அசுணமா.

யாழிசையே எனக்காக தூது வந்திருக்கிறது !

நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றது அசுணமா.

வண்டுகளிடம் கூறுங்கள் நான் எப்போதும்  இருந்து வருகிறேன்!  இனிமையான மெல்லிய இசை எங்கே இசைக்கப்பட்டாலும் நான்  ரசித்து கேட்பேன்!

இந்த உலகம் இன்னிசையாக சுழலட்டும் .! என்று வாழ்த்தியது அசுணமா.

அசுணமாவை சந்தித்த மகிழ்ச்சியுடன் யாழிசை திரும்பி வந்தது.

வேர்களின் கனவில் அதனுடைய முன்னோர்கள் வந்து அசுணமாவின் கதையை கூறின.

காடு முழுவதும்

அசுணமா இருக்கிறது !

அசுணமா இருக்கிறது !

என்று இலைகள் சலசலத்தன .

வண்டுகள் எப்போதும் போல மகிழ்ச்சியாக ரீங்கரித்தன.

பிறை கவ்வி கொண்டு மலை நடக்க ஆரம்பித்தது.

-    Manobharathi Vigneshwar