Skip to main content

மீன்கொத்திக்கு வந்த காய்ச்சல்.....

 

மீன்கொத்திக்கு வந்த காய்ச்சல்.....

 

 

நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்த அதிகாலை நேரம். சூரியன் மெதுவாக உதயமாகி கொண்டிருந்தது.

மருத்துவர் தேனீ வேகமாக பறந்து சென்றது.

அதன் பின்னாலேயே மருத்துவ பெட்டியை எடுத்துக் கொண்டு பணியாளர் தேனீ பறந்து வந்தது.

எங்கே இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்? என்று கேட்டது தட்டாம்பூச்சி.

மீன் கொத்திக்கு காய்ச்சல் என்று செய்தி வந்தது. அதற்கு மருத்துவம் பார்க்கத்தான் செல்கிறோம் என்று பறந்து கொண்டே கூறியது பணியாளர் தேனீ.

என்னது மீன் கொத்திக்கு காய்ச்சலா? என்று ஆச்சரியப்பட்டது தட்டாம்பூச்சி.

மருத்துவர் தேனீ மீன் கொத்தியின் கூட்டை தேடி ஒரு வழியாக அதை கண்டுபிடித்தது.

கொஞ்சமாக நீர் இருந்த சிறு ஓடையின் சரிவான தரையில்  ,கிடையாக வளைதோண்டி அதில் கூடமைத்திருந்தன. முன்பக்கம் சற்று சரிவாக இருந்தது. உள்ளே  தேனீ சர்ர்ரென்று நுழைந்தது .  உள்ளே போகப் போக சற்றே உயர்ந்து கொண்டே சென்றது கூடு. தேனீயும் அதற்கு தகுந்தாற் போல் பறந்து சென்றது. 

இப்படி ஒரு கூட்டில் பறந்து செல்வதில் தேனீ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  இறுதியில் சிறிய குழியினை மீன் கொத்தி குஞ்சுகள்  சரியாமலிருக்க அமைத்திருந்தன. அதில் நான்கு  மீன் கொத்தி குஞ்சுகள் படுத்திருந்தன. குட்டி மீன்கொத்திகளின்  மேலே பெண் மீன் கொத்தி அமர்ந்திருந்தது. 

இந்த கூடு ஐந்து  மீட்டர் உயரம் இருக்கும் போல தோன்றுகிறது! என  பணியாளர் தேனீ , மெதுவாக கிசுகிசுத்தது.

ஆண்  மீன் கொத்தி  காய்ச்சலில் சோர்வாக அமர்ந்திருந்தது.

உன்னுடைய கூடு முன்பு வடக்கு பக்க ஓடையின் அருகில் தானே இருந்தது? என்று கேட்டது மருத்துவர் தேனீ.

ஆமாம்! அங்கே ஓடை நீரின் அளவு அதிகரிப்பது போல இருந்தது! அதனால் தான் இங்கே கூடமைத்து முட்டைகளையும் பத்திரமாக எடுத்து வந்தோம்! இப்போது பாருங்கள் நான்கு குட்டிகள் வந்து விட்டனர்! என்று புன்னகையுடன் கூறியது பெண் மரங்கொத்தி .

அழகாக இருக்கின்றனர்! என்று மகிழ்ச்சி  பொங்க கூறியது பணியாளர் தேனீ.

மருத்துவர் தேனீ , ஆண்  மீன் கொத்தியை பரிசோதித்தது. குளிர் காய்ச்சல் இருக்கிறது. மழைக்காலம் கூட இல்லையே எப்படி காய்ச்சல் வந்தது? என்று கேட்டது மருத்துவர் தேனீ.

நான் சொல்வதை  யாரும் நம்பவே இல்லை! என்று சோகமாக கூறியது ஆண் மீன்கொத்தி .

நீ முதலில் என்ன நடந்தது என்று கூறு! அதை நம்புவதா? வேண்டாமா என நான் பிறகு மெதுவாக முடிவு செய்கிறேன் என்றது மருத்துவர் தேனீ.

இரண்டு நாட்களுக்கு முன்பு முழுநிலா. அன்று இரவில் நான் டொட்டுலா நதிக்கு சென்றேன்!

இரவில் எதற்கு சென்றாய்? என்று கேட்டது மருத்துவர் தேனீ.

இரவில் மீன்கள் உறங்கி கொண்டிருக்கும். சுலபமாக அதை பிடித்து விடலாம் என்று எண்ணினேன். அதனால் தான் இரவில் சென்றேன்!

மீன்கள் கிடைத்ததா?

நிறைய மீன்கள் இருந்தன! நான் ஒரு மீனை கொத்த நீருக்குள் சென்றேன்!  ஆனால்  மீன்கள் அப்போதும் தப்பித்து விட்டன! திரும்பவும் நீரை விட்டு வெளியே வந்து பார்த்தேன்!

டொட்டுலா நதியின் நீல அகலத்திற்கு ஒரு பெரிய மீன் ஒன்று நீந்தி கொண்டிருந்தது. அந்த ஒரு மீன் மட்டுமே அங்கே இருந்தது!

அவ்வளவு பெரிய மீனை நான் பார்த்ததே இல்லை!

ஒரு வேளை  சூறா மீனாக  இருக்குமோ? என்று கேட்டது பணியாளர் தேனீ.

எனக்கென்னவோ அது திமிங்கலமாக இருக்குமோ ? என்று தோன்றுகிறது.என கூறியது மருத்துவர் தேனீ.

சுறாவும், திமிங்கலமும் பெருங் கடல்களில் தானே இருக்கும் ! என்று கூறியது பெண் மீன் கொத்தி!

அது என்ன மீன் என்று எனக்கு தெரியவில்லை! அது மிக பெரிய மீன் . அது ஒரு மாய மீன். அதற்கு முந்தைய நாள் கூட நான் சென்று மீன்களை சேகரிக்க சென்றேன் . அப்போது அது இல்லை. முழு நிலவு அன்று மட்டுமே அந்த மாய மீன் நதியில் நீந்துகிறது! அதை பார்த்து தான் பயந்து விட்டேன். குளிர் காய்ச்சல் வந்து விட்டது என்று சலிப்பாக கூறியது ஆண் மீன்கொத்தி .

இன்று இரவு நானும் டொட்டுலா நதிக்கு சென்று பார்க்கிறேன்! என்றது மருத்துவர் தேனீ.

முழுநிலவு மாதத்திற்கு ஒரு முறை தானே வரும்! என்றது ஆண் மீன்கொத்தி.

சரி இன்னுமும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் . அதற்குள் உனக்கு காய்ச்சல் சரி ஆகி விடும்! நாம் அனைவரும் சென்று அந்த மாயமீனை பார்ப்போம் என்றது மருத்துவர் தேனீ.

அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் டொட்டுலா நதியின் மாயமீனை பற்றிய கதை அனைத்து இடங்களிலும் பரவியது.

அந்த மாயமீனின் பெயரே டொட்டுலா என்றாகியது.

தட்டாம்பூச்சிக்கு டொட்டுலா என்ற பெயர் மிகவும் பிடித்து விட்டது.


டொட் டொட் டொட்டுலா!

டொட் டொட் டொட்டுலா!

முழு முழு முழுநிலா!

முழு முழு முழுநிலா!

என்று பாடிக்கொண்டிருந்தது தட்டாம்பூச்சி.


பார்ப்போமே டொட்டுலா!

பார்ப்போமே டொட்டுலா!

என்று கூட சேர்ந்து பாடியது காகம்.


முழு நிலவு எப்போ?

முழு நிலவு எப்போ?  என்று பாடியது தேனீ.


இன்னும் ரெண்டு நாளிலே !

இன்னும் ரெண்டு நாளிலே !

பதிலுக்கு  பாடியது மீன்கொத்தி .


முழு நிலவு அன்று அனைத்து பறவைகளும் டொட்டுலா நதிக்கரையில் கூடின.

நாவல் மரத்தில் இருந்த ஆந்தைகளால் ஆச்சர்யம் தான் முடியவில்லை!

என்ன ஆயிற்று இந்த பறவைகளுக்கு? இரவில் இங்கு வந்திருக்கின்றனவே! என தங்களுக்குள் பேசி கொண்டன.

அனைத்து பறவைகளும் நதி  நீரையே உற்று கவனித்து கொண்டிருந்தன.

முழு நிலவு உதயமாகி வானில் தோன்றியது. நீரின் சலசலப்பு மட்டுமே கேட்டு கொண்டிருந்தது.

பறவைகள் பார்த்து கொண்டிருக்கும் போதே , மிக பெரிய மாய மீன் மெதுவாக நீரில் இருந்து எழும்ப ஆரம்பித்தது. அனைத்து பறவைகளும் மூச்சடைத்து வேடிக்கை பார்த்தன.

அந்த மாயமீன் மெதுவாக  நீந்த தொடங்கியது. அதன் தோல் நிலவின் ஒளியில் பட்டு வெள்ளி இழைகளை போல மின்னியது. ஆனால் அதனுடைய முகத்தையும், வாலையும்  பார்க்க முடியவில்லை. அது நதியின்  ஏதோ ஒரு முனையில் இருந்தது போல தோன்றியது.

மாயமீனின் உடல் மட்டுமே வளைந்து நெளிந்து நீந்துவதை பார்க்க முடிந்தது.

டொட்டுலா ! என்று ரகசியமாக கூப்பிட்டது தட்டாம்பூச்சி. அதை கேட்டது போல அந்த மாயமீன் மேலே எழும்பியது. அதைக்கண்டு பயந்து அனைத்து  பறவைகளும் திசைக்கொன்றாக சிதறி பறந்தன.

  அடுத்த நாள் மருத்துவர் தேனீக்கு  வேலை அதிகம் ஆகி விட்டது.   ஒவ்வொரு பறவையின்  கூட்டிற்கும் சென்று மருத்துவம் பார்த்து வந்தது.

காகம் மட்டும் உற்சாகமாக பறந்து கொண்டிருந்தது. மருத்துவர் தேனீக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

காகமே! உனக்கு காய்ச்சல் வரவில்லையா?

காகம் சிரிக்க ஆரம்பித்தது.

சிரிக்காமல் பதிலை கூறு என்றது மருத்துவர் தேனீ.

இந்த பறவைகளை நினைத்து சிரிக்காமல் என்ன செய்வது? என்று மறுபடியும் சிரித்தது காகம்.

முழுநிலவு அன்று என்ன நடந்தது தெரியுமா? என்று கேட்டது காகம்.

தெரியுமே ! மாயமீன்  டொட்டுலா நீந்துவதை பார்த்து தான் பறவைகளுக்கு காய்ச்சல் வந்து விட்டதே! என்றது மருத்துவர் தேனீ.

அது மற்ற பறவைகளின் பார்வை கோணம்!  என்றது காகம்.

சரி அன்று என்ன தான் நடந்தது?

முழுநிலவு வானில் மேலேறியது. அப்போது நதியின்  நீர் முழுவதும் முத்து போல உள்ளிருந்து ஒளி வீசியது!

 அனைவரும் மாயமீனுக்காக காத்திருந்தனர். நிலவு உச்சிக்கு வந்தது. அப்போது டொட்டுலா நதியே  ஒரு மிகப் பெரிய மீனை போல நீந்தி செல்வதை பார்த்தேன் . மிக மிக  பெரிய மீன்! நான் என் வாழ்நாளில் அதை போன்ற ஒரு மீனை பார்த்ததே இல்லை!

அதை பார்த்து மெய் மறந்து நின்று விட்டேன்! மீண்டும் கண்களை திறந்து பார்த்த போது பறவைகள் பறந்து சென்று விட்டன .

நிலவு மேகத்தில் மறைந்திருந்தது. நதி திரும்பவும் இருட்டின் நிறத்தில்  ஓடி கொண்டிருந்தது.

மாயமீனை பார்ப்பதற்காக நான் அடுத்த முழு நிலவு வரை காத்திருக்க வேண்டும்! என்று பெருமூச்சோடு கூறியது  காகம்.

நானும்  டொட்டுலா நதி மாயமீனாக நீந்துவதை  பார்க்க வேண்டும்!  என்று  கனவு நிறைந்த கண்களால் கூறியது  மருத்துவர் தேனீ.

- Manobharathi Vigneshwar