குருகு எப்படி சாட்சி சொல்லும்?
சூரியன்
உதயம் ஆவதற்கு முன் வரும் சிறிய வெளிச்சம் வானில் தெரிந்தது. அப்போது தான் பறவைகள்
கூட்டை விட்டு வெளிய வர ஆரம்பித்தன.
ஆனால்
அதற்கு முன்பாகவே ஒரே பரபரப்பாக இருந்தது.
நாகணவாய்
பறந்து பறந்து செய்தியை ஒவ்வொரு பறவை கூட்டிற்கும் கொண்டு சென்றது.
செய்தியை கேள்விப்பட்ட பறவைகளால் ஆச்சர்யம் தாங்க
முடியவில்லை.
சில்வண்டுகள் கத்திகொண்டே இருந்தன.
இதுவரைக்கும் நம்முடைய பறவைகளின் கூட்டத்தில்
இது போன்ற சம்பவம் நடந்தது இல்லையே !
பெரிய ஆலமரத்தில் பறவைகளின் கூட்டம் கூடியது.
கழுகு தாத்தா அமர்ந்திருந்தார்.
அவரை சுற்றிலும் மற்ற பறவைகள் அமர்ந்திருந்தான்.
நாகணவாய் செய்தியை திரும்பவும் கூட்டத்தில் வாசித்தது.
ஆறு மணி குருவியும் , கரிச்சான் குயிலும் ஒரே பாடலை
சொந்தம் கொண்டாடுகின்றன. அது முதன் முதலில் யார் உருவாக்கிய பாடல் என்பதில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. அதை பற்றி
பேசவே இங்கு நம் கூடி உள்ளோம்.
பறவைகளின் கூட்டத்தில் சலசலப்பு மறைந்தது.
கழுகு தாத்தா பேச ஆரம்பித்தார்.
கரிச்சான் குயிலே அந்த பாடலை நீ தான் உருவாக்கினாய் என்பதற்கு உன்னிடம் சாட்சி இருக்கிறதா?
சாட்சி என எவரும் இல்லை.
ஆறுமணி குருவியே உன்னிடம் சாட்சி இருக்கிறதா?
சில நொடிகள் யோசித்தது ஆறுமணி குருவி.
இருக்கிறது ! இருக்கிறது!
குருகு தான் சாட்சி!
குருகு? அது என்ன தானிய பயிரா? என்று கேட்டது
கழுகு தாத்தா.
இல்லை அது ஒரு பறவை என்றது ஆறுமணி குருவி.
வானில் இந்த பெயருள்ள பறவை பறந்து நான் பார்த்ததில்லையே! என்று யோசித்தது
காகம்.
ஆள்காட்டி குருவியே ! அந்த குருகு பறவையை இரண்டு
நாட்களுக்குள் சாட்சி சொல்ல அழைத்து வா! என்றது கழுகு தாத்தா.
நிச்சயமாக என்று கூறியது ஆள்காட்டி குருவி!
ஆள்காட்டி குருவி பாடி கொண்டே தேடியது.
"குருகே! குருகே! உன் குரல் என்ன?
குயிலை போல கூவுவாயோ?
மயிலை போல அகவுவாயோ?
குருகே! குருகே! உன் நிறம் என்ன?
நாகணவாயின் கபில
நிறமா?
பேசும்
கிளியின் பச்சை நிறமா?
குருகே! குருகே! நீ எங்கிருப்பாய் ?
மரத்தின் பொந்திலா?
இலைகளின்
கூட்டிலா ?
குருகே! குருகே!
நீ இருக்கிறாயா?
இல்லையா?"
மாலையில் சோர்ந்து போய் கூட்டிற்கு திரும்பியது ஆள்காட்டி குருவி.இரவில்
தூங்காமல் யோசித்து கொண்டிருந்தது.
ஒருவேளை ஆறுமணி குருவி பொய் சொல்லியிருக்குமோ?குருகு
என்ற பறவையே இல்லை என நினைக்கிறேன்.
காலையில் எழுந்ததும் முதலில் ஆறுமணி குருவியை
சென்று பார்க்க வேண்டும்! என்று நினைத்து உறங்கியது.
அடுத்த நாள் ஆறுமணி குருவியை சந்தித்தது ஆள்காட்டி குருவி.
குருகு என்ற பறவை உண்மையில் இருக்கிறதா?
இருக்கிறது இருக்கிறது!
அதன் பெயர் குருகு தான் என்பது உனக்கு எப்படி
தெரியும்?
அது குறுகி யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருந்தது.
அதனால் நான் தான் அதற்கு குருகு என பெயர் வைத்தேன்.
சரி ! அது
எங்கிருக்கும்?
ஆற்றின் ஓரத்தில் தாழை புதரின் அருகில்.
ம்ம் ! அதன் நிறம் என்ன?
நீ தாழை பூவை பார்த்திருக்கிறாயா?
பார்த்திருக்கிறேன்!
அதைப்போலவே பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும்!
அட ஆறுமணி குருவியே ! நீ தாழை பூவை பார்த்து ஏதோ பறவை என்று நினைத்துள்ளாய் !
என்று சிரித்தது ஆள்காட்டி குருவி.
இல்லை இல்லை ! அதற்கு கால்கள் இருந்தன.
சரி எப்படி இருந்தது?
நீ தினைசெடியை பார்த்துள்ளாயா?
பார்த்திருக்கிறேன்!
தினைச்செடியின் அடித்தாளை போல சிறிய மென்மையான
பசுங் கால்களை கால்களை கொண்டிருக்கும்.
நிறத்தையும், கால்களையும் வைத்து தேடுவது கஷ்டம்.
குருகின் குரல் எப்படி இருக்கும்? குரலை வைத்து
சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்றது ஆள்காட்டி குருவி.
அதன் குரலை நான் கேட்கவில்லையே! என்றது ஆறுமணி
குருவி.
என்ன செய்வது? எப்படியாவது நானே கண்டு பிடிக்கிறேன்!
என்று பெருமூச்சுடன் பறந்து சென்றது ஆள்காட்டி குருவி.
ஆற்றின் மேலே பறந்து ,
தாழை புதர் குருகே !
பொன்மஞ்சள் குருகே !
சாட்சி சொல்ல வாராயோ!
நீ சாட்சி சொல்ல வாராயோ?
என்று பாடி தேடியது ஆள்காட்டி குருவி.
மீன் கொத்த வந்த கொக்கு இதை பார்த்து சிரித்தது.
ஏன் சிரிக்கிறாய் ? என்று கேட்டது ஆள்காட்டி குருவி.
இப்படி கத்தி கத்தி பாடினால் குருகு வந்து விடும்
என நினைக்கிறாயா?
வேறு என்ன செய்வது?
குருகு ! மிகவும் வெட்கப்படும் பறவை! அது புதரை
விட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியே வராது.
சரி வானில் பறந்து தானே ஆக வேண்டும்! எப்போது வானில் பறக்கும்?
அதற்கு வானில் பறக்க தெரியாது!
என்னது பறக்க தெரியாத பறவை இருக்கிறதா? சரி நான்
எப்போது அதை பார்க்கலாம்?
குருகு பறவையை பார்ப்பது அபூர்வம் ! நீ ஏன் அதை
தேடி வந்தாய்!
நீ வேறு கிராமத்தில் இருக்கிறாய்! உனக்கு விஷயம்
தெரிந்திருக்காது! ஆறுமணி குருவியின் பாடலுக்கு குருகு தான் சாட்சி! அதற்காக தான் தேடி
வந்துள்ளேன்!
குருகு எப்படி சாட்சி சொல்லும்? என்று சிரித்தது கொக்கு.
புரிகிறது!
என்று பெருமூச்சு விட்டது ஆள்காட்டி குருவி.
சரி! ஓசனித்தலின் போது
சந்திப்போம்! என்றது கொக்கு.
எப்போது ஓசனித்தல்? என
கேட்டது ஆள்காட்டி குருவி.
பூ நாரை அழைப்பிதழ் அனுsப்பும்!
காத்திருப்போம்! என பறந்து சென்றது கொக்கு.
அடுத்த நாள் காலையில்
கூட்டம் கூடியது!
குருகு சாட்சி சொல்ல வராது! இப்போது என்ன செய்யலாம்?
என்று யோசித்தது கழுகு தாத்தா.
ஆறுமணி குருவியே நீ உன் பாடலை பாடு !
என்ன வானம் ! என்ன வானம்!
நீல வானம் ! சிவப்பு வானம்!
என்ன மேகம்! என்ன மேகம்!
நீல மேகம் ! வெள்ளை மேகம்!
நீல மேகமே மழை தருவாயோ !
வெள்ளை மேகமே வெயில் தருவாயோ !
என்ன வானம் ! என்ன வானம்!
நீல வானம் ! சிவப்பு வானம்!
என்று பாடி முடித்தது ஆறு மணி குருவி.
கரிச்சான் குயிலே இந்த பாடல் முழுவதுமே உன்னுடைய
பாடலை போல இருக்கிறதா?
கொஞ்சம் மாறி இருக்கிறது.
என்ன?
கருப்பு மேகம்! என்று என் பாடலில் வரும் .
அப்படியானால் இருவரும் வேறு வேறு பாடல் தானே பாடுகிறீர்கள் என்று தீர்ப்பு வழங்கியது கழுகு தாத்தா.
இதை முதல் நாளே செய்திருக்கலாம்.
ஆள்காட்டி குருவியின் அலைச்சல் வீணாகி விட்டது! என்றது காகம்.
ஆனால் ஆள்காட்டி
குருவி திரும்பவும் ஆற்றங்கரைக்கு பறந்து
சென்றது.குருகு பறவையை எப்படியேனும் பார்த்து விடுவது என்று முடிவு செய்தது. ஆற்றின்
அருகே தாழை புதரின் அருகில் தவம் இருந்தது.
குருகு வருமா?
- Manobharathi Vigneshwar