பெசண்ட் நகரின் உடைந்த பாலத்திற்கு அருகே ஒரு கூடாரம். மூங்கில்களால் ஆன சுவர்களும் தார்ப்பாயினால் மேற்கூரையும் அமைத்திருந்தார்கள். உள்ளே நிறைய மூங்கில் கூடைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.
சிறிய கூட்டம் இருந்தது. பனிரெண்டு வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சில குழந்தைகளும் இருந்தனர்.
மாலை ஆறு மணி ஆகும் போது SSTCN அமைப்பை சேர்ந்த மாணவி ஒருவர் உரையாற்றினார்.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் கடலில் வெகுதூரம் பயணம் செய்யக்கூடியவை. இனப்பெருக்கத்தின் போது மட்டுமே பெண் ஆமைகள் கடற்கரையை நோக்கி வந்து கடல் நீர் வராத தூரத்திற்கு மணலில் கூடமைத்து முட்டைகளை இடுகின்றன. கிட்டத்தட்ட மூன்று முறை வெவ்வேறு கால இடைவெளிகளில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளை இட்டு விட்டு திரும்பவும் கடலுக்குள் சென்றுவிடும். இந்த முட்டைகள் அதற்கான பருவம் வந்தவுடன் குஞ்சுகளாக வெளிவரும். அவை பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் வெளிவருகின்றன. கடலில் நிலவின் வெளிச்சம் படும் போது தெரியும் ஒளியினால் இவை கடலை நோக்கி செல்கின்றன. பெண் ஆமைகள் ஆக இருந்தால் திரும்பவும் ஐம்பது ஆண்டுகள் கழித்து இதே கடற்கரைக்கு வந்து முட்டைகள் இடும். இவை தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வருவதால் மீனவர்கள் இதை பங்குனி ஆமைகள் என கூறுகின்றனர்.
ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்றார். மாணவர்கள் மட்டுமே கேள்வி கேட்டு கொண்டிருந்தனர்.
1. எதற்காக நீங்கள் இதை செய்கிறீர்கள்? ஆமைகள் தானாகவே செல்லாதா?
முன்பு இயற்கையில் அப்படித்தான் இருந்தது. ஆனால் தற்போது இந்த ஆமைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. எந்த உயிரினத்தின் மறைவும் சூழலுக்கு நல்லது இல்லை. அதனால் நாங்கள் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து வைத்து அவை குஞ்சுகளாக வெளிவரும் போது கடற்கரையில் விட்டுவிடுவோம்.
2. ஏன் ஆலிவர் ரிட்லி ஆமைகளின் எண்ணிக்கை குறைந்தது ?
நாய்கள் மிக முக்கிய பிரச்சினை. முட்டைகள் எங்கே இருக்கின்றன என்பதை மோப்பம் பிடித்து அவற்றை உண்டு விடுகின்றன.
நண்டுகள் மிக நீண்ட தூரத்திற்கு உள்ளுக்குள்ளேயே சுரங்கம் போல தோண்டி கூட்டுக்குள் நுழைந்து முட்டைகளை சாப்பிட்டு விடுகின்றன.
கடற்கரை மணலில் உள்ள மாசுபாட்டால் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.
மீன்பிடி படகுகளில் நிறைய நேரங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் மாட்டிக் கொள்கின்றன.
கடலில் ஏற்படும் கப்பல்களின் எண்ணெய் கசிவு , பிளாஸ்டிக் பொருட்களின் மாசுபாட்டால் நிறைய ஆமைகள் மறைந்து விடுகின்றன.
அதனால் தான் முட்டைகளை நாங்கள் பத்திரமாக தோண்டி எடுத்து தனி கூடாரம் அமைத்து அதை பாதுகாக்கிறோம்.
2. ஆமைகள் எங்கே முட்டைகள் இடுகின்றன என்பது உங்களுக்கு எப்படி தெரியும் ?
ஆமைகள் வந்து போன தடம் பிறை நிலா போல மணலில் தெரியும். அதை வைத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி தோண்டி எடுப்போம்.
3. தடம் கடல் நீரினால் மறைந்து விட்டால் என்ன செய்வீர்கள்?
Turtle Walk என நடத்துகிறோம். இரவு 2.30 - 5.30 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் கடற்கரையில் நடந்து கொண்டே இருப்போம். எழுபத்தைந்து சதவீதம் அவை வந்து போவது தெரிந்து விடும். மேலும் மீனவர்களும் சில அடையாளங்கள் மூலமும் தங்களுக்கு உள்ள மரபான அறிவின் மூலமும் அவை எங்கே முட்டைகளை இடும் என கூறுவார்கள். அதை வைத்தும் நாம் கண்டுபிடித்து விடலாம்.
4. சில கூடுகளை கண்டுபிடிக்க முடியாமல் போனால் ?
ம்ம்ம்... அதை ஒன்றும் செய்ய முடியாது. இயற்கையின் விதிப்படி நடக்கட்டும் என விட்டுவிட வேண்டியது தான்.
5. ஆமைகள் பறவைகளை போலவா கூடமைக்கும்?
இல்லை . மண்ணை நன்றாக பறித்து வெறும் மண்ணில் மட்டுமே முட்டைகளை இடும்.
6. கூடு எந்த வடிவமைப்பில் இருக்கும் ?
பானை வடிவில் இருக்கும்.
7. நீங்கள் கூடாரத்தில் மூங்கில் கூடைக்குள்ளா முட்டைகளை வைத்திருப்பீர்கள் ?
அப்படி வைக்க கூடாது. நாங்கள் ஆமைகள் கூட்டை தோண்டி எடுக்கும் போது சில முக்கியமான அளவீடுகளை மேற்கொள்வோம்.
1. கூட்டின் அகலம்
2. உயரம்
3. ஈரப்பதம்
4. வெப்பநிலை
5. தோண்டி எடுக்கும் நேரம்
இதை அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்வோம்.
பிறகு முட்டைகளை ஒரு துணி பையில் சேகரித்து எடுப்போம்.
அளவீடுகளை கொண்டு கூடாரத்திற்குள் மண்ணை தோண்டி அதை போலவே கூடமைப்போம். ஆமைகள் கூட்டில் இருக்கும் ஈரமான மண்ணையும் சேர்த்து எடுத்து வந்து நாங்கள் அமைக்கும் கூட்டில் வைப்போம். அந்த ஈரம் ( Mucus ) தாய் ஆமையின் அருகாமையையும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.
8. எத்தனை நாட்களில் குஞ்சுகள் வெளியே வரும் ?
குளிர்கால மாதத்தில் ஐம்பது நாட்கள் வரை எடுத்து கொள்ளும்.
வெயில் காலத்தில் நாற்பது முதல் நாற்பத்தி இரண்டு நாட்கள் ஆகும்.
9. குஞ்சுகள் முட்டையை விட்டு வந்து விட்டன என்று உங்களுக்கு எப்படி தெரியும் ?
மண்ணுக்குள் ஏதேனும் ஒரு முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வந்தாலும் அடுத்தடுத்து அனைத்து முட்டைகளிலிருந்தும் குஞ்சுகள் வெளியே வந்து விடும். ஐந்து நிமிடத்தில் இருந்து நாற்பத்தைந்து நிமிடத்திற்குள் நடந்து விடும். அப்போது உள்ளே நடமாட்டம் இருப்பதை உணர முடியும். மேலிருக்கும் மண் உள்ளே இறங்கிவிடும். அப்போது குஞ்சுகளை எடுத்துவிடுவோம்.
10. எடுத்தவற்றை எவ்வளவு நேரம் வரை வெளியே வைத்திருக்க முடியும் ?
வெளியே வரும் போது அதற்கான சத்துக்களை எல்லாம் முட்டையில் இருந்தே எடுத்துக்கொண்டு வெளியே வந்து விடும். அதன் பிறகு 48-72 மணி நேரத்திற்குள் தானாகவே உணவை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும்.
அந்த நேரத்திற்குள் கடலுக்குள் அவை சென்று விட வேண்டும்.
11. எது பெண் ஆமை எது ஆண் அமை என எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
வெப்பநிலை 25-28°C போது முட்டையிலிருந்து வெளியே வருவபை ஆண் ஆமைகள். 28°Cக்கு அதிகமா இருக்கும் போது வெளியே வருவபை பெண் ஆமைகள்.
இன்னுமும் சொல்லப்போனால் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் ஆண் ஆமைகளும், பிப்ரவரி - மார்ச் மாதத்தில் அதிக பெண் ஆமைகளும் பிறக்கும். அவற்றினுடைய பால் தன்மையை வெப்பநிலை தான் தீர்மானிக்கிறது.
12. ஏன் இரவு நேரத்தில் அதை கடற்கரையில் விடுகிறீர்கள்?
இயற்கையாகவே அவை இரவில் மட்டும் தான் முதன்முதலில் கடலுக்குள் செல்லும். தற்போது இரவிலும் நகரங்களில் மின்சார விளக்குகளின் வெளிச்சம் தெரிவதால், அது தான் கடல் என்று நினைத்து நகரத்தை நோக்கி சென்று பாதிப்புக்கு உள்ளாகி விடும். அதனால் தான் மாலை ஆறுமணிக்கு சூரியன் மறைந்த பின்பு நாங்கள் அவற்றை கடற்கரையில் விட்டு விடுவோம்.
13. ஏன் கடலுக்குள்ளேயே விட்டு விடலாமே? இன்னுமும் அவை பாதுகாப்பாக இருக்குமே?
அப்படி செய்ய கூடாது. ஆமைகளுக்கு இந்த கடற்கரையின் வெப்பமும், மணமும், காற்றும் மூளையில் பதிய வேண்டும். அப்போது தான் அவை ஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்பவும் இங்கு வந்து முட்டைகளை இட முடியும்.
14. எப்படி ஐம்பது வருடங்களுக்கு அவற்றிற்கு நினைவு இருக்கும்?
ஆமைகள் பூமியின் காந்த (மேக்னடைட் - Magnetite) புலத்தை வைத்து அது பிறந்த இடத்திற்கு திரும்பவும் வந்து விடும்.
15. ஒருவேளை பூமியில் காந்தப்புலம் பாதிப்பு ஏற்பட்டால்?
நடப்பதற்கு வாய்ப்பில்லை. நடந்தால் அதற்கு இன்னுமும் பல மில்லியன் ஆண்டுகள் ஆகும். அது இயற்கையின் நியதி என்று விட்டு விட வேண்டியது தான். அதனால் பூமியின் அனைத்து உயிரினங்களுமே பாதிப்புக்கு உள்ளாகும். அப்படி நடக்க வாய்ப்பில்லை.
16. கடலுக்குள் சென்றதும் ஆமைகள் என்ன சாப்பிடும்?
கடலுக்குள் சென்றதும் அவை சிறு புழுக்கள், ஜெல்லி பிஷ் , சிறு மீன்கள் , இவற்றை சாப்பிடும்.
17. பிளாஸ்டிக்கை ஜெல்லிபிஷ் என்று நினைத்து சாப்பிட்டு விட்டால்?
வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் தான் நாம் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க வேண்டும். அதன் மூலம் நிறைய உயிரினங்கள் காப்பாற்றப்படும் மனிதர்கள் உட்பட.
18. ஆமைகள் சுறாவை சாப்பிடுமா?
இல்லை. சுறாக்கள் தான் ஆமைகளை சாப்பிடும்.
19. எல்லா ஆமைகளையும் சாப்பிட்டு விடுமா?
இல்லை. கடலுக்குள் சென்றதும் முதலில் அவை பெரிய ஆல்கேக்கள் , பூஞ்சைகள், பாறைகள் என தேடும். அவற்றின் அடியில் மறைந்து கொண்டு வாழும். பருவம் வந்த பின்னர் தான் அவை பெரிய ஆமைகளுடன் ஆழ் கடலுக்குள் பயணம் செல்லும்.
20. ஆமைகளின் ஆயுள்காலம் எவ்வளவு?
அறுபது - எழுபது ஆண்டுகள் வாழும்.
21. இப்போது உள்ளே செல்லும் ஆமைகள் அனைத்தும் எழுபது ஆண்டுகள் வாழுமா?
அதற்கு வாய்ப்பில்லை. ஆயிரம் ஆமைகள் உள்ளே சென்றால் ஒன்றுக்கு மட்டுமே பருவம் வரைக்கும் வாழ்ந்து முட்டைகள் இடும் வாய்ப்பிருக்கும்.
22. நீங்கள் எப்படி இதை முதன் முதலில் செய்ய ஆரம்பித்தீர்கள்?
ஆலிவ் ரிட்லி ஆமைகள் வருவதை முதலில் பார்த்து பாதுகாத்தவர் ரோமுலஸ் ஏர்ல் விட்டேக்கர். முதலை பண்ணை வைத்திருக்கிறார். அவருடன் NCC மாணவர்கள் இணைந்து கொண்டனர். தற்போது SSTCN என்ற பெயரில் நாங்கள் இயங்கி வருகிறோம். முதலில் மாணவர்கள் மட்டும் தான் தன்னார்வாலர்களாக இருந்தார்கள். தற்போது அலுவலக பணிக்கு செல்பவர்களும் எங்களுடன் இணைந்துள்ளார்கள். நாங்கள் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை. தமிழ்நாடு வனத்துறையினருடன் சேர்ந்து இதை நாங்கள் செய்து வருகிறோம்.
23. இதை ஏன் ஆலிவ் ரிட்லி ஆமைகள்ன்னு சொல்றாங்க ?
இதை தான் முதல் கேள்வியா கேட்ருக்கணும் . இதோட மேற்பரப்பு நிறம் ஆலிவ் பச்சை மாதிரி இருக்கிறதினால் ஆலிவ் ரிட்லி ஆமைகள்ன்னு சொல்றாங்க .
24. உலகத்தில ஆலிவ் ரிட்லி ஆமைகள் மட்டும் தான் இருக்கா?
நிறைய விதமான ஆமைகள் இருக்கு. இந்தியாவோட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் மட்டுமே வருகின்றன.
வேறு ஏதும் கேள்விகள் இருக்கிறதா?
25. எப்போது நாங்கள் கடலுக்குள் ஆமைகள் செல்வதை பார்க்கலாம்?
இன்னும் பத்து நிமிடங்களில் ...
1. ஆமைகள் வரும் போது யாரும் டார்ச் லைட் அடிக்கக்கூடாது, கமெராவில் பிளாஷ் லைட் போடக் கூடாது.
2. தடுப்புகளை கடந்து யாரும் ஆமைகளிடம் வரக்கூடாது.
என்று அறிவுறுத்தினார்கள்.
கூடியிருந்த அனைவரும் தடுப்புகளுக்கு அருகில் வரிசையாக அமர்ந்தனர். நிலா வானத்தில் தெரிந்தது.
ஆமைக்குஞ்சுகளை மணல் மேட்டில் விட்டனர். ஒவ்வொன்றும் தத்தி தத்தி கடலை நோக்கி சென்றன. ஒன்றிரண்டு பக்கவாட்டில் சென்று திரும்பவும் கடலை நோக்கி சென்றன.
குழந்தைகள் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். மாணவர்கள் கோ கோ என கத்திக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் முகங்களில் பரிதவிப்பு தெரிந்தது .
ஒரு அம்மா தன் குழந்தையிடம் , ஒரு ஆமைகுஞ்சை சுட்டி காட்டி பேசினாள்.
அங்க பாரு அது கடைசியா தான் போகுது. ஆனா அழவே இல்ல பாத்தயா ?
ஆமை குஞ்சுகள் கடலுக்குள் சென்று கொண்டே இருந்தன. அவை சென்ற தடம் தோரணங்கள் போல மணலில் பதிந்திருந்தது.
என்னால் அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. என்ன நம்பிக்கையில் இளம் ஆமைக்குஞ்சுகள் அந்த பெருங்கடலுக்குள் செல்கின்றன? எனக்கு தான் பதட்டமாக இருந்தது. அவற்றிக்கு தெரியும் கடல் என்பது என்னவென்று. இயற்கை சகுண ப்ரம்மமா ? நிர்குண ப்ரம்மமா ?
நானும் விக்னேஷ்வரும் கடற்கரையை விட்டு திரும்பி நடந்து வந்தோம்.
ஆமைக்குஞ்சுகளோட அம்மா எங்கே? என ஒரு குழந்தை கேட்டு கொண்டிருந்தது.
Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
April 9, 2025