Skip to main content

Posts

Showing posts from October, 2024

பாரிஜாதம்.....

 வீட்டின் பின் முற்றத்தில் உதிர்ந்திருந்த பாரிஜாதம் நாணத்தால் சிவந்து கண் மூடி புன்னகைப்பது போல இருந்தது.  பிரம்ம முகூர்த்தத்தில் மலர்ந்து சூரியனின் முதல் கீற்று முத்தத்தில் நாணி பரவசம் தாள முடியாமல் நிலத்தில் உதிர்கிறது. தோழியான வாழை மரமும் , தோழனான கொய்யா மரமும் கேலி செய்ய, வயதில் மூத்த தாத்தாக்களான மாமரமும் , பலா மரமும்  இதெல்லாம் இந்த வயதில் இருப்பது தானே என்ற பெருந்தன்மையான புன்னகையை கொடுக்க , இவர்களிடமிருந்து தப்பிக்கொள்ள பாரிஜாதம் விரல்களால் விழியை மூடிக் கொண்டு குளிர்ந்திருக்கும் நிலத்தை நோக்கி உதிர்ந்து புன்னகைத்தது. காற்றின் மெல்லிய தொடுகையில், தன் கனவை கலைத்ததற்காக சிறு சிணுங்கலுடன்  கண்களை திறப்பது போல சில பூக்கள் வானத்தை நோக்கி உதிர்ந்திருந்தன.  இவற்றில் எந்த மலரை எடுப்பது என்ற தயக்கத்திலும் , அச்சத்திலும் சில கணங்களை செலவிட்டேன். அணில்களின் சத்தமும் , காகத்தின் குரலும் கேட்க , நிலத்தின் குளிர் மணம் மறைய ஆரம்பித்ததும் விடியலை உணர்ந்த பாரிஜாதம் நாணம் விலகி முகத்தில் லட்சமிகரம் தவழும் இல்லாளை போல மாறியது. சிறிய நிம்மதி பெருமூச்சூடன் அச்சமும் தயக்கமும் விலக பக்தியோடு பாரிஜாத

ரங்கமன்னார்.....

 ரங்கமன்னார் என்ற பெயரையே இந்த நவராத்திரியின் போது தான் அறிந்து கொண்டேன். கோதையின் மடியில் தலை வைத்து உலகமே அது தான் என சுகஜீவனம் கொண்டிருந்தார் பெருமாள்.உலகையே தன் மடியில் வைத்திருக்கும் சிறு கர்வம் கூட இல்லாமல் கோதையின் முகம் வெகு சாதாரணமாக சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் இருந்தது.  கொலுவில் மேலிருந்து இரண்டாம் படியில் ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் பெருமாளின் காலடியில் இருந்த லக்ஷ்மியின் முகம் அபலை பெண் போல இருந்தது. பெருமாளோ உலகையே காத்துக் கொண்டிருக்கும் பெருமிதம் பரவிய குறு நகையில் இருந்தார்.  காதலிகளுக்கு மட்டுமே என்று சில முகபாவனைகளை கைக் கொள்கிறார்கள் ஆண்கள். காதலியின் மடியில் தலை வைத்தும், மனைவியினை காலடியில் வைத்தும் என்று சிலை வடித்த சிற்பியின் கற்பனை உருவாக காரணமாக இருந்த புராணக்கதை எழுதியவரை நினைத்து புன்னகை எழுகிறது. காதலிகளுக்கு என்றுமே வயதாவதில்லை.  Manobharathi Vigneshwar Raja Annamalaipuram 21-10-2024