Skip to main content

ஜிலேபி மீனும் ஈசூர் அணைக்கட்டும்......

              பனியில் மூழ்கியிருந்த வீடுகளின் இருளில் எங்கள் வீட்டில் மட்டுமே டியூப்லைட்  அதிகாலை நான்கு மணிக்கே எரிந்து கொண்டிருந்தது என்பதை வெளியில் வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது தான் உணர்ந்தோம்.  குளித்து முடித்து திருநீறை உடலெங்கும் பூசியிருந்த சிடுசிடு சைக்கிள் தாத்தா , பிள்ளையார் கோவிலுக்குள் செம்புக்குடம் நிறைய தண்ணீருடன் சாந்தமான முகத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்.  அதிகாலை மனிதர்களை இவ்வளவு அழகானவர்களாக மாற்றி விடுவதன் மாயம் என்னவென்றே தெரியவில்லை. 

கருங்குழியின் தெருக்களை கடந்து செல்லும் போது ஒவ்வொரு வீட்டிலும் வாசல் மின்விளக்கை போட்டபடி தூக்க கலக்கத்துடனே இருந்த பெண்கள் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். அதிகாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் அந்திமாலையில் வாசல் தெளிக்கும் நீர் மண்ணிலிருந்து எழுப்பும் மணமும் கொண்டிருக்கும் கதைகள் ஏராளம். இரவு முழுக்க நிலவுக்கும் தனக்குமாக நிகழ்ந்த உரையாடல்களை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ரகசியப் புன்னகையின் மணமே அதிகாலை வாசல் தெளிக்கும் போது மண்ணிலிருந்து எழும் மணம். பகல் முழுக்க சூரியனுடன் சேர்ந்து தன்னில் விளைந்த பயிர்களுக்கும் , அதை சார்ந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியும் மனிதர்களின் நவரச நாடகங்களையும் பார்த்து சலிப்புடன் இருக்கும் மண் அந்திமாலையை நிலவுடன் தனித்திருக்க ஏங்கும் நேரத்தில் வாசல் தெளிக்கும் போது எழும் மணம் காத்திருப்பின் நிறைவில் வரும் புன்னகையின் மணமே அந்திமாலையில் வாசல் தெளிக்கும் போது எழும் மண்ணின் மணம். 

தோட்டநாவலூரை நோக்கி வண்டியை திருப்பியபோது மேம்பால வேலைக்கு வந்திருக்கும் வட இந்தியர்கள் பனியில் நனைந்தபடி கம்பிகளை எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர். ரயில்வே கேட் போடுவதற்கு கம்பி கீழிறங்கிய ஒரு கண வித்தியாசத்தில் ரயில்வே கிராஸிங்கை கடந்து வந்தோம். ரயில்நிலைய ஊழியர் வழக்கமானதொரு புன்னகையை என் கணவருக்கு கொடுத்துவிட்டு சென்றார். 

எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் கொட்டும் பனியில் நீர் சொட்டிக் கொண்டிருந்த தலை முடியை உலர வைத்தபடி  , முகப்பவுடர்கள் மினுங்க வேக வேகமாக நடந்து போய்க்  கொண்டிருந்தனர். 

எப்போதுமே குரைத்துக் கொண்டும் துரத்திக் கொண்டும் இருக்கும் நாய்கள்  சோம்பலில் பனியில் சிலையாக நின்று கொண்டிருந்தன .

கிராமத்தின் வீடுகளைத் தாண்டி வயல்வெளியை நோக்கி சென்ற தார்சாலையில் சென்றோம். நெற்பயிர்களின் கதிர் செந்நிறத்தில் முற்றியிருக்க , பனியை அதன் மீது படாமல் தடுத்து சிறிது சிறிதாக எட்டுக்கால் பூச்சிகள் கட்டியிருந்த வலைகள் பனித்துளிகளுடன் தெரிந்தன. யாருக்கு யார் பாதுகாப்பு ?
ஒவ்வொரு உயிரியும் தான் சார்ந்திருக்கும் உயிரினத்தை பாதுகாத்தே தான் உயிர் வாழ முடியும் என்று வகுத்த இயற்கையின் நியதியை வியக்காத நாளிலில்லை. 

சூரியன் ஆரஞ்சு நிற பந்து போல கையில் எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்ற வைத்துக் கொண்டிருந்தது. அனுமன் சூரியனை பழம் என்று விழுங்க முயற்சித்தது நியாயமே !.

தோட்டநாவலூரை தாண்டி ஈசூரை நோக்கி செல்லும் தார்சாலையில் சென்றோம். இருபுறமும் நெல்வயல்கள் பசுமையாகவே வந்து கொண்டிருந்தது. சட்டென்று சாலை பனி சூழந்து 25 அடி தூர பார்வைத் திறனையே  கொடுத்தது. கணவர் காரை பாதுகாப்பாக இயக்குவதில் மூழ்கியிருந்தார். நான் சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வானத்தை கவனித்தபோது முழு சந்திரனாக மாறியிருந்த சூரியனை பாரத்தேன். செந்நிற பழம் எங்கே சென்றது. கண் கூச வைக்காமல் சூட்டைத் தராமல் வெளிச்சத்தை மட்டுமே தரும்படி பனி சூரியனை மூடியிருந்தது. அங்க பாருங்க நிலா என்றேன். ம்ம் என்றபடியே காரில் கவனத்தை வைத்தபடி ஓட்டி ஓரிடத்தில் நிறுத்திவிட்டு வானத்தை பார்த்தவர் , ஆமாமாமா அப்படியே பெளர்ணமி மாதிரியே இருக்கு. ஆனா வெளிச்சம் மட்டும் அதிகமா இருக்கு என்று என்னுடைய உற்சாகத்தில் பங்கெடுத்தார்.

சூரியனைப் பற்றி பேசியபடியே ஈசூரை அடைந்தோம். பாலாற்றின் செக்டேம் இருக்கும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வயலில் நடந்து டேமை அடைந்தோம். தண்ணீர் அணையிலிருந்து கொஞ்சமாக வழிந்து கொண்டிருந்தது. மதகு இருக்கும் மேடையில் கைப்பிடி இருக்கிறது என்ற காரணத்தினால் மட்டுமே நடந்து சென்று ஓரத்தில் நின்றேன். 





மீன் பிடிப்பவர்கள் பரிசலில் தொலைவில் தெரிந்தார்கள். வலையை மெதுமெதுவாக இழுத்துக் கொண்டே பரிசிலையும் செலுத்திக் கொண்டு வந்தனர்.ஜிலேபி மீன் கிடைச்சா பரவாயில்லை என்றேன் கணவரிடம். யேய் அது ஜிலேபி மீன் இல்லை மொசாம்பிக் திலேப்பியா தான் அதோட பேரு. நம்ம ஊர்ல திலேப்பியாங்கிற பேரு ஜிலேபி மீனா மாறிடுச்சு என்று சிரித்தார். ஆனாலும் எனக்கு ஜிலேபி மீன் என்று சொல்வது தான் மகிழ்ச்சியை தந்தது.  பரிசலை பார்க்கும் போது அதில் செல்ல ஆசையாகத் தான் இருந்தது. ஆனால் அதனுடைய பாதுகாப்பின்மையை நினைத்து பயமும் இருக்கிறது. பிராமணர்கள் ஆற்றையோ , கடலையோ கடக்க கூடாது என்று அவர்களின் சமூகத்தில் விதி இருந்ததன் உண்மையான தாற்பரியம் புரிந்த போது புன்னகை வந்தது. 


பாலாற்றில் இங்கே அணையால் தேக்கி வைக்கப்படுவதால் தண்ணீர் நிரம்பியுள்ளது. பரிசல் மெதுவாக கரையை நெருங்கியது. நாங்களும் அதே வேகத்தில் கரையை நெருங்கினோம். மீன் வலையை எடுத்து கரையில் விரித்திருந்த சேலையில் போட்டுவிட்டு , பரிசலை கவிழ்த்தனர். தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.  சேலையில் போட்ட மீன் வலைகளை  மூட்டையாக கட்டிக்கொண்டு தலையில் வைத்தபடி அணையில் மேலேறி வயல்வெளியை தாண்டி கரைக்கு வந்தனர். நாங்களும் அவர்களையே பின் தொடர்ந்தோம். 

மீன் வாங்குவதற்காக ஏற்கனவே சிறிய அளவிலான கூட்டம் கூடியிருந்தது.தார் பாயை விரித்து பெரிய கெண்டை மீனை எடுத்து முதலில் வைத்தார் மீனவர். மீன்களுக்கான பெயர் நிச்சயம் காரணப்பெயர் மட்டுமே என்று கெண்டை மீனை பார்த்தபோது தோன்றியது. அதன் பிறகு மெதுவாக வலையை நீவி நீவி எடுத்துக் கொண்டே வந்து நிறைய ஜிலேபி மீன்களை தார்பாயில் போட்டபடியே வந்தார். ஜிலேபி மீன்கள் துள்ளியபடியே இருந்தன. ஒரு கணம் பாவமாக இருந்தாலும் , நமக்கு புரோட்டீன் வேண்டுமே என்று உடனடியாக மனதை தேற்றிக் கொண்டேன். என் மனவோட்டத்தை புரிந்து கொண்டவர் போல கணவர் ஒரு புன்னகையைத் தந்தார். 


மீனின் விலையை கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவர் , சத்தமாக 
எவனோ அணை கட்டிவிட்டா , அதுல மீனை புடிச்சிட்டு நல்லா காசு சம்பாதிக்கரீங்கடா என்றார். மீனவர்களில் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். இதுவே சென்னை மீனவர்கள் என்றால் நீயெல்லாம் மீனே வாங்க வேண்டாம். அப்படியே போயிரு என்று பதிலுக்கு பேசியிருப்பார்கள். ஆனால் எளிய இருளர் இனத்தை சேர்ந்த மீன் பிடிப்பவர்கள் அமைதியாகவே இருந்தனர். அதற்கு பதிலாக கூட்டத்தில் இருந்த இன்னொருவர் ஏம்பா, பரிசல்ல போயிட்டு ராத்திரில வலைய போட்டுட்டு வெடிய வெடிய காத்திருந்து தண்ணில இருந்து கொண்டு வர்றாங்க , உன்னால முடியுமா என்று கேட்டு பேசலானார். 

தங்களுடைய அதிகாரத்தை எவர் மீது செலுத்த இயலும் என்று ஒவ்வொரு இனமும் , ஒவ்வொரு தனிமனிதனும் முயன்று கொண்டே இருக்கின்றனர். 

நாங்கள் ஜிலேபி மீனை வாங்கிக்கொண்டு  மீனவர் கேட்ட பணத்தையே கொடுத்து வாங்கி கொண்டு திரும்பிய போது,  அவர்களுக்கு ஆதரவாக கூட்டத்தில் பேசிய அதே ஆசாமி , பரிதாபமான குரலில் பாவம்மா மீனவங்க பாத்து கொடுங்க என்று இறைஞ்சினார்.இதற்கும் நாங்கள் மீன்பிடித்து வந்தவர் கேட்ட பணத்தையே கொடுத்த போதும் இந்த ஆசாமி ஏன் இப்படி பேசுகிறார் என்று வியப்பாகவே இருந்தது.  அவருடைய இறைஞ்சும் குரலே எரிச்சலூட்டியது. ஆனால் மீன் பிடித்து வந்த மீனவர்களின் குரல் இயல்பாக இருந்தது. ஏன் நமக்கு இறைஞ்சுபவர்களின் குரல் எரிச்சலை அளிக்கிறது ? உழைக்கும்  மக்கள் நிமிர்வாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொண்டு அவர்களின் உழைப்பையே உறிஞ்சி வாழும் மனிதர்களின் குரலில் இறைஞ்சலே இருக்கிறது. உழைக்காத மக்களின் இறைஞ்சல் எரிச்சல் தருவதே. உண்மையாக உழைப்பவர்கள் எப்போதும் யாரிடமும் எதற்காகவும் இறைஞ்சத் தேவையே இருக்காது. ஒருவேளை கடவுளுக்கு கூட தன்னிடம் இறைஞ்சுபவர்களின் குரல் எரிச்சலையே தருமோ? இதை உணர்ந்து தான் பாரதியார் அனைத்து தகுதிகளையும் கொண்ட எனக்கு நான் கேட்பதையெல்லாம் அருள்வதில் உனக்கென்ன தடையுள்ளதோ என்று பராசக்தியிடம் கர்வத்துடனே கேட்டார் போலும்.

_ Manobharathi Vigneshwar