1947- இல் வெளியான ஆங்கில மொழி திரைப்படம் ஒன்றை பார்த்தேன். ஷேர் மார்க்கெட்_இல் இருக்கும் தந்தை, அவரது மனைவி மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் இவர்களின் வாழ்வில் நடக்கும் உரையாடல்கள், விவாதங்கள், மகிழ்ச்சியான தருணங்கள், வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் இவற்றை மட்டுமே கொண்டு ஒரு மனதிற்கு இனிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் .
ஞானஸ்தானம் எடுக்காமல் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து வரும் தந்தை, அனைத்திலும் கெடுபிடியாக நடந்து கொள்கிறார். அவருடைய அனைத்து செயல்களையும் புரிந்து கொண்டு அதற்கு தகுந்த படி வாழ்வை கொண்டு செல்லும் மனைவி, சில நேரத்தில் அவர் அளவு மீறி சத்தமிடும் பொது, ஷ்ஷ்ஹ் என்ற ஒரு சத்தம் மனைவியிடம் வந்ததும் அப்டியே அமைதியாக மாறிவிடுகிறார் . குழந்தைகளுக்காக அனைத்து தேவைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்கும் தந்தை. மற்ற நான்கு ஆண் பிள்ளைகளை கையாள்வதை போலவே கணவனையும் கையாள்கிறார் மனைவி.
கோபமாக எதையோ பேசிவிட்டு பியானோவை வாசிக்க ஆரம்பிக்கும் கணவர் அதன் மேலிருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த்ததும் திரும்பவும் அவர்மேல் காதல் கொண்டு, மெல்லிசை ஒன்றை வாசித்து பாடுகிறார்.
ஏதோ ஒரு தருணத்தில் தங்களுக்கு திருமணம் ஆகி இருபது ஆண்டுகள் முடிவடைந்தது தெரிய வரும் பொது, கணவர் மனைவியை பார்த்து காதலோடு உன்னை நான் வாழ்விலிருந்து காப்பாற்றி இருபது வருடங்களாகின்றன என்று கூறுகிறார். அனைத்து கணவர்களும் தங்களுடைய மனைவிகளை ஏதோ வரு வகையில் அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து காப்பாற்றிய மீட்பராகவே தங்களை எண்ணிக் கொள்கிறார்கள் எனும் போது மெல்லிய புன்னகை வந்தது. அது பெண்களுக்கு இயல்பாகவே ஒரு மனமகிழ்ச்சியை கொடுக்கும். இந்த இடத்தில பெமினிஸ்ட-காக இருப்பவர்களுக்கு கோபம் வரலாம் . ஆனால் இதை போன்ற சில உரையாடல்கள் சிறு சிறு மகிழ்ச்சியை தரும் என்று உணர்ந்தவர்களே வாழ்வை ரசித்து வாழ முடியும்.
பிள்ளைகள் தங்களுக்குள் தந்தை ஞானஸ்தானம் எடுக்காமல் இருப்பது என்ன பிரச்சினையை கொடுக்கும் என்று பேசி கொள்வது, அதை நினைத்து வருந்துவது, என்று அவர்களுடைய உலகமும் காண்பிக்கப்பட்டுள்ளுது .
தன் மனைவி உடல் நலம் குன்றி இருக்கும் போது கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்யும் பாதிரியார் , அந்த பாவியை மன்னியும் என்று கூறும் பொது, கணவர் வெகுண்டெழுந்து, ஹே கடவுளே என் மனைவி பாவி இல்லை, அவள் மிகவும் நல்ல பெண்மணி, நாளை அவள் உடல் நலம் தேறி நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளுக்கே ஆணையிடுவதை பார்க்கும் போது என் கணவரும் இப்டியே தான் இருக்கிறார் என்று தோன்றியது . பாதிரியார் அங்கிருந்து அவசர அவரசமாக வெளியே சென்று விடுவார்.
தந்தை ஞானஸ்தானம் எடுக்கிறாரா இல்லையா என்பதை மிகவும் அழகாக இறுதி வரை கொண்டு சென்றிருக்கிறார்கள். இப்போது வெளியாகும் வன்முறை சார்ந்த படங்களிருந்து நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள இதை போன்ற திரைப்படம் கைகொடுக்கும். மனநிறைவான மகிழ்ச்சியான படம்.
- Manobharathi Vigneshwar