கருந்துளையை ஆராய்ச்சி செய்வதற்காக உலகில் இரண்டாவதாக ஏவுகணையை அனுப்பியுள்ளது இஸ்ரோ. ஜனவரி முதல் தேதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக Xpo SAT அனுப்பப்பட்டது. சந்திராயன் - III , ஆதித்யா - L1 ஆகியவற்றின் launch -ன் போதும் பதிவு செய்ய முயன்றோம். இணைப்பு வெளியான ஐந்து நிமிடத்திற்குள் அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த முறையும் இணைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. எவ்வளவு வேகமாக செயல்பட முடியுமோ அவ்வளவு துரிதமாக செயல்பட்டு பதிவு செய்தோம். நம்முடைய அடையாள அட்டை , மற்றும் நம்மை பற்றிய தனிநபர் விபரங்கள் , வாகனத்தில் சென்றால் அவற்றின் பதிவு எண் , இவை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டியவை. இதற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை.
ஹரிகோட்டா , சென்னையிலிருந்து 2 மணி நேரப் பயணம். காலை ஒன்பது மணிக்கு லான்ச், காலை 5.30 - 8.30 வரை உள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும். நாங்கள் வீட்டிலிருந்து அதிகாலை 4.00 மணிக்கு கிளம்பி அங்கே செல்லும் போது 6.15 ஆகியிருந்தது. முதன்மை சாலையிலிருந்து சூலூர்பேட்டா செல்லும் சாலைக்கு இறங்கி , ஹரிகோட்டாவை நோக்கி பயணமானோம். சூலூர்பேட்டா என்பது சிறு நகரம். அங்கிருந்து இருபது கிலோமீட்டரில் ஹரிகோட்டா. சூலூர்பேட்டா ஜங்கசனை கடந்து சாலை நேராக இஸ்ரோ செல்லும் வழிக்கு செல்கிறது. வழிநெடுக சிறு சிறு கிராமங்கள் , அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரிதாக நெல்வயல்களும் காணப்பட்டன. பேக்வாட்டர் முழுதும் சூழந்த பகுதியிலிருந்து நடுவே சாலை இஸ்ரோவிற்கு சென்றது. இருபுறமும் கடல்நீர் சூழ்ந்திருக்க நடுவே காரில் பயணிப்பது குதூகலத்தை தந்தது. நிறைய பறவைகளை பார்க்க முடிந்தது. பிங்க் பிளமிங்கோவை தவிர வேறு எந்த பறவையையும் அடையாளம் காணத் தெரியவில்லை எங்களுக்கு. பறவைகளை பார்க்கும் குழுவில் கலந்து கொண்டால் மட்டுமே அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என தோன்றியது.
இவ்வளவு உப்பு நீர் வந்து செல்லும் இடம் ஏன் உப்பு வயல்கள் இல்லை என்று கேள்வி தோன்றியது. தூத்துக்குடியில் பார்த்த உப்பு வயல்கள் நினைவுக்கு வந்தது. உப்பு பூத்திருப்பதை அங்கே தான் முதன்முதலில் கண்டேன். கிரிஸ்டல்களாக மலர்ந்த உப்பு மஞ்சரி. செவ்வக வடிவ ஓட்டு வீட்டின் மேற்கூரை போல உப்பை சேகரித்து வைத்திருந்தார்கள். ராய்மாக்சம் அவர்களின் உப்பு வேலி நினைவிற்கு வந்தது. இவ்வளவு எளிதாக நம்மிடம் கிடைக்கும் உப்பை கூட, நமக்கு கிடைக்கவிடாதபடி நடந்து கொண்டார்களே என்று அங்கலாய்ப்பாக இருந்தது. உப்பை கையிலெடுத்த போது காந்தியுடன் தண்டி யாத்திரைக்கு உடன் சென்று உப்பு எடுப்பதாக கற்பனை எழுந்தது. புத்தகங்கள் படிப்பதன் தலையாய பயன்களில் ஒன்று வரலாற்றில் எப்போதோ நிகழ்ந்த ஒன்றின் ஆன்ம எழுச்சியை நிகழ்கணத்தில் உணர்ந்து அதில் திளைப்பதே என்று உணர்ந்தேன் . இரண்டு கிலோ மீட்டர் நீர்ப்பரப்பிற்கு நடுவே பயணித்தோம்.
இஸ்ரோ வளாகத்தில் நுழைந்ததும் , லான்ச் கேலரிக்கு செல்லும் வழி அங்கே இருக்கும் காவலர்களால் காட்டப்பட்டது. சிறு சிறு கிராமங்கள் தென்பட்டன. நம்முடைய பக்கம் 3 தெருக்கள் சேர்ந்தது தான் அங்கே சிறு கிராமமாகவே இருக்கின்றன.
அங்கேயே ஸ்பாட் ரெஜிஸ்ட்டேரஷனும் இருந்தது. பார்க்கிங் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. ராக்கெட் லான்ச்சை பார்ப்பதற்கு இவ்வளவு கூட்டம் இருக்குமென்பதை நான் நினைத்தே பார்க்கவில்லை. சிறு குழந்தைகளை கூட தோளில் போட்டுக்கொண்டு திருவிழாவிற்கு செல்லும் மனநிலையில் நிறைய பேர் இருந்தனர். நிறைய பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் தனியார் இன்டர்நேஷனல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே அதிகம். அவர்கள் அணிந்திருந்த டி_ சர்ட்டில் இருந்தும் பள்ளி வாகனங்களிலிருந்தும் அறிந்து கொண்டோம். காரை நிறுத்திய பிறகு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து அங்கே அடையாள அட்டையையும் , பதிவு செய்த சீட்டையும் காண்பித்து இஸ்ரோ கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்தோம். திரும்பவும் பாதுகாப்பு பரிசோதனைகள் முடிந்த பிறகு உள்ளே சென்றோம். இஸ்ரோவின் பயணத்தில் இருந்த அனைத்துமே மாடல்களாக வைக்கப்பட்டிருந்தன.
நம்முடைய அறிவியலாளர்களால் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட இன்டன்ஜீனியஸ் ராக்கெட் என்ஜின் , விகாஸ் என்ஜினை பார்த்த போது ராக்கெட்டரி புத்தகமும் நம்பி நாராயணன் அவர்களின் நினைவும் எழுந்தது. தீ அவனை எரிக்கவில்லை அறிவே சார்வாகனை எரித்தது என்பது ஏதோ வரலாற்று காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்தில் நம்பி நாராயணன் அவர்களின் வாழ்விலும் அதுவே நடந்திருக்கிறது. அந்த எரிநிகழ்வில் முக்கியப்பங்கு வகித்தது பொதுமக்கள் தான். சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வது என்பதும் , தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டதால் அவரையும் , அவருடைய குடும்பத்தினரையும் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற உரிமையை எடுத்துக் கொண்டு தேவையற்ற செயல்களில் இறங்கிய பொதுமக்களை நினைத்து வெறுப்பே வந்தது. கூட்டமாக சென்று கொலை செய்தால் அதில் யாரையும் தண்டிக்க இயலாது என்ற சட்டம் தற்போது mob lynching க்கு மரண தண்டனை என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்றே யாரோ ஒரு குறிப்பிட்ட நபரை தாக்குவதற்கு இப்படி கூட்டமாக கலந்து கொள்ளும் மக்களுக்குமே தண்டனை என்று சட்டம் வர வேண்டும் என்று தோன்றியது. எத்தனையோ கோடி ஊழல் செய்த அரசியல்வாதியை தாக்குவதற்கு எந்த மக்கள் கூட்டமும் ஒன்று சேர்வதில்லை. அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஈடுபட்ட பாலியியல் குற்றங்களை தண்டிக்க மக்கள் கூட்டம் சேர்ந்து தாக்குவதில்லை. அவர்களை சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதில்லை. ஏனெனில் அரசியல்வாதிகள் ஆட்சியில் , அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு அவர்களுடைய தயவு எப்போதுமே தேவைப்படுகிறது. ஆனால் யாரோ அறிவியலாளர்கள் , அரசாங்க ஊழியர் , வங்கி அதிகாரிகள், மருத்துவர்கள் , ஆசிரியர்கள் , எழுத்தாளர்கள் என்று அதிகாரமற்றவர்கள் அறிவை மட்டுமே பயன்படுத்தி வாழ்க்கையை எதிர்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கிளம்பும் மக்களின் மனநிலையில் அடிப்படையில் இருப்பது பொறாமையும் , சுயநலமும் மட்டுமே. நம்பி நாராயணன் மீதிருந்த வழக்கை வாதாடி மீண்டு வெளிவந்து விட்டார். அதில் அவருடைய துறை சார்ந்து அவருக்கு பெரிய இழப்பு என்றாலும், பொது மக்களின் செயல்களால் அவருடைய சமூக வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒருவனின் அறிவு அவன் வாழ்க்கையை அழிப்பது என்ன வகையான ஊழ் என்று தெரியவில்லை.
மணி 9.05 நெருங்கிய போது , திரும்பவும் ஸ்கிரினில் ராக்கெட் காண்பிக்கப்பட்டது. 9.10 க்கு லான்ச் செய்யப்படும் என்றும் , அதை சார்ந்த எவையெல்லாம் தயாராக இருக்கின்றன என்றும் அறிவிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. கவுண்ட்டவுன் ஆரம்பமாகியது. கேலரியில் இருந்த அனைவருமே சொல்ல ஆரம்பித்தனர். 9,8,6,5,4,3,2,1 என்று வந்ததுமே ராக்கெட் லான்ச் செய்யப்பட்டது. வானில் நீள்வட்ட சூரியன் போல எரிந்து மேலே சென்று கொண்டே இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. பார்வையாளர்கள் பரவசமாக இருந்தார்கள், சில கணங்கள் அவ்வளவு கூட்டமும் மிக நிசப்தமாக இருந்தது. ராக்கெட் கண்ணை விட்டு மறைந்ததும் தான் பாரத் மாதா கி ஜே என்றும் , ஜெய்ஹிந்த் என்றும் முழக்கங்கள் வந்து கொண்டே இருந்தன. ராக்கெட் சென்ற பாதை வெண்ணிற புகையாக மாறி பாம்பை போல காட்சியளித்தது. வெண்ணிற நாக பிராஜபதியை நினைத்துக் கொண்டேன். விஞ்ஞானிகளின் கேலரி காட்டப்பட்டது. அனைவரின் முகத்திலும் புன்னகை , கை குலுக்கல்களும், புன்னகையை பரிமாறிக் கொள்ளுதலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. திரும்பவும் அவரவர் இருக்கையில் அமர்ந்து அடுத்த கட்ட வேலைகளை நோக்கி கொண்டிருந்தனர். 9.40 வரையிலும் ஒவ்வொரு கட்டமாக நிகழ்ந்து இறுதியாக ராக்கெட் மட்டுமே விண்ணில் சென்று கொண்டிருப்பதை உறுதி செய்த பின் விஞ்ஞானிகள் எழுந்து நின்றனர்.
விஞ்ஞானிகளின் கூட்டு உருவாக்கத்தில் புனையப்பட்ட கவிதை ஒன்று பேருண்மையை தேடிச் செல்கிறது என்று எண்ணிக் கொண்டேன். இந்த வருட புத்தாண்டு இஸ்ரோ Xpo Sat _ உடன் தொடங்கியது. வருடம் முழுக்க 50 செயற்கை கோள்கள் அனுப்புவதாக இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- Manobharathi Vigneshwar