Skip to main content

செட்டிநாடு.....

 


எந்த நீர்மையின் மீதிருந்த வெறுப்பினால் தலைமுடி கூட கருகும் வெயில் பிரதேசத்தில் வாழ முற்பட்டார்கள் ?  

மிகப் பெரிதான
வீடுகளின் அமைப்பு  எதையோ நோக்கி அறைகூவல் விடுப்பது போலவும் அவற்றில் உறையும் ஆழ்ந்த அமைதி மனதை நிலை குலையச் செய்வது போலவும் ஒரே சமயத்தில் இரு வேறு உணர்வுகளை தந்தது.

அனைத்து வீடுகளும் ஒரே காலக்கட்டத்தை சார்ந்தவை. 
ஒரு  சமூகத்தின் மாபெரும் எழுச்சி. அச்சமூகத்தின் முன்னோர்களின் ஆழ்கனவுகள்.  

எவ்வளவு பெரிய சரிவை சந்தித்திருந்தால் இவ்வளவு உயரம் எழும்பி வரும் ஆன்ம வல்லமையை அச்சமூகம் பெற்றிருக்ககூடும் ?

வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு தெருவில் ஆரம்பித்து இன்னொரு தெருவில் தங்களை நிறைவு செய்திருந்தன.  புழுதி பறக்காத அகண்ட தெருக்கள்.  கழிவுநீர் செல்லும் வழி எதுவென்றே தெரியாத அளவிற்கான கட்டிட நுட்பம்.  ஒவ்வொரு வீட்டின் கீழ்தளத்திலும் குதிரை வண்டிகள் நிற்பதற்கான அறைகள் கதவுகளுடன் இருந்தன. முதற்தளத்தில் தான் வீடுகளே ஆரம்பிக்கின்றன.எந்த ஆழத்திலிருந்து தப்புவதற்காக இவ்வளவு உயரமான வீடுகளை கட்டமைத்தனர் ?  


ஒவ்வொரு வீட்டிலும் முன் வாயிலில் இடதுபுறம் கிணறு இருக்கிறது. தெளிவாக திட்டமிட்டு கட்டப்பட்ட நகரை போன்ற கிராமங்கள்.  அரை ஏக்கரில் கட்டப்பட்ட ஒவ்வொரு வீடும் சிறு குன்றுகள் போல தோன்றியது. 

ஊரில் நாய்களின் குரைப்பு சத்தம் ஏதும் கேட்கவில்லை. கை விடப்பட்ட புராதான நகரில் நடப்பதை போல தோன்றியது. தெருவில் நடந்து மனம் மூர்ச்சையடைந்து கால்கள் வலிக்கும் போது தான் உணர்ந்தேன் இங்கே தெரு நாய்களே இல்லை என்பதை. 

தற்போது குதிரை வண்டிகள் நிற்பதற்காக கட்டப்பட்ட அறைகள் மெக்கானிக் கடைகளாகவும் , தையல் கடைகளாகவும் , பாத்திரங்கள் விற்கும் கடைகளாகவும் மறு பரிமாணம் எடுத்திருக்கின்றன. எளிய மனிதர்களின் தொடக்கத்திற்காக வழிவிட்ட குதிரை வண்டிகளின் கதை என்னவாக இருக்கும் ? 

சூரிய ஒளி குறைந்து வந்த போது அனைத்து வீடுகளின் வாயிலிலும் நீர் தெளித்து கோலமிடப்பட்டது. பூட்டியிருந்த வீடுகளில் கூட ஒரு பெண் கோலமிட்டு முடித்தபடி நடந்து சென்றார். குடிபெயர்ந்த வீடுகளை போல தோற்றமளித்த தெரு சட்டென்று மங்கலமாக மாறியது. மனிதர்களின் அருகாமையை உணர்த்தும் சாட்சியாய் இருக்கிற அனைத்துமே மங்கலம் தானே !?





திறந்திருந்த ஒன்றிரண்டு வீடுகளின் வாயிலில் வயதான பாட்டிகள்  நெற்றியில் தீருநீறு ஒளிவிட செட்டிநாட்டு நூல் சேலையை போர்த்தியபடி அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். டேப்ரிக்கார்டரை கூட தற்போது பழம் பொருள்களுக்கான கடையில் மட்டுமே பார்க்க முடியும் என்ற  காலத்தில் 
ஏதோ ஒரு வீட்டை பார்த்துக் கொள்ளும் வேலை செய்யும் தாத்தா  எம்.ஜி.ஆர் பாடல்களை டேப்ரிக்கார்டரில் உரக்க கேட்டுக் கொண்டிருந்தார்.  

இரவின் மணம் வந்த போது ஈசல்கள் பறக்க ஆரம்பித்தன. முதலாளித்துவத்தின்  சாட்சியாய் நின்றிருக்கும்  கட்டிடங்களின் வெறுமையை மனதில் சுமந்தபடி திரும்பினேன். 

இப்போதிருக்கும் வெறுமையை துடைத்தெறிவதற்கு இன்னமும் அதிக ஆன்ம வல்லமை தேவைப்படுமோ !?

_ Manobharathi Vigneshwar